உலக அகதிகள் தினம் – ஜூன் 20: அகதிகள்... அவலங்கள்... உரிமைகள்...

By ஜி.எஸ்.எஸ்

தா

ய்நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சமடைபவர்களின் எண்ணிக்கை, முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது. போர்ச் சூழல் மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக தினமும் சராசரியாக தங்கள் நாட்டைவிட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை 28,300. இப்போதைய நிலவரப்படி சர்வதேச அளவில் சுமார் 7 கோடி மக்கள் அகதிகளாக உள்ளனர். அவர்களில் பாதிப்பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.

ஐ.நா. அகதிகள் ஆணையம் (UNHCR) இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு இன்றோ நேற்றோ தோன்றியதல்ல. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது பல நாடுகளுக்கு சிதறி ஓடிய ஐரோப்பியர்களின் மறுவாழ்வுக்காக, ஐ.நா. பொதுக்குழுவால் 1950 டிசம்பர் 14-ம் தேதி இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் மூன்று ஆண்டுகள் இயங்கினால் போதும் என்று வரையறுக்கப்பட்டது. ஆனால் அதன் தேவை தொடர்ந்துகொண்டே இருக்க, இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதுதவிர, சர்வதேச புலம்பெயர்வு நிறுவனம் மற்றும் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை இந்த ஆணையத்துடன் இணைந்தும் தனித்தனியாகவும் அகதிகள் நலனுக்காக செயல்பட்டு வருகின்றன.

சமீபகாலமாக எந்த நாட்டிலிருந்து மிக அதிக அளவிலான மக்கள் அகதிகளாக வெளியேறுகின்றனர்? சந்தேகமில்லாமல் சிரியாதான். அங்கு கடந்த 7 ஆண்டுகளாக நடைபெறும் உள்நாட்டுப் போரால் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்திருக்கிறார்கள். 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள்.

அந்த நாட்டுக்கு உள்ளேயே இடம் பெயர்பவர்கள் 63 லட்சம் பேர். நாட்டுக்குள் இடம் பெயர்வது என்றால் பணியிட மாற்றல் போல அல்ல. தங்களுக்கான பள்ளிகளும், குடியிருப்புப் பகுதிகளும், மருத்துவமனைகளும் குண்டு வீச்சு தாக்குதலால் உருக்குலைந்து போக, வேறு வழியில்லாமல் நாட்டின் பிற பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். உயிருக்குப் பயந்து நாட்டில் மிக உள்ளடங்கிய பகுதிகளில் வசிக்கும் பலருக்கும் மனிதாபிமான முறையில்கூட உதவிகளை வழங்க முடியாத துர்பாக்கிய நிலை தோன்றியிருக்கிறது. கடுமையான உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதையும் தாண்டி சிரியாவிலிருந்து அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்தவர்கள் 40 லட்சத்துக்கும் அதிகம். சிரியா மக்களில் பலர் லெபனான், ஜோர்டான், எகிப்து, ஈராக் போன்ற நாடுகளில் தஞ்சம் அடைகிறார்கள்.

அதிக அளவு அகதிகளை உருவாக்கும் அடுத்த நாடு துருக்கி.

ஐ.நா.வின் அமைதிப்படை அகதிகளை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. அவர்களுக்கு உணவு, தண்ணீர், ஆரோக்கியமான சுற்றுப்புறம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் கிடைக்க முயற்சி செய்கிறது.

இதர காரணங்கள்

போர் என்பது ஒருபுறம் இருக்க, வெள்ளம், நிலநடுக்கம், புயல், நிலச்சரிவு ஆகிய காரணங்களால் இடம் பெயர்பவர்களும் உண்டு. இவர்களில் பலரும் தங்கள் நாட்டிலேயே உள்ள வேறு பகுதிக்கு இடம் பெயர்வதுதான் வழக்கம். என்றாலும் வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்வதும் அதிகரித்து வருகிறது – முக்கியமாக சிறிய நாடுகளிலிருந்து பெரிய நாடுகளுக்கு.

ஐ.நா. பொதுச்சபை 2016 செப்டம்பர் 19-ம் தேதி ஒரு உயர்மட்டக் குழு கூட்டத்தைக் கூட்டியது. அதில் அகதிகள் விஷயத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்த மற்றும் மனிதாபிமான கண்ணோட்டத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என அடிக்கோடிட்டுக் காட்டியது.

தன்னை அகதி என்று கூறிக்கொண்டு பிற நாட்டுக்குச் செல்பவர், தனது அடையாளத்தையும் அகதியாக வந்ததற்கான காரணத்தையும் கூறி விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் பெரும் கூட்டமாக அகதிகள் வந்து சேரும் நிலை ஏற்பட்டால், இப்படி தனித்தனியாக விண்ணப்பிப்பதும், அவற்றைப் பரிசீலிப்பதும் நடைமுறைக்கு சாத்தியமில்லாமல் போகலாம். இந்தச் சூழலில் குழுவாகவே அவர்களை அகதிகளாகக் கருதலாம் என்றது இந்த மாநாடு.

ஐ.நா. அகதிகள் அமைப்பின் முக்கியச் செயல்பாடுகள் என்ன? ஒரு நாட்டில் மிக அதிக அளவில் அகதிகள் குடியேறும்போது அந்த அரசால் அவர்களுக்குப் போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது இயலாமல் போகலாம். அப்போது மேற்படி ஐ.நா. அமைப்பு அவர்களுக்கு உதவி செய்யும். ‘தற்காலிகப் பாதுகாப்பு’ அளிக்கும்.

அகதிகள் பரிதாபமானவர்கள். சொந்த நாட்டிலிருந்து விரட்டப்பட்டவர்கள் அல்லது விரட்டப்படும் சூழலுக்கு ஆளானவர்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உரிமைகள் உண்டா? சில உரிமைகளை ஐ.நா.சபை வரையறுக்கிறது. அகதிகளை வற்புறுத்தி சொந்த நாட்டுக்கே அனுப்பக் கூடாது - முக்கியமாக அங்கு அவர்கள் அபாயகரமான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற நிலையில் திருப்பி அனுப்பக் கூடாது. அகதிகளிடையே பாரபட்சம் காட்டக் கூடாது.

ஓர் அகதியின் வாழ்க்கைத் துணைவரோ, குழந்தையோ பின்னர் அவருடன் வந்து சேரும்போது, மனிதாபிமான கண்ணோட்டத்தில் அதை அனுமதிக்க வேண்டும்.

அகதிகளின் உயிருக்கு பாதுகாப்பு என்பதோடு நின்றுவிடாமல் அவர்களுக்கு வேறு சில வசதிகளையும் செய்துதர வேண்டும். அதாவது அந்த நாட்டில் சட்டபூர்வமாகக் குடியேறி இருக்கும் பிற நாட்டு மக்களுக்கு சமமாக அகதிகளையும் நடத்த வேண்டும். அகதிகளுக்கு மருத்துவம், பள்ளிக்கூடம், பணியாற்றும் உரிமை ஆகியவற்றை வழங்க வேண்டும்.

உடை கட்டுப்பாடு, வாழ்க்கைத் துணைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மறுப்பு ஆகிய காரணத்துக்காக ஒரு பெண் தனது நாட்டிலிருந்து வேறு நாட்டுக்கு தஞ்சமடைந்தாலும் அவரை அகதியாகக் கருதி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால் அகதிகளும் எந்த நாட்டில் தஞ்சமடைகிறார்களோ அந்த நாட்டின் சட்டத்திட்டங்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும். ஒரு குற்றவாளியை அகதியாகக் கருதி ஏற்றுக் கொள்ள முடியுமா? அதேநேரம் அரசியல் காரணங்களுக்காக மட்டும் ஒருவரை அவரது நாடு குற்றவாளியாகக் கருதினால் அவர் வேறொரு நாட்டில் அகதியாக தஞ்சம் புகலாம்.

வளரும் நாடுகளின் பங்கு..

* உலக அகதிகளில் 86 சதவீதம் பேருக்கு தஞ்சம் கொடுத்திருப்பது வளரும் நாடுகள்தான்.

* பிரபலமான பல வி.ஐ.பி.கள் பிரிட்டனில் தஞ்சம் புகுவதுண்டு. ஆனால் உலகின் மொத்த அகதிகளில் வெறும் 0.6 சதவீதம்பேர்தான் பிரிட்டனில் இருக்கிறார்கள்.

* உலக அகதிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் சிரியா, ஆப்கானிஸ்தான், சோமாலியா ஆகிய மூன்றே நாடுகளிலிருந்து குடிபெயர்ந்தவர்கள்.

* சில நாடுகளில் 18 வயதைத் தாண்டியவர்கள் சில காலம் ராணுவத்தில் கட்டாயப் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். இதைத் தவிர்ப்பதற்காக வேறு நாட்டுக்குச் செல்பவர்கள் உண்டு. இவர்களை அகதிகளாகக் கருதலாமா என்ற விவாதம் முன்பு நடந்ததுண்டு. அவர்களையும் அகதிகளாகக் கருதலாம் என்பதுதான் தற்போதைய நிலை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

இந்தியா

25 mins ago

ஆன்மிகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்