360: தயக்கம் காட்டும் காங்கிரஸ்

By செய்திப்பிரிவு

குடிமக்கள் மசோதா: வடகிழக்கில் வறுபடும் பாஜக!

குடிமக்கள் (திருத்த) மசோதாவைக் கொண்டுவந்ததிலிருந்து வடகிழக்கு மாநிலங்களில் பாஜக தலைமையிலான மத்திய அரசு கடும் எதிர்ப்பைச் சந்தித்துவருகிறது. மசோதாவைக் கண்டித்து, வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 10 கட்சிகள் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டன. இவற்றில் ஏழு கட்சிகள் பாஜக கூட்டணியில் அங்கம் வகிப்பவை என்பது குறிப்பிடத்தக்கது. நாகாலாந்தில், மாநில பாஜகவுக்குள்ளேயே இம்மசோதா குறித்து எதிர்ப்புகள் எழுந்தன. மசோதா மாநிலங்களவையில் காலாவதியாகிவிட்டாலும், வட கிழக்கு மாநிலங்களில் பாஜகவுக்கு எதிரான கொதிநிலை சுலபத்தில் அடங்குவதாக இல்லை. மிசோரம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் இன்னமும் போராட்டங்கள் நடக்கின்றன. மக்களவைத் தேர்தலில் பாஜக வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்பட்சத்தில் இம்மசோதா மீண்டும் கொண்டுவரப்படும் என்றும் பேசப்படுகிறது. இந்தச் சூழலில், மக்களவைத் தேர்தலில் இந்த விவகாரம் பாஜகவுக்குச் சாதகமா பாதகமா என்று விவாதங்கள் எழுந்திருக்கின்றன.

தாராவிக்கு இடம் வழங்கும் ரயில்வே!

ஆசியாவின் மிகப் பெரிய சேரிப் பகுதியான தாராவியின் வளர்ச்சிக்கு தனது உபரி நிலம் 45 ஏக்கரை, 99 ஆண்டு குத்தகைக்கு மகாராஷ்டிர அரசிடம் வழங்குகிறது ரயில்வே துறை. இதற்காக ரூ.3,800 கோடியைப் பெற்றுக்கொள்கிறது. இந்த இடத்தைத் தருவதற்கு ரயில்வே துறையின் மூத்த அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ரயில் பாதையை ஒட்டிய இடத்தைக் கொடுப்பதால் எதிர்காலத்தில் ரயில் திட்டங்களை விரிவுபடுத்த முடியாமல் போய்விடும் என்று கூறினர். ஆனால், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இதில் உறுதியாக இருந்ததால் அதிகாரிகளின் எதிர்ப்புகள் எடுபடாமல் போனது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இதுபோன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்குகிறது என்கின்றன எதிர்க்கட்சிகள்!

தயக்கம் காட்டும் காங்கிரஸ்

காங்கிரஸ் கூட்டணியில் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா (எம்என்எஸ்) கட்சியைச் சேர்க்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் முயற்சி செய்துவரும் நிலையில், காங்கிரஸ் தயக்கம் காட்டுகிறது. தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் என்று இந்தி பேசுவோர் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தும் எம்என்எஸ், கூட்டணியில் இருந்தால் இந்தி பேசுவோரின் வாக்குகள் விழாதே என்பது காங்கிரஸின் அச்சம். சிவசேனைக்கு பதில் சொல்வதற்கும், தீவிர மராட்டியர்களின் வாக்குகளைத் திரட்டவும் எம்என்எஸ் உதவும் என்று கணக்குப் போடுகிறார் பவார். மும்பையிலு்ம சில நகரங்களிலும் எம்என்எஸ் கட்சிக்கு கணிசமான வாக்குகள் உள்ளன என்பது அவருடைய வாதம். இன்னும் சில தினங்களில் இந்தக் கூட்டணிக் குழப்பம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜார்ஜ் பெர்னாண்டஸ்

1967 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் எஸ்.கே. பாட்டீலை, சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சியின் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தோற்கடித்தது அன்றைய தேதியில் பரபரப்பாகப் பேசப்பட்டது. 1952, 1957. 1962 மக்களவைத் தேர்தல்களில் தொடர்ந்து வென்ற பாட்டீல், காங்கிரஸின் முக்கியத் தலைவர். இளம் தலைவரான ஜார்ஜ் பெர்னாண்டஸோ வளர்ந்துவரும் நிலையில் இருந்த தொழிற்சங்கவாதி. மும்பை தெற்கு தொகுதியில் 29,434 வாக்குகள் வித்தியாசத்தில் பாட்டீலைத் தோற்கடித்து அசத்தினார். தொழிலாளர்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்ததன் மூலம் மக்கள் மத்தியில் செல்வாக்கை வளர்த்துக்கொண்டவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். காங்கிரஸ் அரசின் ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பல பிரச்சினைகளும் அவரது வெற்றியை உறுதிசெய்தன!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்