அரசின் கூண்டுக் கிளிதானா சிபிஐ?

By செல்வ புவியரசன்

சிபிஐ சுதந்திரமாக இயங்க வேண்டும் என்பதையே நாடு விரும்புகிறது. மக்களின் எண்ணத்தையே அறிவுறுத்தல்களாகத் தொடர்ந்து சொல்லிவருகிறது உச்ச நீதிமன்றம். அவற்றைப் பின்பற்ற வேண்டிய மத்திய அரசோ அதற்கு எதிராகவே செயல்பட்டுவருகிறது. மத்திய அரசு நினைத்தால் சிபிஐ இயக்குநரை ஒரு நள்ளிரவில் பதவியிலிருந்து நீக்கிவிட முடியும் என்ற எண்ணமும் முயற்சியும் இந்திய ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

பத்திரிகையாளரும் ஊழல் எதிர்ப்புச் செயல்பாட்டாளருமான வினீத் நாராயண் தொடுத்த வழக்கில், சிபிஐ மேற்கொள்ளும் விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று 1997-ல் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். ஹவாலா ஊழல் விசாரணைகளை மேற்கொண்டதில் சிபிஐ கடமை தவறிவிட்டது என்பதையும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் செல்வாக்குக்கு ஆளாகிவிட்டது என்பதையும் அந்த வழக்கில் சுட்டிக்காட்டியது. மத்திய அரசின் கைப்பாவையாக சிபிஐ இருக்கக் கூடாது என்பதற்காக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் கண்காணிப்பின் கீழாக சிபிஐ அமைப்பைக் கொண்டுவரவும் உத்தரவிட்டது. இணைச்செயலர் அந்தஸ்தில் உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை விசாரிப்பதற்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும் என்ற மத்திய அரசின் ஆணையையும் செல்லாது என்று அப்போது உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

உத்தரவுகளின் வழியாக உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டும் அறிவுறுத்தல்களுக்குச் சட்ட வடிவம் கொடுக்க வேண்டியது நாடாளுமன்றத்தின் கடமை. ஆனால், சிபிஐ சுதந்திரமாக இயங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மத்திய அரசு தொடர்ந்து தவிர்க்கத்தான் பார்க்கிறது. 2003 மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையச் சட்டத்தின்படி, ஆணையத்திடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகுதான் உயர் அதிகாரிகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக நின்றது. அரசாணை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொன்ன பிறகு, அரசாணைக்குச் சட்ட அந்தஸ்து கொடுப்பதன் வாயிலாக மீண்டும் அதை தக்கவைத்துக்கொள்ளும் செயல் இது. சுப்பிரமணியம் சுவாமியும் பிரஷாந்த் பூஷனும் தொடுத்த வழக்கில் இச்சட்டப் பிரிவு செல்லாது என்று 2004-ல்  உறுதிப்படுத்தியது உச்ச நீதிமன்றம். சட்டத்துக்கு முன் அனைவரும் சமம், உயர் அதிகாரிகளுக்கு விலக்கு அளிக்கக் கூடாது என்பதைத் தனது தீர்ப்பில் வலியுறுத்தியது.

இப்போதும்கூட, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து, இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்தக் கால அவகாசம் போதாது, இடையில் தீபாவளி விடுமுறை வருகிறது என்றெல்லாம் நீதிமன்றத்தில் பல்வேறு காரணங்களைச் சொல்லி விசாரணையைத் தள்ளிப்போடவே முயற்சிகள் நடந்திருக்கின்றன.

டெல்லி சிறப்புக் காவல் நிறுவகச் சட்டத்தில் 2014-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி பிரிவு 4 (ஏ), இயக்குநரை நியமிக்கும் குழுவானது பிரதமர், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் அல்லது எதிர்க்கட்சிக்குப் போதிய பெரும்பான்மை இல்லாதபோது அதிக உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சியின் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது அவரால் பரிந்துரைக்கப்படும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியோரை உள்ளடக்கியதாக அமைய வேண்டும். பிரிவு 4(பி) (1)-ன்படி, சிபிஐ இயக்குநரின் பதவிக்காலம் இரண்டாண்டுகளாக இருக்கும். பிரிவு 4 (பி) (2)-ன்படி நியமனக் குழுவின் முன்கூட்டிய ஒப்புதல் பெறாமல் இயக்குநரைப் பணிமாற்றம் செய்யக் கூடாது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தொடர்பான விஷயத்தில், அவர் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவரா என்பதல்ல கேள்வி. அவர் எப்படிப்பட்டவராயினும், அவர் மீது எந்தக் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு முன் பணிநியமனத்தோடு தொடர்புடைய எதிர்க்கட்சித் தலைவரையும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையும் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும் என்பதே முக்கியமானது. காங்கிரஸ் கட்சி முன்வைக்கும் இந்தக் குற்றச்சாட்டு மறுக்கப்பட முடியாதது. ஆனால், மத்திய அரசோ சிபிஐ இயக்குநர் பணியிலிருந்து அவர்கள்  விடுவிக்கப்படவில்லை, விடுப்பில்தான் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று வார்த்தை விளையாட்டை நடத்துகிறது.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துதான் பதவியிலிருந்து நீக்க முடியும் என்ற அரசியலமைப்புப் பாதுகாப்பைப் பெற்றிருக்கும் மத்திய அமைச்சரவையையும் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் விசாரிப்பதற்கு அதிகாரம் பெற்றிருக்கும் ஒரு அமைப்பு, தன்னாட்சி அதிகாரத்தோடு சுதந்திரமாகத் தனித்தியங்க முடியாது என்ற உண்மை நிலை இப்போது தெளிவாகியிருக்கிறது. அப்படியென்றால், உச்ச நீதிமன்றம் விமர்சித்ததுபோல, எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் மத்திய அரசின் கூண்டுக் கிளிதானா சிபிஐ?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

43 mins ago

ஜோதிடம்

48 mins ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்