கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்

By பி.ஏ.கிருஷ்ணன்

பயங்கரவாதம், அமெரிக்க ஊடுருவல் இவற்றுக்கெல்லாம் நடுவில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.

போர் நடக்கும் இடத்துக்குச் சென்று அங்கு நடப் பதைப் பற்றி எழுதுவது மிகவும் ஆபத்தான வேலை. ஆனால், இந்த வேலை 19-ம் நூற்றாண்டின் மைய ஆண்டுகளிலிருந்து தொடர்ந்து நடந்து வந்துகொண்டிருக்கிறது. போர்க்களத்தில் மாண்ட பத்திரிகை யாளர்கள் நூற்றுக்கணக்கில் இருப்பார்கள். இராக்கிலும் சிரியாவிலும் நடக்கும் போர்களில் மட்டுமே இறந்த நிருபர் களின் எண்ணிக்கை 61 என்று பிரித்தானிய நாளிதழ் ஒன்று சொல்கிறது.

ஆனால், போரின் வெப்பமான தருணங்களில் பலியாவது வேறு. ஆனால், கடத்தப்பட்டு, சுமார் 2 வருடங்கள் சிறை களில் செலவிட்ட பின், கால்நடைகளைப் போலக் கழுத்தறு பட்டுக் கொல்லப்படுவது வேறு. ஆகஸ்ட் 19-ம் தேதி நடந்த அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் ஃபோலியின் கொலை நம் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தலைகளை அறு

போரில் பிடிபட்டவரையோ அல்லது கடத்தப்பட்டவரையோ தலையை அறுத்துக் கொல்வது என்பது இராக்-சிரியா பயங்கரவாதத்தின் முத்திரை. இராக்கில் நடந்த இத்தகைய கொலைகள் கணக்கில்லாதவை. ஆனால், ஒரு நிருபர் இதுபோன்று கொல்லப்படுவது இரண்டாவது முறையாக நடந்திருக்கிறது. 12 ஆண்டுகளுக்கு முன்னால் டானியல் பெர்ல் என்பவரின் தலை பாகிஸ்தானில் அறுக்கப்பட்டது. இத்தகைய கொலைமுறைகளுக்கு இரண்டு காரணங்கள். முதற்காரணம், இது மேற்கத்திய நாடுகளுக்கு மிகுந்த அருவருப்பையும், போர் நடக்கும் இடத்துக்கு அருகே செல்பவர்களுக்குப் பயத்தையும் ஏற்படுத்துகிறது. இரண்டாவது காரணம், கலாச்சாரம் சார்ந்தது என எண்ணுகிறேன். விதவிதமான துப்பாக்கிகள் வந்துவிட்ட போதிலும், வாளும் கத்தியும் மதப் போராளிகளின் பிரிக்க முடியாத அங்கங்களாக இருந்துவந்திருக்கின்றன. அருகில் சென்று ஒருவரின் உயிரை எடுக்கும்போது, அவர்கள் வாளையோ கத்தியையோதான் விரும்புகிறார்கள்.

தலை அறுக்கப்படுவதை இணையவசதியால் நாம் வீட்டிலிருந்தே பார்க்க முடிகிறது. இதனால், பயங்கரவாதத் தின் மீது மிகுந்த வெறுப்பு பொதுமக்களுக்கு ஏற்பட்டாலும், சிலர் அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்க வேறு வழி யில்லை என்று நினைக்கிறார்கள். இவர்களில் சிலர் நாமும் சிரியாவுக்கோ இராக்குக்கோ சென்று போர் புரியலாம் என்றும் நினைக்கலாம்.

தலை அறுபடப்போகும் ஃபோலி, ‘‘என்னுடைய சவப்பெட்டியின் கடைசி ஆணி அமெரிக்க விமானத் தாக்குதல்களால் அடிக்கப்பட்டது’’ என்கிறார். அறுப்பவர் ஒபாமாவுக்கு எச்சரிக்கை விடுக்கிறார். “நீங்கள் கலகத்தை அடக்குவதாக நினைக்க வேண்டாம். நீங்கள் போர் செய்வது இஸ்லாமிய ராணுவத்துக்கு எதிராக. உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்ற காலிஃபத்துக்கு எதிராக” என்கிறார்.

ஆனால், ஒபாமா மனம் மாறமாட்டார். விமானத் தாக்குதல் தீவிரப்படுத்தப்படலாம். பயங்கரவாதிகளின் பிடியில் இருக்கும் இரண்டாவது பத்திரிகையாளரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இரண்டாவது வீடியோ என்றைக்கு வேண்டுமானாலும் வரலாம்.

பத்திரிகையாளர்களின் நிலைமை

உயிரைப் பணயம் வைத்துப் போர்களைப் பற்றி எழுதுவதற்காகப் போர்க்களங்களுக்குச் செல்லும் பத்திரிகையாளர்களின் நிலைமை நாம் நினைப்பதைவிட மோசமானது. பெரிய பத்திரிகைகள்கூட இப்போதெல்லாம் போர்க் களத்தில் செய்தி சேகரிக்கவென்று தனி நிருபர்களை வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. அவ்வாறு வைத்துக்கொண்டால், அவர்களுக்குத் தங்குமிடம், உணவு தவிர சம்பளம் கொடுக்க வேண்டும். அவர்களின் ஓய்வூதியம் போன்றவற்றுக்கு வழிசெய்ய வேண்டும். எனவே, பத்திரிகைகள் சுயேச்சை இதழாளர்களையே (ஃப்ரீலான்ஸர்கள்) விரும்புகின்றன. கதை நன்றாக இருந்தால் காசு. அவ்வளவுதான். எனவே, பல நிருபர்கள் கதை நன்றாக இருப்பதற்காக, போர் மையத்துக்கே சென்று பார்க்கலாம் என்று நினைப்பதில் ஆச்சரியம் இல்லை. அபாயங்களுக்குப் பயந்தால் நடுவே போக முடியாது. “காயப்படக் கூடாது. அதை விட இறப்பதே மேல். காயப்பட்டால் மருத்துவச் செலவு கட்டுப்படியாகாது” என்று ஒரு பத்திரிகையாளர் சொல்கிறார். இவ்வளவு பாடுபட்ட பிறகும், இவர்கள் எழுதுவது நினைவில் நிற்கும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. போரி என்ற பெண் நிருபர் கூறுகிறார்: ‘‘உண்மை என்னவென்றால், நாங்கள் தோல்வியுற்றவர்கள். இரண்டு ஆண்டுகள் கழித்து எங்கள் வாசகர்களுக்கு டமாஸ்கஸ் எங்கிருக்கிறது என்பதுகூடச் சரியாகத் தெரியாது. உலகம் சிரியாவில் நடப்பதை ‘அந்தக் குழப்பம்' என்றுதான் கூறும். யாருக்கும் அங்கு என்ன நடக்கிறது என்பதுபற்றி எந்தப் புரிதலும் கிடையாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ரத்தம், ரத்தம், ரத்தம். அவ்வளவுதான்.’’

உலக, இந்திய இஸ்லாமிய மக்களின் நிலை

உலகெங்கிலும் இருக்கும் இஸ்லாமிய மக்களில் பலர், இந்தக் கொலையைக் கடுமையாகக் கண்டனம் செய்திருக் கிறார்கள். உலக மக்கள் அனைவருக்கும் அமெரிக்கத் தலையீடுதான் இன்று நடக்கும் படுகொலைகளுக்கு முக்கிய மான காரணம் என்றும் தெரியும். ஆனால், அமெரிக்கா காரணம் என்பதாலேயே படுகொலைகளை மன்னித்து விட்டுவிட முடியாது. கழுத்தை அறுத்தவர் பிரித்தானிய ஆங்கிலத்தில் பேசுவதால், அவர் பிரிட்டனிலிருந்து சென்றவராக இருக்கும் என்று கருதப்படுகிறது. பிரிட்டனில் வசிக்கும் இஸ்லாமிய இளைஞர்கள் மத்தியில் ஐ.எஸ். அமைப்புக்குத் தீவிர ஆதரவு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இதனால், இஸ்லாமிய இளைஞர்கள் எங்கு சென்றாலும் அவர்களைச் சந்தேகக் கண்ணுடன் பிறர் பார்க்கும் அபாயம் இருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை இஸ்லாமிய மக்கள் என்ன சொன்னாலும் அது கூறுகூறாக்கப்பட்டு, விவாதிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. இணையத்தில் இந்தியா விலிருந்து, குறிப்பாக தமிழகத்திலிருந்து எழுதுபவர்களில் சிலர் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக எழுதிவருகிறார்கள். இவர்கள் அனைவரும் தங்கள் நிலையை மறுபரிசீலனை செய்யும் கட்டாயம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. எழுத்தாளர் சல்மா இந்தக் கொலையைக் கண்டித்து மிக அருமையாக எழுதியிருக்கிறார். ஐ.எஸ். அமைப்பை பல நூறு ஹிட்லர்களின் திரட்சியாகப் பார்க்கிறேன் என்று அவர் எழுதியது தமிழகம் முழுவதும் பரவ வேண்டும்.

பாவம் பத்திரிகையாளர்கள்

பத்திரிகையாளர்களைக் கொலை செய்வதால் போர் செல்லும் தடம் மாறப்போவதில்லை. இது கொலை செய்பவர் களுக்கும் தெரியும். சில நாட்களுக்கு மையப் புள்ளிக்கு வருவதற்காகத்தான் அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள். இடையில் அகப்பட்டுக்கொண்டிருப்பவர்கள் பத்திரிகை யாளர்கள். அவர்கள் நிலையை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.

- பி.ஏ. கிருஷ்ணன், ‘புலிநகக்கொன்றை', ‘கலங்கிய நதி' ஆகிய நாவல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: tigerclaw@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

உலகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்