அடேங்கப்பா அத்திப்பழம்’ ; பலம் தரும் அத்தி’ மகிமை!    

By செய்திப்பிரிவு

ஜெமினி தனா

நீண்ட நாள்களுக்கு பிறகு சந்திக்கும் நபரிடம்   “உங்களை  பார்க்கிறதே அத்தி பூத்த மாதிரி இருக்கே”…. என்று  சொல்வோம்.

அத்திப்பூக்கள் அபூர்வமா? அடிமரத்திலிருந்து உச்சி வரையில் மரத்தை ஒட்டியே காய்க்கும் என்பதால் சட்டென்று கண்களில் அகப்படுவதில்லை அவ்வளவுதான். காணாமல் பூ பூக்கும் கண்டு காய் காக்கும் அத்தியில்  நாட்டு அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி என பலவகைகள் உண்டு. அத்தி பார்ப்பதற்கு எலுமிச்சை அளவில் சற்று நீண்டு முட்டை போன்று இருக்கும். பழுத்த அத்தியில் உட்புறம் சிவப்பாக இருக்கும். ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே அத்திப்பழங்கள் அறுவடை  செய்யப்படுகின்றன.

அத்திப்பழ சத்துகள்:

    50கி. அளவுள்ள அத்திப்பழம் ஒன்றில் நார்ச்சத்து-5.8%, பொட்டாசியம் -3.3%  கால்சியம் -100மி.கி. இரும்பு -2.மி.கி. மாங்கனீஸ்-3%, கலோரி -2% வைட்டமின் பி 6-3% அளவு உள்ளது.  மற்ற பழங்களை விட அத்திப்பழத்தில் 2 முதல் 4 மடங்கு வரை தாது உப்புக்களும், சத்துக்களும் அடங்கியிருக்கின்றன. அதேபோன்று நார்ச் சத்துகளும் கால்சியமும் அதிக அளவு உண்டு. அத்திப்பழத்தை சாறாக்கி குடித்தாலும் உலர வைத்துச் சாப்பிட்டாலும் இதிலிருக்கும் சத்துக்களின் அளவு குறைவதில்லை.  அத்திப் பூக்களோடு அத்தி இலை, அத்தி வேர், அத்திப் பட்டை, அத்திப்  பால் அனைத்துமே மிகச் சிறந்த மருத்துவக்குணங்களைக் கொண்டது.

எப்படி சாப்பிடலாம்?

  அத்தி மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனினும் அத்திமரத்தைக் கண்டால் அதிலிருக்கும் அத்திப்பிஞ்சுகளைப் பறித்து பொரியலாக, கூட்டாகச் செய்து சாப்பிடலாம். 

அத்திப்பழங்கள் பெரும்பாலானவை சொத்தையாக இருக்கும். உள்ளிருக்கும் பழப்பகுதியை நுணுக்கமாக ஆராய்ந்தால் மெல்லிய புழுக்கள் இருக்கும். அதனால்தான் அத்திப்பழம் சொத்தைப்பழம் என்றும் சொல்வார்கள். சுத்தமான அத்திப்பழங்களைச் சாறாக்கி தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை கலந்து  குடிக்கலாம்.  இந்த சாறில் கல் உப்பு சேர்த்தும் பருகுவது உண்டு.

 விலை சற்று கூடுதலாக இருந்தாலும் பதப்படுத்தப்பட்ட  உலர் அத்திப்பழங்கள்  பல்வேறு நன்மைகளைத் தருகிறது. நாள்கணக்கில் கெடாமல் இருக்கும் இவை, நாட்டுமருந்துக் கடைகளிலும் தற்போது டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களிலும் கிடைக்கிறது.

பிணி நீக்கும் அத்திப்பழம்:

ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் தினமும் 3  வேளையும் வேளைக்கு ஒன்றாக உலர் அத்திப்பழம் ஒன்றைச் சாப்பிட்டு வந்தால் இரும்புச்சத்து  நிறைந்த அத்திப்பழத்தால்  ஒரே மாதத்தில் ஹீமோகுளோபின் அளவு 1 கிராம் வரை உயரும்.  கடுமையான ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களும், போதிய ரத்தமின்றி இருக்கும் கர்ப்பிணிகளும் உலர் அத்திப்பழத்தை தினமும் எடுத்துக் கொள்வது நல்லது.

மேலும் செரிமானப் பிரச்சினைகள் இல்லாமல், குடல்களின் இயக்கம் சீராக இருந்தால் மலச்சிக்கல் பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.  நாள் ஒன்றுக்கு நமக்குத் தேவையான நார்ச்சத்துகளை  மூன்றே மூன்று உலர்ந்த அத்திப்பழங்கள் கொடுத்துவிடுகின்றன.  உடலில் செரிமானத்தைத் தூண்டும் சக்தி அத்திப் பழத்துக்கு உண்டு. நீண்டகாலமாகத் தொடர்ந்து மலச்சிக்கல் பிரச்சினைகளில்  அவதிப்படுபவர்களுக்கு பக்கவிளைவுகள் இல்லாத அற்புத மருந்து உலர் அத்திப்பழம். கடுமையான ரத்த மூலம் இருப்பவர்கள்,  அத்திப்பிஞ்சுகள் கொண்டு கூட்டு, பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கப் பெறலாம்.

 சிறு குடல் பெருங்குடல்களில் தேங்கியிருக்கும் நச்சுகளால் சிலருக்கு புற்று நோய் ஏற்படுகிற அபாயமும் உண்டு. குடலில் தங்கியிருக்கும் நச்சுகளை நீக்கி, குடலை சுத்தமாக்குவதோடு உடலில் புற்றுநோய் செல்களைக் கட்டுப்படுத்தும் தரமான  ஆன்ட்டி-ஆக்சிடன்ட் சத்துகளையும் அதிகம் கொண்டிருக்கிறது  அத்திப் பழம்.

  சோடிய உப்பு அதிகமாகவும் பொட்டாசியம் உப்பு குறைந்தும் இருக்கிற வேளையில்தான் ரத்த அழுத்தம் அதாவது பிளட் பிரஷர் ஏற்படுகிறது.  உலர் அத்திப்பழத்தில்  பொட்டாசியம் அளவு அதிகமாகவும் சோடியம் அளவு குறைவாகவும் இருப்பதால் ரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கிறது. தினமும் உட்கொண்டால் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை நெருங்கவே நெருங்காது.

 நமது உடலின் எலும்புகளை வலுப்படுத்த  கால்சியம் மிக்க உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். கால்சியம் நிறைந்த உலர் அத்திப்பழங்கள்  எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்வதில் பெரும்பங்கு வகிக்கிறது.

  உலர் அத்திப்பழத்தில் கலோரியும், கொழுப்பும் குறைவாகத்தான் இருக்கிறது. உடல் எடையைக் குறைக்க கடுமையான டயட்டை பின்பற்றும்போது  சத்துக்களையும் இழக்க நேரிடும். ஆனால் சத்துக்களையும் இழக்காமல் உடல் எடையையும் குறைக்க அத்திப்பழம் மிகச்சிறந்ததாக டயட்டீஷியன்கள் தெரிவிக்கிறார்கள்.

அத்தி இலையை நிழலில் காயவைத்து பொடியாக்கி காற்றுபுகாத டப்பாவில் வைத்து, அரை டிஸ்பூன் தேனில் அரை டீஸ்பூன்  அத்திப்பொடியைக் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்பந்தமான நோய்கள் அண்டவே அண்டாது. வாய்ப்புண், ஈறு வீக்கம் தொடர்ந்து இருந்தால் அத்தி இலைகளை நீரில் கொதிக்கவிட்டு வாய் கொப்புளித்தால் நிவாரணம் பெறலாம்.

  சிறு துண்டுகளாக நறுக்கிய அத்திப்பட்டையை   நீரில் ஊறவைத்து  மறுநாள் குடித்தால்  மூட்டு வலி, வாதநோய் குணமாகும்.   அத்தி வேருக்கு தாய்ப்ப்பால் பால் நன்றாகச் சுரக்கச் செய்யும் வலிமை உண்டு. வெள்ளைப்படுதல், மேக நோய், பெரும்பாடு பிரச்சினை  இருக்கும் பெண்கள் இந்தப்  பாலை  வெறும் வயிற்றில் அருந்திவந்தால் அதிசயிக்கத்தக்க வகையில் நோய் கட்டுப்படும்.

   இதய நோய்கள், மூலம், சீரான கொழுப்பு, உடல் பலம், கல்லீரல், குடல் சுத்தம், நீரிழிவு, கருவுறுதல், ரத்த விருத்தி,  ஆண் மலட்டுத்தன்மை போக்குதல், வெண் புள்ளிகள் நீக்குதல்,  கரும்பித்தம் நீக்குதல் இப்படிப் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் ஆற்றலும் குணமும்தான் அத்திப்பழத்தின் தனி ஸ்டைல்!

   ஒரு தம்ளர் நீரில்  உலர் அத்திப்பழம்  மூன்றைப் போட்டு மறுநாள் காலையில் அத்திப்பழத்தை மென்று சாப்பிடலாம். லேசான இனிப்புச்சுவை கொண்டிருப்பதாலும் மெல்லும் போது ரவை போன்ற விதைகள் வாயில் படுவதாலும் குழந்தைகள் சாப்பிடுவதற்கு  விரும்பமாட்டார்கள்.  பாலில் அத்திப் பழத்தை பத்து நிமிடங்கள் ஊறவைத்து மிக்ஸியில் அடித்து  அத்திஷேக்  போல் செய்து குடித்தால் விரும்பிக் குடிப்பார்கள்.  

அத்திப்பூத்தாற் போல் அத்திப்பழத்தை பயன்படுத்தாமல், அனுதினமும் அத்திப்பழத்தை பயன்படுத்துவோம். பலம் பெறுவோம்!

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்