கருணாநிதியின் கொள்கை உறுதியை முதுமை அசைத்துவிடவில்லை!

By செய்திப்பிரிவு

சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் ஜனவரி 12 அன்று தொடங்கிய தி இந்து லிட் ஃபார் லைஃப் மூன்று நாள் இலக்கியத் திருவிழாவின் ஒரு பகுதியாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவஞ்சலி ‘தி இந்து - ஷோபிளேஸ்’ அரங்கில், ஜனவரி 13-ல் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தி இந்து என்.ராம், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, மருத்துவர் எழிலன் ஆகியோர் கருணாநிதி பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

என். ராம்,  ‘தி இந்து’ பப்ளிஷிங் லிமிடெட் தலைவர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படாத நிலை தொடர்கிறது. கருணாநிதி இருந்திருந்தால் இதைத் தீவிரமாக எதிர்த்திருப்பார் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். முதுமை, உடல்நிலை எதுவும் அவரது கொள்கை உறுதியை அசைக்கவில்லை. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அவரது நிலைப்பாடு எப்போதும் மதிப்புக்குரியதாக இருந்தது. இலங்கைத் தமிழர்கள் மீது அவருக்குத் தீராத அக்கறை இருந்தது. சில ஈழ அமைப்புகள் அவரை விமர்சித்தாலும் தமிழர் நலன்களுக்காக அவர்களுடன் கைகோக்க அவர் தயங்கியதில்லை.

கனிமொழி, திமுக மாநிலங்களவை உறுப்பினர்.

தலைவர் கலைஞர் எப்படித் தன் நேரத்தை நிர்வகித்தார் என்று எனக்கே தெரியாது. ‘குடும்பத்துடன் அவர் நேரம் செலவழித்திருக்க மாட்டார்தானே’ என்று எல்லோரும் தவறாகப் புரிந்துகொண்டு என்னிடம் கேட்பார்கள். உண்மையில் அவர் குடும்பத்துக்கும் போதிய நேரம் ஒதுக்குவார். தனிப்பட்ட உறவுகளைப் பெரிதும் மதித்தார். எல்லோரையும் அளவுக்கு அதிகமாகவே மன்னித்தார். மனிதர்கள் என்றால் குறைகளுடன்தான் இருப்பார்கள் என்ற புரிதல் அவருக்கு எப்போதும் இருந்தது.

நா.எழிலன், மருத்துவர். தனியார்மயம்

அனுமதிக்கப்பட்ட பின் மருத்துவக் கல்வியின் விலை பெருமளவு உயர்ந்தது. அதை எதிர்கொள்ள தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கினார் கருணாநிதி. இதனால், இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தின் மருத்துவர்-நோயாளி விகிதம், தேசிய விகிதத்தைவிட அதிகம்.

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர்.

இளம் வயதில் தாய்மொழியில் கற்பது அறிவியல் கோட்பாடுகளை எளிதாகப் புரிந்துகொள்ள உதவும். இந்தியப் பிராந்திய மொழிகளில் அறிவியல் பாட நூல்களையும் கல்வியையும் வளர்த்தெடுக்க வேண்டும். மொழிதான் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாகவும் சமத்துவமானதாகவும் அறிவியலை மாற்ற முடியும்!

ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய  ‘தமிழ் கேரக்டர்ஸ்: பர்சனாலிடீஸ் பாலிடிக்ஸ் அண்ட் கல்ச்சர்’ நூலை முன்வைத்து  முத்தா வெங்கடசுப்பாராவ் கான்சர்ட் ஹாலில், ஜனவரி 13-ல் நடந்த ‘பாரதியும் மற்ற தமிழ் கதாபாத்திரங்களும்’ அமர்வில் கோபாலகிருஷ்ண காந்தி, ஆ.இரா.வேங்கடாசலபதி கலந்துரையாடினர்.

கோபாலகிருஷ்ண காந்தி, மேற்கு வங்க முன்னாள் ஆளுநர்.

பாரதியைப் பற்றி எல்லா இந்தியர்களுக்கும் தெரிவதில்லை. இழப்பு பாரதிக்கு இல்லை, அவரை அறியாதவர்களுக்குத்தான். பாலின சமத்துவத்தில் பெரியாரின் நிலைப்பாட்டை வேங்கடாசலபதி தன் நூலில் பதிவு செய்துள்ளார். “நான் திருவள்ளுவரை மதிக்கிறேன். ஆனால் இல்லத்தரசி பற்றிய அவரது கருத்துக்களை என்னால் ஏற்க முடியாது” என்று பெரியார் சொல்லியிருக்கிறார். இதன் மூலம் ஒருவர் மீதான நம் மரியாதை வழிபாடாகிவிடக் கூடாது என்ற புரிதலை அடையலாம்.

ஆ.இரா.வேங்கடாசலபதி, வரலாற்றாசிரியர்.

இரண்டாம் நிலைத் தலைவர்களின் வளர்ச்சியைக் கண்டு அஞ்சாதவராக அண்ணா இருந்தார்.

1956-ல் கட்சியின் வலுவான தலைவர் என்ற நிலையில் இருந்தபோது ‘தம்பி வா தலைமை ஏற்க வா’ என்று நெடுஞ்செழியனை அழைத்தார். பிராமணர்கள் உட்பட அனைவருடனும் பெரியார் உரையாடல் நடத்தினார். அனைவரையும் மரியாதையுடனே நடத்தினார்.  ராஜாஜியை ‘கனம் ஆச்சார்யார்’ என்றே அழைத்தார். தமிழர்கள் பற்றிய வட இந்தியர்களின் புரிதல் மிகத் தவறாக இருக்கிறது. தமிழரல்லாதவர்களைச் சென்று சேரும் வகையில் தமிழர்கள், தென்னிந்தியர்களின் வரலாறு எழுதப்பட வேண்டும்.

இந்தியா வரலாற்றைப் பற்றிய அமர்வில் ராஜ்மோகன் காந்தி, இரா முகோடி, ஆதித்யா முகர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இரா முகோடி, எழுத்தாளர்.

வரலாற்றிலிருந்து பெண்கள் மறைக்கப்பட்டுள்ளனர். அவர்களது பங்களிப்பு திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளது. முகலாய அரசின் பெண்கள் பற்றி நான் பள்ளியில் படித்தவையும் பிறகு தெரிந்துகொண்டவையும் முற்றிலும் வெவ்வேறாக இருந்தன. ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் பழங்கால இந்தியாவில் பெண்களை தாழ்த்தும் வகையில் சித்தரித்திருக்கின்றனர். எனவேதான், பெண்களின் வரலாற்றை எழுதத் தொடங்கினேன்.

ராஜ்மோகன் காந்தி, மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர்

நான் உலகின் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். ஒரு நாடு மற்றவர்களைவிட ஒரு சிலருக்கு மட்டுமே உரியதாகப் பார்க்கப்படும் போக்கு இந்தியாவில் இருக்கிறது. இது துரதிர்ஷ்டவசமானது.

ஆதித்யா முகர்ஜி, வரலாற்றுப் பேராசிரியர்.

நம்முடைய வரலாறு பெருமளவில் ஐரோப்பியர்களால் எழுதப்பட்டது என்பதால், அது ஐரோப்பிய சார்பு கொண்டதாக உள்ளது. அனைத்து வரலாறுகளிலிருந்தும் உண்மைகளைப் பிரித்தெடுத்து தவறான தகவல்களைத் நிராகரிப்பதே வரலாற்றாசிரியர்களின் பணியாக இருக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

சினிமா

42 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்