ஆபிரகாம் பண்டிதர்: இசைத் தமிழின் வழிகாட்டி!

By செய்திப்பிரிவு

காலவோட்டத்தில் அறுபட்டுக்கிடந்த இசைத் தமிழ் கண்ணிகளைத் தற்கால இசைத் தமிழ் உலகுக்குக் கோத்துக் கொடுத்த மாபெரும் இசைத் தமிழ் அறிஞர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர். அவரின் ஆராய்ச்சி நூலான ‘கருணாமிருதசாகரம்’ ஒற்றை வரியில் கடந்துசெல்ல முடியாத வரலாற்றுச் சாதனை.

ஆபிரகாம் பண்டிதர் திருநெல்வேலி மாவட்டத்தில், தென்காசியை அடுத்த சாம்பவார் வடகரை என்னும் ஊரில் பிறந்தவர். திண்டுக்கல்லில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்திலேயே புகைப்படக்கலை, அச்சுக்கலை, சோதிடம் கணிக்கும் கணக்கு முறை, இசைப் பயிற்சி, வேளாண்மை, சித்த மருத்துவம், உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் ஆழமாகக் கற்றுக்கொண்டார். சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கும் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ‘பண்டுவர்’ என்னும் பெயரே இவரின் இயற்பெயரான ஆபிரகாமுடன் இணைந்து பின்னாளில் ஆபிரகாம் பண்டிதர் ஆனது.

பல்துறை வித்தகர்

பண்டிதரும் அவரது துணைவியார் ஞானவடிவு இருவரும் தஞ்சையில் உள்ள லேடி நேப்பியர் பெண்கள் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்கள். சில ஆண்டுகளில், ஆசிரியர் பணியை விடுத்து, தனக்குத் தெரிந்த மற்ற பணிகளை ஒவ்வொன்றாகச் செய்துபார்க்கத் தொடங்கிவிட்டார் பண்டிதர். முதலில் சித்த வைத்தியப் பணிகளில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக்கொண்டார். தான் தயாரித்த சித்த மருந்துகளைத் தஞ்சையிலிருந்து வெளிநாடுகளுக்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றுமதி செய்யும் அளவுக்கு அந்தத் தொழிலில் வளர்ந்திருந்தார்.

அடுத்து, தஞ்சை நகரின் மேற்குப் பகுதியில், தற்போது உள்ள மருத்துவக் கல்லூரிச் சாலையில் செம்பாறைகள் உள்ள 100 ஏக்கர் நிலத்தில் தோட்டம் அமைத்து, அதில் நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய பாசன வசதி ஏற்பாடு செய்து, அதன் மூலம் பெரும் விளைச்சலை ஏற்படுத்தியுள்ளார். பல்வேறு புதிய பயிர் ரகங்களைப் பரிசோதனைகள் மூலம் கண்டுபிடித்து பிரிட்டிஷ் அரசு வழங்கிய விவசாயத்துக்கான விருதுகளையும் தொடர்ச்சியாகச் சில ஆண்டுகள் பெற்றுவந்துள்ளார். அதே போல் தனக்குத் தெரிந்த அச்சுத் தொழில் அறிவைக் கொண்டு தஞ்சையில் முதல் மின்இயந்திர அச்சுக்கூடத்தை (லாலி பிரஸ்) உருவாக்கியுள்ளார். அந்த அச்சுக்கூடத்தில்தான் சரியாக 101 ஆண்டுகளுக்கு முன்பாக 1917-ல் ‘கருணாமிருதசாகரம் முதல் புத்தகம்’ நூல் முழுவதுமாக அச்சிடப்பட்டது.

இரண்டு ஆண்டுகளிலேயே 1919 ஆகஸ்ட் 31-ல் ஆபிரகாம் பண்டிதர் காலமானார். அவர் இறப்பதற்கு முன்பாக அவர் எழுதிவைத்திருந்த இரண்டாம் நூலுக்கான குறிப்புகளைக் கொண்டு, அவரது பிள்ளைகள் 1946-ல் ‘கருணாமிருதசாகரம்’ இரண்டாவது நூலை வெளியிட்டுள்ளார்கள். முதல் நூல், தென்னிந்திய இசையின் சுருதி முறைகள் குறித்தது. இரண்டாவது நூல், ராகங்களைப் பற்றி ஆய்வுசெய்யும் நூலாகும்.

சிலம்பின் இசை நுட்பம்

1892-ல் முதன்முதலாக சிலப்பதிகாரம் உ.வே.சா.வின் முன் முயற்சியால் அச்சு இயந்திரத்தில் பதிப்பித்து வெளியிடப்பட்டது. அதன் பிறகே சிலப்பதிகாரம் நூலை முழுவதும் படிக்கும் வாய்ப்பு பரவலானது. தமிழறிஞர்களால் சிலம்பின் இலக்கியச் சிறப்பை அறிந்துகொள்ள முடிந்தது.

ஆபிரகாம் பண்டிதருக்கோ தமிழும் தெரியும், இசையும் தெரியும். கூடவே, சோதிடக் கணக்கு முறையும் தெரியும். ஆகவே, அதில் உள்ள தமிழ்ச் செய்யுளோடு, அதிலிருந்த இசைக் கூறுகளையும் கண்டுணர முடிந்தது. ஆய்ச்சியர் குரவையில் ஏழு பெண்கள் ஆடிப் பாடும் காட்சி ஒன்று உண்டு. ஆபிரகாம் பண்டிதர் தனக்கிருந்த சோதிட அறிவைக்கொண்டு, ஏழு பெண்களை இசையின் ஏழு ஸ்வரங்களாகவும், அந்தப் பெண்கள் ஆயப்பாலையில் ஆடும் வடிவத்தை 12 ராசி வட்டமாகவும், அவ்வட்டத்தை 12 ஸ்வரஸ்தானங்களோடு இணைத்தும் சிலப்பதிகார இசை சூத்திரங்களின் முடிச்சுகளை ஒவ்வொன்றாக எளிதில் அவிழ்த்து தமிழுலகுக்குக் காட்டினார். அதுவரை 22 சுருதிகள்தான் தென்னிந்திய இசையில் இருந்தது என்கிற கூற்றை மறுத்து, 12 ஸ்வரஸ்தானங்கள் 24 சுருதிகளாகவே வர முடியும் என்றும் 48, 96 என்று நுண்சுருதிகளாகவும் வளரும் ஆற்றல் கொண்டது இசைத் தமிழ் என்றும் நிறுவினார்.

இவ்வளவு சிக்கல் மிகுந்த விளக்கத்தைப் புரிந்துகொள்ள அது புத்தகமாக வர வேண்டும். பண்டிதருக்கு இருந்த அச்சுத்தொழில் அறிவாலே அது சாத்தியமானது. இவ்வளவையும் செய்யப் பணம் வேண்டுமே. அதற்காக, தனது மருத்துவத் தொழிலிலிருந்து ஈட்டிய மொத்த வருமானத்தையும் இசை ஆய்வுக்காகச் செலவுசெய்தார். தனக்குத் தெரிந்த பல்துறை அறிவையும் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தியே, அறுபட்டுக் கிடந்த இசைத் தமிழின் தொடரைப் பண்டிதரால் மீண்டும் மீட்டுருவாக்கம் செய்ய முடிந்தது. அவற்றைக் கருணாமிருதசாகரம் என்னும் பெருநூலாகவும் தமிழ் உலகுக்குத் தர முடிந்தது.

- களப்பிரன், எழுத்தாளர்,

தொடர்புக்கு: kalapiran0@gmail.com

ஆகஸ்ட் 31: ஆபிரகாம் பண்டிதரின் நினைவு நாள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

10 mins ago

சினிமா

32 mins ago

இந்தியா

4 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

6 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

3 hours ago

மேலும்