அட... கற்றாழையில் இவ்ளோ இருக்கா?

By செய்திப்பிரிவு

ஜெமினி தனா

கோடைக் காலத்தை குளுமையாக்கிக் கொள்வதற்கு, இயற்கை அள்ளித்தந்த வரப்பிரசாதம் கற்றாழை. கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும். முள் இருக்கும் பழத்தின்  உள்ளேதான்   இனிப்பு மிகுந்த பலாச்சுளை இருக்கிறது என்பது போல கூர்மையான சிறு சிறு முட்களைக் கொண்டிருக்கும் கற்றாழையில்தான் நம்மை வெப்பத்திலிருந்து தணிக்கும் குளுமையும், பிணியைத் தீர்க்கும் அருமருந்தும் அழகை அதிகரிக்கச் செய்யும் இயற்கை பூச்சும் புதைந்து கிடக்கிறது.

   ஆலோவேரா என்ற தாவரப்பெயர் கொண்ட சோற்றுக்கற்றாழைவின் தாயகம்,   ஆப்பிரிக்கா. சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய் கற்றாழை,  கருங்கற்றாழை, செங்கற்றாழை, ரயில் கற்றாழை, வெண் கற்றாழை, வரிக்கற்றாழை என பலவகையில் இருந்தாலும் பெரும்பாலும் சோற்றுக்கற்றாழை என்றுதான் சொல்லப்படுகிறது.

    இந்தியாவில் ராஜஸ்தான், குஜராத், ஆந்திரா மாநிலங்களிலும் தமிழ்நாட்டில் சேலம் மற்றும் தூத்துக்குடியிலும் கற்றாழை சாகுபடி பெருமளவில் செய்யப்படுகிறது. குர்குவா கற்றாழை, கேப் கற்றாழை, சாகோட்ரின் கற்றாழை என மூன்று வகை கற்றாழைகள் இங்கே சாகுபடி செய்யப்படுகின்றன.

  தண்ணீர் அதிகம் இல்லாத வறண்ட  வெப்பநிலையிலும் பல ஆண்டுகள் வாழும் செடி இது என்பதால் கிராமங்களில் மட்டுமல்ல தற்போது நகரங்களிலும் சோற்றுக்கற்றாழை விருப்பமாக வளர்க்கப்படுகிறது. அழகு சாதனப் பொருட்கள், மருந்துகள் போன்றவற்றைக்  கற்றாழையிலிருந்து தயாரித்துவருகிறார்கள். 

கற்றாழையில்  இருக்கும் சத்துகள்:

  கற்றாழை மனித உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் சக்தியைக் கொண்டிருக்கிறது. 75 விதமான புரதச்சத்துக்கள் கற்றாழையில் நிறைந்திருக்கின்றன. கற்றாழையில்  வைட்டமின் பி மற்றும் சி சத்துக்களும் தாது உப்புகளும்   நிறைந்திருக்கின்றன.  தொற்றுக்கிருமிகள் உடலில் ஆதிக்கம் செலுத்த வரும்போது அதை எதிர்த்துப் போராடும் சக்தியை  உடலுக்குத் தருவது கற்றாழைதான்.

சருமப்பராமரிப்புகளில் கற்றாழை:

   என்ன இருக்கிறது கற்றாழையில் என்பதை விட என்ன இல்லை என்று கேட்கக்கூடிய  அளவுக்கு உடலைக்  காப்பதில்  கற்றாழைக்கு நிகர் எதுவுமே இல்லை.  இயற்கை அழகைப் பராமரிக்க இயற்கை தந்திருக்கும் கொடை  சோற்றுக்கற்றாழை. அதிக  விலை கொடுத்து வாங்கும் அழகு க்ரீம்கள் தராத  செயற்கை அழகை இயற்கையாக கொடுத்துவிடும்  கற்பக விருட்சம் கற்றாழைச் சாறு என்றே சொல்லலாம்.

  கற்றாழை மடல்களை இரண்டாக வெட்டினால் நடுவில் இருக்கும் கூழ் போன்ற  சதைப்பகுதியே நுங்கு  என்றழைக்கப்படுகிறது.  சூரிய ஒளியோடு கலந்து வந்து கடுமையான வெப்பத்தை ஏற்படுத்தும்  காமா , எக்ஸ்ரே கதிர்வீச்சுகளின் விளைவுகளிலிருந்து சருமத்தை முழுவதும் காப்பதுதான்  கற்றாழை ஜெல். அதனால்தான் கற்றாழைச் சாறிலிருந்து சோப்புக்கட்டிகள், ஷாம்புகள், அழகுக்ரீம்கள் தயாரிக்கப்படுகின்றன. இயற்கையாகவே கற்றாழைச்சாறைப் பயன்படுத்தும்போதும் பலன் அதிகமாக இருக்கும்.

  முகப்பரு, வேனிற்கட்டி, தேமல், கண்களின் கீழிருக்கும்  கருவளையம், கழுத்துப் பகுதியில் காணப்படும் சுருக்கத்துடன் நிறைந்த கருமை நிறம், கரும்புள்ளி, தழும்புகள், வியர்வை துர்நாற்றம்,  பாத எரிச்சல், பாதவெடிப்பு என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான அழகு க்ரீம்கள் உண்டு. ஆனால் அனைத்தையும் தீர்க்கும் ஒரே க்ரீமாக கற்றாழை  ஜெல் செயல்படுகிறது.

   காலையும் மாலையும்  கற்றாழையில் உள்ள நுங்கு போன்ற சதைப்பற்றை எடுத்து முகம், கை, கால், கழுத்து பகுதிகளில் தடவி வந்தால் சருமம் பளிச்சென்று மின்னும்.  கருமை நிறம் மறையும்.  மாசுமருவற்ற முகத்தைப் பெறலாம். இரவு நேரங்களில்  பாதங்களில்  தடவிவந்தால் பாதம் பூப்போல் மிருதுவாக இருக்கும். ஓய்வு நேரங்களில் கண்ணின் இமை மேல் கற்றாழை நுங்கை வைத்து பாருங்கள். கண்கள் குளிர்ச்சியடைவதைக் கண்கூடாக உணருவீர்கள். சோர்வே இல்லாமல் எப்போதும்  புத்துணர்ச்சியோடு வளைய வருவீர்கள்.   

  கற்றாழை ஜெல்லை சாறாக்கி, தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கொதிக்க வைத்து, கூந்தலில் தடவினால் இள நரை மறையும்.  கண்டிஷனர் போடாமலேயே கூந்தல் மிருதுவாக பளபளக்கும்.  கோடையில் அதிக உஷ்ணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தலையில் கற்றாழைச் சாறை நன்றாக தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளித்தால் பொடுகு  நீங்குவதோடு  உடல் குளிர்ச்சி அடையும். கூந்தலின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.  

 மருத்துவத்தில் கற்றாழை:

 கற்றாழையின் இலையில் அலோயின் அலோசோன் போன்ற வேதிப்பொருள்கள் 4 லிருந்து 25 சதவீதம் வரை  இருக்கின்றன.

  உடல் சோர்வு, உடல் உஷ்ணம், மலச்சிக்கல், சிறுநீர் பிரச்சினைகள், பசியின்மை, அல்சர் மற்றும் பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் முதலான சிக்கல்களுக்கு சிறந்த நிவாரணியாக கற்றாழைச்சாறு பயன்படுத்தப்படுகிறது.  ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவத்தில் கற்றாழைச்சாறு  சளி, இருமல், வயிற்றுப்புண், தீக்காயம், குடல்புண் ஆகியவற்றைக் குணப்படுத்த உதவுகிறது.

 உடல் உஷ்ணத்தினால் பெண்களுக்கு ஏற்படும் கருப்பை பிரச்சினைகளுக்கு பக்கவிளைவு இல்லாத வைத்தியம் கற்றாழை பனங்கற்கண்டு. கற்றாழையின் நுங்கு போன்ற பகுதியை ஓடும் தண்ணீரில் நன்றாக அலசி கசப்பு நீங்கியதும் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் கருப்பை பலமடையும். மாத விடாய் பிரச்சினைகள் நீங்கும். நீர்க்கடுப்பு, நீர்ச்சுளுக்கு, எரிச்சல், அரிப்பு  போன்றவையில் இருந்தும் விடுபடலாம்.   

 கற்றாழை,  இயற்கை தந்த வயாகரா என்றும் சொல்லலாம். சோற்றுக்கற்றாழை வேர்களைச் சிறு துண்டுகளாக நறுக்கி இட்லிப்பானையில் பசும்பால் விட்டு அவித்து நிழலில் உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். தினமும் பாலில் ஒரு டீஸ்பூன் தூளை சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை பலமடையும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், மேகநோய், மூட்டு வலி கூட கற்றாழையை உரிய  பொருளோடு பக்குவமாகச் சேர்த்து சாப்பிட்டு நிவாரணம் அடையலாம்.   இன்னும் பல மருத்துவபயன்களை உள்ளடக்கிய கற்றாழைச் சாறு பல்வேறு விதமான மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

கற்றாழைச்சாறும், குழம்பும்:

   கற்றாழை மடலை தோல்சீவி நுங்கு போன்ற சதைப்பகுதியை நீரில் அலசினால் கசப்புச் சுவை குறையும். இதை மிக்ஸியில் அரைத்து  பசுந்தயிரை மோராக்கி, அதில் லேசாக உப்பு, சிட்டிகை பெருங்காயம், இஞ்சி சேர்த்து தாளிப்பு பொருள் கலந்து குடித்தால் கோடையிலும்  உடல், ஏதோ ஊட்டி, கொடைக்கானலில் இருப்பது மாதிரி குளிர்ச்சியாக இருக்கும். கோடை வெயிலில் வெளியில் சுற்றுபவர்கள் வாரம் மூன்று நாள் கற்றாழை மோர் குடித்தால் வெயில் தன் தாக்கத்தால் நம் உடலை நெருங்கக்கூட முடியாது.

கற்றாழை நுங்கை மெல்லிய வெள்ளைத்துணியில் கட்டித்  தொங்கவிட்டால் சாறு இறங்கிவிடும். பிறகு நுங்கு போன்ற  சதைப்பகுதியை 7 முறை நீர்விட்டு அலசி.. வத்தக்குழம்பு செய்முறையில் கற்றாழை சதைப்பகுதியைச் சிறு துண்டுகளாக நறுக்கிச் சேர்த்து குழம்பு வைக்கலாம். வித்தியாசமான ருசி. உஷ்ணத்தையும் ஏற்படுத்தாது.  உடலுக்கும் வலு சேர்க்கும்.

கற்றாழை தோசை, கற்றாழைப் பொடிகள், கற்றாழை குளிர்ச்சி தைலம், கற்றாழை கூந்தல் தைலம், கற்றாழை  குளிர்பானம்... என விதவிதமான உணவுப் பொருட்களை இயற்கை சத்துக்கள் நிறைந்த கற்றாழையில் தயாரிக்கலாம்.

   கற்றாழை சகலவழிகளிலும்  சருமத்தையும்.. உடல் ஆரோக்கியத்தையும் காக்கிறது. பத்துக்கு பத்து அறையிலும் பாந்தமாய்  சிறிய தொட்டியில் பொருந்திக் கொள்ளும்  கற்றாழை  இனி  உங்கள்  வீட்டிலும்   வளரட்டும்!  

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

27 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்