திமுக மாவட்டச் செயலாளர் போர்த் தளபதி மாதிரி தயாராக இருக்க வேண்டும்!- பொன்முடி பேட்டி

By சமஸ்

திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான க.பொன்முடி அரசியல் அறிவியல் பட்டதாரி. கல்லூரி ஆசிரியராக இருந்தபோது, திராவிடர் கழகத்தின் பகுத்தறிவு ஆசிரியர் அணியின் மாநிலத் தலைவராகவும் இருந்தவர். திமுகவின் உயர்நிலைக் குழுவிலும் கருணாநிதியின் அணுக்க வட்டத்திலும் இடம்பெற்றிருக்கும் பொன்முடி, இன்றும் விழுப்புரம் மாவட்டத்தின் செயலாளராகவும் நீடிப்பவர். கட்சியின் மேல்மட்டம் தொடங்கி வேர்மட்டம் வரை முழு அமைப்போடும் நேரடித் தொடர்பில் இருப்பவர், திமுக அமைப்புரீதியாக எப்படிச் செயல்படுகிறது என்பதை விவரித்தார்.

திமுகவின் உயர்நிலைக் குழுவை எட்டிப்பிடித்துவிட்டாலும் இன்னமும் மாவட்டச் செயலாளர் பதவியைக் கையில் வைத்திருக்கிறீர்களே?

மக்களிடையே நேரடியாகப் புழங்கும் அனுபவத்தை இழக்க மனமில்லாததுதான் காரணம். ஒரு ஐஏஎஸ் அதிகாரி அரசுத் துறைச் செயலாளராக இருப்பதைக் காட்டிலும், மாவட்ட ஆட்சியராக இருக்க விரும்புவதற்கு ஒப்பானது இது.

உள்ளபடியே அத்தனை அதிகாரம் இருக்கிறதா?

நிச்சயமாக. நிஜமான ஜனநாயகம் நிறைந்த கட்சி திமுக. கட்சியில் அடிமட்ட அமைப்பையும் தலைமையையும் இணைக்கும் பதவி இது. அதனால்தான் திமுகவில் எந்த முக்கியமான முடிவும் மாவட்டச் செயலாளர்களைக் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்படுவதில்லை. அன்பில் தர்மலிங்கம் உதாரணத்தை இங்கே குறிப்பிடலாம். ஒரு இடத்திற்கு அன்பில் போகிறார். அங்குள்ள விஷயங்கள் குறித்து அதிகாரியிடம் கேள்வி கேட்கிறார். ‘எல்லாம் சரி, நீ யார்?’ என்கிறார் அதிகாரி. ‘திமுக மாவட்டச் செயலாளர்’ என்கிறார் அன்பில். ‘அப்படியென்றால்?’ என்கிறார் அதிகாரி. அன்பில் சொல்கிறார், ‘கலெக்டர் மாதிரி!’ அதிகாரத்தைச் சுட்டிக்காட்டுவதற்காக மட்டும் அல்ல; திமுக மாவட்டச் செயலாளர் என்றால், ஒரு மாவட்ட ஆட்சியர் மாதிரி அந்த மாவட்டத்தின் எல்லா விஷயங்களையும் கையில் வைத்திருக்க வேண்டும். மக்கள் எப்போதும் அணுகும் நிலையில் இருக்க வேண்டும் என்ற பொறுப்புகளையும் சேர்த்துச் சுட்டிக்காட்டுவதற்காகவே இதைச் சொல்கிறேன்.

திமுகவில் அவ்வளவு ஜனநாயகம் இருக்கிறதா? ஏன் கேட்கிறேன் என்றால், உங்கள் தலைவர் கிட்டத்தட்ட 50 வருடங்களாக அந்தப் பதவியில் நீடிக்கிறார்...

அவரை 60 ஆண்டுகளாகத் தொடர்ந்து சட்ட மன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கிறார்களே மக்கள், அதையாவது ஜனநாயகம் என்று ஏற்றுக்கொள்வீர்களா? வெளியே மக்களே அவருடைய ஆளுமையை இவ்வளவு நேசித்துத் தேர்ந்தெடுக்கும்போது, கட்சிக்குள் நாங்கள் அவரை நேசிப்பதிலும் தேர்ந்தெடுப்பதிலும் வியக்க என்ன இருக்கிறது! அவர் மட்டுமல்ல; கட்சியில் 25 ஆண்டுகளைக் கடந்த மாவட்டச் செயலாளர்கள் சிலரும் இருக்கிறார்களே, எப்படி? கீழே உள்ள ஆதரவுத்தளம்தான் காரணம்! உதாரணமாக, ஒருவர் மாவட்டச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றால், அந்த மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியம், நகரம், பேரூர் கிளை நிர்வாகிகள் அனைவர் ஆதரவையும் பெற்றிருக்க வேண்டும். மேலிருந்து மாவட்டச் செயலாளர்களைத் திணிக்கும் கலாச்சாரம் திமுகவில் என்றைக்கும் கிடையாது. கீழிருந்து ஓட்டு வாங்கி மேலே செல்ல வேண்டும். தலைவருக்கு மிக நெருக்கமான மாவட்டச் செயலாளராக மன்னை நாராயணசாமி இருந்த காலத்தில்தான் ஒரு கோ.சி.மணி உருவானார். இப்படி ஒவ்வொரு ஊரிலும் சொல்ல முடியும்.

கருணாநிதி மாவட்டச் செயலாளர்களை எப்படி அணுகுவார்?

எப்போதும் அணுகும் நிலையில் இருப்பார். எல்லாவற்றுக்கும் காது கொடுப்பார்.  அதேசமயம், அவர் ஓட்டத்துக்கு ஈடு கொடுக்க வேண்டும். காலையிலேயே பத்திரிகைகளைப் படித்துவிட்டு தொலைபேசியில் வந்துவிடுவார். அரசின் குறைகளோ, எதிர்க்கட்சியின் தவறுகளோ எதுவாக இருந்தாலும், பத்திரிகையில் வரும் முன்பு அது அவர் கவனத்துக்குப் போயிருக்க வேண்டும். முப்பெரும் விழா, பொங்கல் விழா, மொழிப் போர் தியாகிகள் நினைவேந்தல், போராட்டக் கூட்டம் என்று மேலிருந்து ஏதாவது அறிவிப்புகள் வந்துகொண்டே இருக்கும். படைத் தளபதி மாதிரி தயார் நிலையில் இருக்க வேண்டும்!

-சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

விளையாட்டு

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்