360: உ.பி. தேர்தல் களத்தில் உஷ்ணத்தை எதிர்கொள்ளும் பாஜக

By செய்திப்பிரிவு

பெண்களுக்கு மரியாதை செய்யும் நவீன் பட்நாயக்

பிஜூ ஜனதா தளம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 33%  பேர் பெண்கள் என அறிவித்ததன் மூலம் வரவேற்பைப் பெற்ற ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், பெண் வேட்பாளர்களில் ஒருவரான பிரமீளா பிஷோயியை (69) ஹெலிகாப்டரில் பிரச்சாரத்துக்கு அழைத்துச்சென்று ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். இதுதான் பிரமீளாவுக்கு முதல் ஹெலிகாப்டர் பயணம். “ஹெலிகாப்டரில் பயணித்தபோது ஒரு நொடிகூட எனக்கு அச்சம் ஏற்படாமல் பார்த்துக்கொண்டார்” என்று புகழ்பாடுகிறார் பிரமீளா. அது மட்டுமல்ல, தான் மூன்று முறை போட்டியிட்டு வென்ற ஆஸ்கா மக்களவைத் தொகுதியில், இந்த முறை பிரமீளாவை நிறுத்தியிருப்பதன் மூலம் பலரது புருவத்தை உயரச்செய்திருக்கிறார் நவீன்.

சர்ச்சையைக் கிளப்பும் மம்தா திரைப்படம்

தேர்தல் நேரத்தில் அரசியல் தலைவர்கள் குறித்து உருவாகும் திரைப்படங்கள் சர்ச்சைக்குள்ளாகின்றன. மோடி குறித்த திரைப்படத்துக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கும் நிலையில், வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நினைவுபடுத்தும் ‘பாகினி: பெங்கால் டைக்ரஸ்’ எனும் திரைப்படம் உருவாகியிருக்கிறது. வங்கத்தில் மே 7, 12 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடக்கவிருக்கும் சூழலில், மே 3-ல் இந்தப் படத்தை வெளியிட, படக் குழு திட்டமிட்டிருக்கிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. எனினும், இது மம்தா பானர்ஜியின் வாழ்க்கைப் படமல்ல; அவரது வாழ்க்கைப் போராட்டத்தின் தாக்கத்தில் உருவானது என்கிறார்கள் படக் குழுவினர். மேடை நாடகங்களில் மம்தா பாத்திரத்தில் நடித்த ரூமா சக்கரவர்த்திதான் இந்தப் படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

உ.பி. தேர்தல் களத்தில் உஷ்ணத்தை எதிர்கொள்ளும் பாஜக

உத்தர பிரதேசத்தில் 2014 மக்களவைத் தேர்தலின்போது சந்திக்காத பல சவால்களை பாஜக இப்போது சந்தித்துவருகிறது. 2014 தேர்தலின்போது அதற்கு சில காலம் முன்புதான் நடந்திருந்த முசாபர்நகர் கலவரம், ஐந்தாண்டு அகிலேஷ் சிங் ஆட்சியில் நடந்திருந்த குளறுபடிகள், சமாஜ்வாதியின் குடும்ப அரசியல் என்று பல்வேறு காரணிகள் சார்ந்து மக்களிடம் அதிருப்தி உருவாகியிருந்தது. இது பாஜகவுக்குச் சாதகமாகவும் அமைந்தது. இன்றைக்கு நிலைமை அப்படி இல்லை. ‘உத்தர பிரதேசத்தை குஜராத் ஆக்குவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த மோடியும் யோகியும் மாநிலத்துக்குச் செய்தது என்ன? கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய நிலுவையைக்கூட அரசால் பெற்றுத்தர முடியவில்லை’ என்று எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்வி மக்களிடம் பெரும் ஆரவாரத்தைப் பெறுகிறது. 2014-ல் பாஜக வேட்பாளர்கள் அனைவருமே கிட்டத்தட்ட புதுமுகங்கள். மக்கள் தயக்கமின்றி வாக்களித்தனர். இந்த முறை அவர்களில் பலர் உள்ளூரில் அதிருப்தியை எதிர்கொள்கின்றனர். சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி பெரும் தாக்கத்தை உண்டாக்கியிருக்கும் நிலையில்,  மோடியை மட்டுமே இப்போது கட்சி நம்பியிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

தமிழகம்

9 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்