அண்ணாவின் நேர்வழிப் பயணம்

By மு.நாகநாதன்

மாற்றுக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் அண்ணா.

அறிஞர் அண்ணா மறைந்து 45 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அரசியலில் அவர் காட்டிய நெறிமுறைகள் முன்பு எப்போதையும்விட இன்றுதான் மிகவும் அவசியமாக இருக்கின்றன. முன்பைவிட இன்றுதான் அண்ணா மிகவும் தேவைப்படுகிறார்.

1931-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயிலும் போது, அவர் பெற்ற அரசியல் உணர்வும், கையாண்ட தன்னிகரற்ற தமிழ், ஆங்கில மொழித் திறனும், ஆளுமை யும் வாழ்நாள் இறுதிவரை ஒளிர்ந்தன. கல்லூரியில் நடைபெற்ற ஆங்கிலக் கட்டுரைப் போட்டியில் ‘மாஸ் கோவில் கொந்தளிக்கும் மக்கள் அணிவகுப்பு’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை ஒரு இலக்கியமாகவே திகழ்கிறது. அந்தக் கட்டுரையில், ‘‘மூலதனம் இன்றியமை யாதது. ஆனால், முதலாளித்துவம் அப்படியன்று. மூலதனம் என்பதுகூட, பென்சான் கூற்றுப்படி, ‘சேமிக்கப்பட்டுள்ள உழைப்பு’ என்பதே. சமுதாயத்தில் நிலவும் ஏழை, செல்வந்தர் என்கிற பிரிவுதான் தொடர்ந்துவரும் கொடுமைகளுக்கு மூல காரணம். தேவைக்கு அதிகமான செல்வக் குவிப்பு ஒரு புறமும், ஏழ்மை ஒரு புறமும் உள்ள காட்சியை நாம் பார்க்கிறோம் அல்லவா?” என்று தான் எழுப்பிய கேள்விக்கு வாழ்நாள் முழுவதும் விடை தேடினார் அண்ணா.

பெரியாரின் பாசறையில்…

இளைஞர் அண்ணா, பெரியாருடன் ஏன் இணைந்தார் என்பதற்கு அவரது பதில்: “பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகள்தான் எனக்கு மிகவும் பிடித்தன. கல்லூரியை விட்டு வெளியே வந்ததும் அவரிடத்தில்தான் நான் சிக்கிக்கொண்டேன். அன்று முதல் அவர்தான் என் தலைவர்.” திராவிடர் கழகத்திலிருந்து 1949-ல் பிரிந்த பிறகும் பெரியார் அளித்த நல்லுணர்வுகளை அண்ணா தொடர்ந்து போற்றிவந்தார். 1967-ல் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு பெரியாரைச் சந்தித்து அண்ணா வாழ்த்து பெற்ற நிகழ்வு இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

அண்ணாவின் எழுத்திலும் பேச்சிலும் பகுத்தறிவு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, இடஒதுக்கீடு போன்ற கொள்கைகள் தொடர்ந்து இடம்பெற்றன. தனது சொற்பொழிவுகளில் அவர் கடைப்பிடித்த மொழி ஆளுமை இளைஞர்களை ஈர்த்தது. இலக்கியம், திரைப்படம், நாடகம், ஓவியம் போன்ற எல்லா துறைகளிலும் அவர் தனது முத்திரையைப் பதித்தார். அண்ணா ஒரே இரவில் திரைக்கதை, வசனத்தை எழுதி முடித்து, அப்படத்துக்கு ‘ஓர் இரவு’ என்று பெயரிட்டு, கலைப் பயணத்தில் பெரும் வெற்றியைக் கண்டார்.

பன்முக ஆளுமை

1949-ல் திமுக தொடங்கியபோது பொதுவாழ்வில் ஈடுபடுபவர்கள் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுக்கும் வகையில் ‘நல்லதம்பி’என்ற திரைப்படத்தை அளித்தார். கலைவாணர் நடித்த இந்தத் திரைப்படம், இன்றைய அரசியலுக்கும் பாடமாக அமைகிறது. அண்ணா திரைத் துறையிலிருந்து பொதுவாழ்வுக்கு வந்தவர் அல்ல. திரைத் துறையைச் சமூக-அரசியல் சீர்த்திருத்தத்துக்கு ஒரு கருவியாகப் பயன்படுத்திய அரசியல் அறிஞர் அவர். இதழாளர் என்கிற முறையில் குடியரசு, நம் நாடு, திராவிட நாடு, காஞ்சி உள்ளிட்ட பல தமிழ் ஏடுகளிலும், ஹோம் லேண்ட், ஹோம் ரூல் ஆகிய ஆங்கில வார ஏடுகளிலும் பன்னாட்டு அரசியல் தொடங்கி இந்நாட்டு அரசியல் வரை பல்துறைகளில் அவர் ஆங்கிலத்தில் வடித்தெடுத்த கட்டுரைகள், தலையங்கங்கள் இன்றும் ஆய்வுக்குரிய கலைக்களஞ்சியமாகவே விளங்குகின்றன.

தொலைநோக்குப் பார்வை

1960-ம் ஆண்டில் ஹோம்லேண்ட் ஆங்கில வார ஏட்டில், ‘குறைந்தபட்சம் ஆயிரம் கோடி ரூபாய் நிதியாவது சென்னை மாநிலத்துக்கு ஒதுக்குக’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் சமமான வளர்ச்சி, பணவீக்கத்தையும், பற்றாக்குறை நிதியாக்கத்தையும் சீர்செய்தல், மாநிலத்தின் தொழில் வளங்களை வளர்த்தெடுத்தல், வேளாண் துறையின் சிக்கல்களை நீக்குதல், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுதல், தூத்துக்குடி துறைமுகத்தைப் பெரிய துறைமுகமாக மாற்றுதல், கடலோரப் பகுதிகளில் கப்பல் தொழில்களைக் கட்டமைத்தல், சூரிய சக்தியைப் பயன்படுத்தல், நிலச் சீரமைப்புக்கும், சாலை அமைப்பதற் கும் பெரும் மக்கள் படையை உருவாக்குதல், சென்னை நகர வளர்ச்சிக்காகப் பெருநகர் திட்டத்தை உருவாக்குதல் ஆகியன அண்ணா முன்மொழிந்த முன்னோடித் திட்டங்களாகும். இந்தக் கட்டுரையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ‘அனைவரையும் உள்ளடக்கும் திட்டம்’(இன்க்ளூசிவ் பிளான்) என்கிற புதிய கருத்தை முன்மொழிந்தார். 11-ம் ஐந்தாண்டுத் திட்டத்தில் (2007-12) ‘அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’(இன்க்ளூசிவ் குரோத்) என்ற கருத்துருவை இந்தியாவில் நடுவண் அரசு வலியுறுத்தியது. ஆழமான பொருளியல் சிந்தனையைத் தொலைநோக்குப் பார்வையோடு அண்ணா 1960-ம் ஆண்டிலேயே சுட்டிக்காட்டியது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

வீடு இருந்தால்தான் ஓடு

‘திராவிட நாடு’ என்ற பிரிவினைக்கான காரணங்களை அண்ணா நாடாளுமன்ற மேலவையில் 1962-ல் முன்மொழிந்தபோது, அனைவரும் அதிர்ந்துபோனார்கள். 1962-ல் இந்திய-சீனப் போரின்போது அண்ணா இந்தக் கோரிக்கையை நாட்டின் ஒருமைப்பாட்டைக் கருதிக் கைவிட்டார். “வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும்” என்று ஒரே வரியில் அளித்த விளக்கம் எல்லோரையும் சிந்திக்கத் தூண்டியது. இது போன்று அண்ணா எண்ணற்ற சொற்றொடர்களைத் தமிழுக்கு வழங்கியுள்ளார்.

1965-ல் ஆங்கில இதழொன்றுக்கு அளித்த பேட்டியில், “கூட்டாட்சி, மாநிலங்களுக்கு முழுமையான சுயாட்சி, அனைவருக்கும் சமஉரிமை போன்ற கொள்கைகளைத் திமுக முன்னிறுத்திப் போராடும்” என்றார். 1967-ல் ஆட்சி யமைத்த பிறகு, சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டல், சுயமரியாதைத் திருமணச் சட்டம் இயற்றல் ஆகிய முற்போக்கான நடவடிக்கைகளை மிகக் குறுகிய காலத்திலேயே அண்ணா மேற்கொண்டார்.

சொர்க்கத்தில் உறங்கும் ஆண்டவன்

1969-ல் தம்பிக்கு எழுதிய இறுதி மடலில், “மாநிலங்கள் அதிக அளவில் அதிகாரம் பெறத் தக்க விதத்தில் இந்திய அரசியல் சட்டம் திருத்தியமைக்கப்பட வேண்டும்” என்றும் அண்ணா வலியுறுத்தியுள்ளார். மேலும், “செல்வம் சிலரிடம் சென்று குவிந்திடுவது வெள்ளத்துக்கு ஒப்பானது, அது கொண்டவனையும் அழித்துவிடும், சமூகத்தில் வலிவற்றவரையும் அழித்துவிடும்… பணம் பெட்டியிலே தூங்குகிறது, பணக்காரன் பட்டு மெத்தையில் தூங்குகிறான். ஆண்டவன் சொர்க்கத்தில் தூங்குகிறான், இல்லாவிடில் ஏன் இத்தனை பிச்சைக்காரர்கள்” என்ற மொரேவியா நாட்டின் பழமொழியையும் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு அறிஞர் அண்ணா 1931 தொடங்கி 1969 பிப்ரவரி வரை தனது நிகரற்ற உரைகளில், எழுத்துகளில் பொதுவுடைமை, பகுத்தறிவு, இடஒதுக்கீடு போன்ற மானுட வளர்ச்சிக்கான அடிப்படைக் கூறுகளைத் தொடர்ந்து வலியுறுத்தினார். சீரான சிந்தனை, செறிவான சமூக நோக்கு, அதிகாரக் குவியல்மிக்க டெல்லிக்கு அடிபணிந்து போகாத ஆட்சிமுறை ஆகியவற்றை முன்னிறுத்தித் தமிழ்நாட்டுக்குச் சரியான தடம் அமைத்துக் கொடுத்தார். தன்னைக் கடுமையான முறையில் யார் பேசினாலும் ஏசினாலும் கவலை கொள்ளாமல் கொள்கை சார்ந்த நெறிகளுக்கு முன்னுரிமை அளித்தார். அதுதான் அவருக்கு வெற்றியை வழங்கியது.

தடைகளும் வளைகோடுகளும் நிறைந்த அரசியலில் வளைந்து கொடுக்காமல் நேரிய அரசியலுக்கு வித்திட்ட ஒரு சில இந்திய அரசியல் தலைவர்களில் அறிஞர் அண்ணா முதன்மை பெறுகிறார். தனது அறிவு மூலதனத்தால், நேர்மையால், எளிய வாழ்க்கையால், அயராத உழைப்பால், அர்ப்பணிப்பு உணர்வால், மாற்றுக் கட்சியினரையும் மதித்துப் போற்றிய அண்ணா மக்களாட்சி உணர்வுகள் மேலோங்கிய அரசியல் தடத்தில் நேர்க்கோட்டில் பயணித்தவர். எனவேதான், அவரது பார்வையும் பயணமும் இன்றைய அரசியலுக்கு மிகவும் தேவைப்படுகிறது.

- மு. நாகநாதன், மாநிலத் திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர், பேராசிரியர்.

தொடர்புக்கு: mnaganathan@netscape.net

அண்ணா பிறந்த நாள்: 15.09.1909

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

சினிமா

15 mins ago

தமிழகம்

5 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

18 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

20 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

51 mins ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்