சிவாஜி கணேசன் எனும் தனித்துவம்

By சுப.குணராஜன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்தபோது, அவரது மகனும் நடிகருமான பிரபு வெளிப்படுத்திய ஒரு கூற்றை இங்கே நினைவுகூரலாம். “எங்க அப்பா பெரிய மனிதர் என்றுதான் தெரிந்துவைத்திருந்தேன். ஆனால், அவருடைய மறைவைத் தமிழ்ச் சமூகம் தனது சொந்த இழப்பாகக் கருதும் அளவுக்கு இவ்வளவு பெரிய அன்பை அவர் பெற்றிருந்தார் என்பதை இன்றுதான் உணர்கிறேன்; வியந்துபோகிறேன்.”

தமிழ் ஆளுமையின் முகம்

அப்பா என்ற அணுக்கம் பிரபுவுக்கு சிவாஜியின் உயரத்தை காட்டத் தவறிவிட்டதாகக் கருத முடியாது. காரணம், தமிழ்ச் சமூகம் சிவாஜியின் இழப்புக்கு அப்படி ஒருமித்து எழுந்து நிற்கும் என்பதை, அன்றைய ஆட்சியாளர்கள் உட்பட பலரும் அறிந்திருக்கவில்லை. ஏன் தமிழ்ச் சுயமே தனது அத்தனை வகை ஆளுமைத் திறன்களையும் அட்சரம் பிசகாமல் தனக்கு அடையாளம் காட்டியவரின் இழப்பைத் தனது அல்லது பொது இழப்பாக்கிக்கொள்ளும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை.

தமிழ் இனத்தின் அரசியல் விடுதலையைச் சாத்தியமாக்கிய அண்ணாவின் மரணத்தில் தொடங்கியது இந்த முறைமை. இந்தியாவே வியந்துபார்க்கும் அளவுக்கு ஒட்டுமொத்த சமூகமும் பங்கேற்கும், அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளாக அரங்கேறுபவை தமிழக அரசியல் தலைவர்களின் மரணங்கள். அது கருணாநிதி வரை தொடர்ந்தபடி உள்ளது. ஆனால், சிவாஜி கணேசன் எனும் நடிப்பாளுமை அரசியல் களத்தில் அடைந்த வெற்றிகள் எனக் குறித்துக்கொள்ள ஏதும் இல்லாதவர். அவரது மரணம் எப்படிப் பெரும் அரசியல் தலைமைகளுக்கு ஒப்பானதாக ஆயிற்று?

சினிமா வெறும் சினிமா இல்லை

தமிழ்ச் சமூகத்தின் இருப்பில் சினிமா உருவாக்கும் சுவடுகள், தடங்கள் வலிமையானவை. இன்றும்கூட மக்கள் தொடர்புச் சாதனங்களின் பெருக்கம், இணையவெளியின் மாபெரும் விரிவு ஆகியவை அதனைக் குறுக்குவதாக இல்லாமல் விரித்தபடியே இருகின்றன. அப்படியானால், பெரும்பாலும் திரைப்படங்கள் மட்டுமே ஒரே பொழுதுபோக்குவெளியாக இருந்த ஒருகாலகட்டத்தில் சமூகத்தின் நிலை எப்படி இருந்திருக்கும்?

பொதுவாக, திரைப்படங்களே நாயக மையமானது என்பது உலக அளவில் உண்மை, இந்திய அளவில் மெய்மை. இன்னும் அபூர்வமாக தமிழ்நாட்டுச் சூழலில் இரண்டு எதிரெதிர் அதிநாயக பிம்பங்கள் என்ற கூறு உண்டு. தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா காலம் தொடங்கி இன்றைய அஜித், விஜய் வரை தொடரும் சங்கதி. இன்னும் வேடிக்கை, அதே காலவெளியில் படிநிலையில் கீழிறங்கியவாறு பல இரட்டைகள் இருப்பு இருக்கும் என்பதுதான். ஆனால், அடிப்படை வடிவமைப்பு - டிஸைன் / பேட்டர்ன் - ஒன்றுதான். ஒரு எளிமையான புரிதலுக்கு அது நாயகத்துவம் அல்லது அதிநாயகத்துவம். நாயகத்துவம் ‘ஓடித் தாவினால்’, அதிநாயகத்துவம் ‘பறந்து பாயும்’.

இந்த எதிரிணைகளிடையே அதிநாயகத்துவத்தை நோக்கிய இடைவிடாத பாய்ச்சல் தொடர்ந்தபடியே இருக்கும். அதிநாயகத்துவத்தை நோக்கிய இந்த நகர்வில் ஒரு உண்மையான நடிகன் இழப்பது என்னவென்றால், ஒரு பன்மைத்துவமான ஆளுமைப் பரிமாணங்களைத் திரையில் வெளிப்படுத்தும் வாய்ப்பை! வேடிக்கை என்னவென்றால், அதிநாயகன் ஒற்றைப் பரிமாணமானவனாக ஆகிப்போவதன் வழியாகவே அவ்விடத்தை அடைய முடிகிறது என்பதுதான்!

சிவாஜியும் எம்ஜிஆரும்

சிவாஜி காலத்திலும் எதிரெதிர் நாயக பிம்பம் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் இன்றைவிட வலுவாகவே இருந்தது. அந்த நாயகத்துவங்கள் பல்நிலை சமூக, அரசியல் கருத்துநிலைகளின் வடிவாகவும் இருந்தன. ஆனால் கூடுதலாக சிவாஜியும், எம்ஜிஆரும் வடிவமைத்துக்கொண்ட நுட்பங்களே அவர்களை இன்றளவும் ஒப்பாரும் மிக்காரும் இலராக ஆக்கியது.

பொதுப் பண்பில் இருமுனை நாயகத்துவம் எப்போதும் இருப்பில் இருந்தது, இன்றும் இருக்கிறது என்றாலும், அதன் நுட்பத்தினைப் பகுத்தறிந்தால் மட்டுமே எப்படி எம்ஜிஆர் எனும் நடிகர், பெரிதும் அவரது அரசியல் நடவடிக்கைகளுக்காக, வெற்றிகளுக்காக மட்டுமே அறியப்பட, அதே தளத்தில் தன்னைக் கட்டமைத்த சிவாஜி கணேசன் முற்றிலுமாக மாபெரும் நடிகராக மட்டுமே ஆனார் என்பது விளங்கும்.

எப்படிக் குடும்ப நாயகன் ஆனார்?

இந்த ஒப்பீட்டின் சிக்கலான பகுதி இதுதான். எம்ஜிஆரும் நடிகரெனும் பிம்பம் வழியாகவே இதைச் சாதித்தார். இன்னும் சொல்வதானால், பெரும் தொகுதியான பெண்களின் கவர்ச்சியான பிம்பமாகக் கருதப்படுபவர். அதே வகையில் அவரது திரைச் சாகசம், ஏழைப் பங்காளர், வள்ளல் தன்மை போன்றவை அவரை எளிய மனிதர்களுக்கும் ஆதர்சம் ஆக்கியது.

ஆனால், பொதுவான வெகுமக்கள் தொகுதியின், குடும்பம் எனும் அமைப்பின் வெளி கற்பனை சஞ்சாரங்களைப் பெரிதும் அனுமதிப்பதில்லை அல்லது அந்த ஆடம்பரம் அங்கு இருப்புக்கொள்ள முடிவதில்லை. அந்த வெளியின் வெற்றிடத்தை நிரப்பியவர்தான் சிவாஜி கணேசன் எனும் நடிக ஆளுமை. கனவுகள் சாத்தியமில்லாத வெளிச்சத்தின் சூட்டில் வாழ்வின் அசல்தன்மையைக் காட்சியாக்கி, இது பொது அனுபவம்தான் என ஆசுவாசம் கொள்ளச் செய்தது சிவாஜியின் திரைப்படங்கள். அதனால்தான் அவர் குடும்பங்களின் நாயகன் ஆனார். தனி நபர்களின் விருப்பு வெறுப்புகள், குடும்பம் எனும் பொதுமையில் இணக்கம் கொள்ள வேண்டியதாவது குடும்ப அமைப்பின் அசைக்க முடியாத விதி.

யாரிடம் இங்கு சிவாஜி இல்லை?

சிவாஜியும் நாயகத்துவ, ஏன் அதிநாயகத்துவப் பண்புகளைத் திரைவெளியில் கையாண்டவர்தான். ஆனால், அதை அவர் நிகழ்த்திய விதம் ஒப்பீட்டளவில், இந்திய சினிமாவிலேயே இன்னொரு நாயகன் செய்யாதது எனலாம். சிவாஜி அளவுக்கு நாயகத்துவத்தைக் ‘கலைத்துப் போட்ட’ இன்னொரு நாயகன் இல்லை.

சிவாஜி பிரதிநிதித்துவப்படுத்திய பாத்திரங்கள் ஏராளம். இந்த இடம்தான் முக்கியமானது. தமிழ் வாழ்வுவெளியின் எந்தப் புள்ளியை சிவாஜி தொடாமல் விடுத்தாரெனக் காண்பது அரிது. தமிழ் ஓர்மையின் அத்தனை வடிவங்களையும் பரீட்சித்துப் பார்த்த நடிகர் அவர். சிவாஜியின் ஏதாவது ஒரு பாத்திரத்தோடு தன்னைப் பொருத்திக்கொள்ள இயலாத தமிழ்ச் சுயம் இங்கு சாத்தியமில்லை எனலாம்.

சிவாஜியின் திரையிருப்புக் காலவெளியில் அவர் காப்பகப்படுத்திய (Archive) வாழ்வு மாதிரிகளை வகை பிரித்து வாசித்தால், தமிழ்ச் சமூக வரலாறு சாத்தியமாகும். தமிழ்த் திரைப்பட ஆய்வு கவனமாக ஆய்ந்தால் சிவாஜியின் குரல்மொழியும், உடல்மொழியும் வெளிப்படுத்தும் தரவுகள் ஏராளம். திரைப் பிரதிகளின் பலம் அவை காலத்தைக் காட்சிப்படிமங்களாக உறையச் செய்திருக்கின்றன. சிவாஜி காலத்தில் உறைந்து நிற்கும் தமிழ்ப் பிம்பங்களின் தொகுப்பு!

- சுபகுணராஜன், திரைப்பட ஆய்வாளர், சமூக விமர்சகர், ‘காட்சிப்பிழை’ சினிமா இதழின் ஆசிரியர்,

தொடர்புக்கு: subagunarajan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

43 mins ago

சினிமா

51 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்