மர்மப் பிரதேசத்தில் பயணம்

By சமஸ்

‘நீர், நிலம், வனம்!’ தொடரைத் தொடங்கும்போதே அபாயகரமான சில பயணங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்திருந்தேன்.

கடல் மக்கள் வாழ்வை அருகிலிருந்து எழுத வேண்டும் என்ற உந்துதலில் அவர்களை நெருங்கியபோது, கடல் பயணங்களுக்குத் தயாரானேன். அலைகள் அற்ற கடலில், சௌகர்யமான சுற்றுலாப் படகில் உல்லாசப் பயணம் போவது வேறு; அடித்துத் தூக்கும் மாசாவில் ஏறி, பறந்து, விழுந்து செல்லும் கட்டுமரத்தில் போகும் தொழில் பயணம் வேறு. நீச்சல் தெரியாதவனுக்கு, கடல் பயணங்கள்தான் அபாயகரமானதாக இருக்கும் என்று நினைத்திருந்தேன்.

தமிழகத்தில் கடல் பயணத்தைவிடவும் கரைப் பயணங்கள் எவ்வளவு அபாயகரமானவை என்பதைக் கனிம மணல் கரைப் பயணங்கள் உணர்த்தின. சூழல் கெடுக்கும் கழிவு ஆலை பற்றி நேற்று சொன்னேன். இன்று வேறொரு நிறுவனத்தின், மனம் பதைபதைக்க வைக்கும் மணல் கொள்ளை மீது பார்வையைத் திருப்பியுள்ளேன்.

தனி உலகத்துக்கு நல்வரவு

இந்தியாவின் நீளமான கடற்கரையைப் பெற்றிருக்கும் மாநிலங்களில் ஒன்றான தமிழகக் கடற்கரையின் நீளம் 1,076 கி.மீ. நாட்டின் கடற்கரையில் 13% இது. கடற்கரை என்றால், உடனே நம் ஞாபகத்துக்கு வரும் மெரினா, வேளாங்கண்ணி, கன்னியாகுமரி ஆகிய கடற்கரைகளின் முகங்களையும் அங்கு காணப்படும் ஜன நெருக்கத்தையும் இதில் மிகச் சொற்ப இடங்களில், மிகச் சொற்பமான தூரத்திலே காண முடியும்.

நீரோடியில் புறப்பட்டு, பழவேற்காடு வரை கடற்கரை வழியாக வந்தால் இடையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்படும் நகரங்கள், 591 கடலோடிகளின் கிராமங்களைத் தவிர, ஏனைய இடங்கள் யாவும் மர்மப் பிரதேசங்கள். மனித நடமாட்டம் அற்ற இந்தப் பிரதேசங்கள் ஒருபுறம் இணையற்ற அழகு கொண்டவை; மறுபுறம் குற்றங்களுக்கேற்ற களங்கள். ஆலா கத்தும் காடுகளும் சவுக்குத் தோப்புகளும் நாட்டுக் கருவை மரங்களும் நிறைந்த அந்தப் பகுதிகளில் என்ன நடந்தாலும் யாருக்கும் தெரியாது.

ஞாபகம் இருக்கிறதா?

ஓராண்டுக்கு முன் இதே நாட்களில் தமிழகம் எதைப் பற்றிக் காரசாரமாக விவாதித்துக்கொண்டிருந்தது ஞாபகம் இருக்கிறதா? தமிழகக் கடற்கரை சூறையாடப்பட்டு, ஏறத்தாழ ரூ. 1,00,000,00,00,000 வரை முறைகேடு நடந்திருக்கலாம் என்று பேசப்பட்டதே... கனிம மணல் கொள்ளை... அதன் மையச் சரடைத் தெரிந்துகொள்ள இந்தப் பிரதேசங்களில் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஏனென்றால், சென்ற இடமெல்லாம் கடலோடிச் சமூகமும் கடற்கரையையொட்டி வாழும் மக்களும் கனிம மணல் பிரச்சினையை வலியுறுத்தினர். கனிம மணல் பிரச்சினையை நாம் வெளியிலிருந்து பார்ப்பதற்கும் உள்ளிருந்து பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. முக்கியமாக, நாம் புரிந்துகொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள்: 1. இது வெறும் பணம் சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டும் அல்ல. 2. இந்த விவகாரம் ஏதோ ஓராண்டுக்கு முன், சில மாதங்களுக்கு முன் தோன்றியதும் அல்ல.

சூழல் கேடும் உயிர்க் கேடும்

பாரம்பரியக் கடலோடி சமூக மக்களைப் பொறுத்த அளவில் எப்போதுமே பணம் அவர்களுக்குப் பெரிய விஷயம் அல்ல. யார் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள், எவ்வளவு அரசாங்கத்துக்குக் கொடுக்கிறார்கள் என்பதெல்லாம் அவர்களுக்கு இரண்டாம் பட்சம்தான். அவர்களுடைய முதல் அக்கறை கடலுக்கும் சூழலுக்கும் ஏற்படும் சேதாரம். கனிம மணல் ஆலைகளைப் பொறுத்த அளவில், அவை கடலையும் கடற்கரையையும் சூறையாடப்படுவதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. கூடவே, முறைகேடாகக் கடலிலும் நடத்தப்படும் மண் அகழ்வு, அவர்களின் கரைகளை அரித்து, கடலை ஊருக்குள் கொண்டுவரும்போது செய்வதறியாது நிற்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல் ஆலைகளிலிருந்து வெளிப்படும் கதிரியக்கமும் கழிவுகளும் நோய்களை நோக்கித் தள்ளும்போது துடித்துப்போகிறார்கள்.

கால் நூற்றாண்டுப் போராட்டம்

“அறிவியல் எங்களுக்குத் தெரியாம இல்ல. மண்ணுக்குச் சேதத்தைத் தராமலா கால்வாயையும் குளங்குட்டைகளையும் வெட்டுனாங்க அந்தக் காலத்துல? அது அறிவியல் இல்லையா, தொழில்நுட்பம் இல்லையா? ஆனா, சூழலை நாசம் பண்ணாமச் சாதிக்க முடிஞ்சுதுல்ல? இன்னைக்கு அது இல்லையே?

கனிம மணலுங்கிறது இயற்கையிலேயே கதிரியக்கம் கொண்டது. அதைப் பிரிச்சு வேலை செய்யும்போது கதிரியக்கம் இன்னும் அதிகமாவுது. போதாக்குறைக்கு விதிகளை மீறி ராட்சச எந்திரங்களை வெச்சிக்கிட்டு, வெறித்தனமா மண்ணை எடுத்து சுத்திகரிச்சு, கழிவுத் தண்ணிய கடல்ல விட்டா என்னாகும்?

நிலத்தடி தண்ணி கெட்டுப்போச்சு. கடல் வளம் கெட்டுப்போச்சு. தொழில் அழிஞ்சுக்கிட்டிருக்கு. கதிரியக்கத்தால ஏராளமான நோய்ங்க. எங்க பார்த்தாலும் புத்துநோய், சிறுநீரக நோய். கடல்ல மண்ணை எடுக்க எடுக்க… கரையை அரிச்சுக்கிட்டுக் கடல் ஊருக்குள்ள வருது. எவ்வளவு சகிச்சுக்க முடியும்?

இருபத்தஞ்சு வருசமா போராடிக்கிட்டிருக்கம். யாரு எதிர்த்துப் பேசுறாங்களோ அவங்களை ஒண்ணு, பணத்தை வெச்சு அடிக்கிறது. இல்ல, பேசாம செஞ்சிடுறது. ஊர் எதிர்த்தா, சாதி மதத்தை வெச்சு ஊரை ரெண்டாக்குறது. அரசாங்க அதிகாரிங்களைக் கைக்குள்ள போட்டுக்கிட்டு எதிர்க்குறவங்களையே அமுக்கிப்போடுறது. 1996 டிசம்பர் 16-ம் தேதியை நாங்க இன்னும் மறக்கல. போராடுன மக்கள் மேல போலீஸை வெச்சு நடத்துன தடியடியில கூட்டப்புளி சேசு செத்துப்போன நாள். இன்னைக்கும் நாங்க போராட்டத்தை விடல. எப்பிடி விட முடியும்? கடல் வெறும் கடலா?” என்று கேட்கும் ம. புஷ்பராயன், கடலோர மக்கள் கூட்டமைப்பின் அமைப்பாளர். அப்போதைய உவரி தேவாலய உதவிப் பங்குத்தந்தை. அன்றைக்கு நடந்த காவல் துறை தடியடியில், கைகள் முறிபட்டு, மூட்டு தெறித்தவர்.

அப்படி என்ன நடக்கிறது அங்கே?

உண்மைதான். வெறும் உரிமங்களையும் இயந்திரங்களையும் ஆட்களையும் கொண்டு நடக்கும் தொழில் அல்ல இது. சாதி, மத, அதிகார, அரசியல், புஜபல வழிகள் யாவும் இரண்டறக் கலந்து கிடக்கும் தொழில்.

கனிம மணல் ஆலைகள் நடக்கும் பகுதிகளில், கடற்கரை மட்டும் அல்ல; கடலும் ஊரும்கூட அவர்கள் கைகளுக்குள் இருக்கின்றன. “அரசாங்கம் கனிம மணல் முறைகேடு சம்பந்தமா விசாரிக்க அமைச்ச ஆய்வுக் குழுவோட தலைவரான ககன்தீப் சிங் பேடி ஆய்வுக்குப் போனப்போ, அவர்கூட போன பத்திரிகையாளருங்களையே மறிச்சிட்டாங்க. படம் எடுக்கப்போனவங்களை அடிக்கப்போயிட்டாங்க. எல்லா ஊரையும் பிரிச்சு, கையாளு வெச்சிருக்காங்க. நீங்க தனியா போறது நல்லதில்லீங்க.

தயவுசெஞ்சு நாங்க சொல்லுறது கேளுங்க...”

எந்த மக்கள் அழைத்தார்களோ, அவர்களே எச்சரிக்கிறார்கள்...

(அலைகள் தழுவும்...)

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

ஓடிடி களம்

13 mins ago

விளையாட்டு

28 mins ago

சினிமா

30 mins ago

உலகம்

44 mins ago

விளையாட்டு

51 mins ago

ஜோதிடம்

33 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்