ஆர்எஸ்எஸ் விழாவில் பங்கேற்க பிரணாப் முகர்ஜிக்கு எதிர்ப்பு ஏன்?- ஆர்எஸ்எஸ்-ஸின் செயல்பாடுகளும்.. அதன் பின்னணியும்..

By செய்திப்பிரிவு

 

ஆர்எஸ்எஸ் என்றழைக்கப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் பயிற்சி முகாம் நிறைவு விழா, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெறவுள்ளது. இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்ள இருப்பது நாடெங்கும் பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஒருவர் ஆர்எஸ்எஸ்-ஸை ஆதரிப்பதும் அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் புதிதல்ல. முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ஜாகீர் உசேன், அப்துல் கலாம் ஆகியோர் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர். 1963 குடியரசு தின விழா அணி வகுப்பில் ஜவஹர்லால் நேருவின் அழைப்பின்பேரில் 3,600 ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சீருடையுடன் பங்கேற்றனர். 1965 சீனப் போரின்போது நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் அழைப்பின்பேரில் ஆர்எஸ்எஸ் தலைவர் குருஜி கோல்வால்கர் பங்கேற்றார்.

விடுதலைக்குப் முன்பு 1925-ல் டாக்டர் ஹெட்கேவரால் ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்டது. அப்போதிருந்தே அது சர்ச்சைக்குரிய இயக்கமாகவே இருந்து வருகிறது. ஆர்எஸ்எஸ் முன்னிறுத்தும் இந்து தேசியவாதம் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கும் மதச் சார்பற்ற தன்மைக்கும் ஆபத்தாக அமை யும் எனக் கூறி காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக எதிர்த்தனர். விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காமல் ஆங்கிலேயர்களுடன் சமரசம் செய்து கொண்டதாக குற்றம் சாட்டப் பட்டது.

3 முறை தடை

1948 காந்தி படுகொலை செய்யப்பட்டபோதும், அவசர நிலை (1975-77) அமலில் இருந்தபோதும், 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதும் ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்டு இருந்தது. மதச் சார்பின்மையை வலியுறுத்திவரும் காங்கிரஸ் ஆர்எஸ்எஸ்ஸை எதிர்த்தே அரசியல் நடத்தி வருகிறது. பிரணாப் முகர்ஜி முன்னாள் குடியரசுத் தலைவர் மட்டுமல்ல; இந்திரா காந்தி காலம் முதல் காங்கிரஸின் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர். காங்கிரஸின் முக்கியமான ஒரு முகம். எனவேதான் அவர், ஆர்எஸ்எஸ் விழாவில் கலந்து கொள்வதை ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் போன்ற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

ஆர்எஸ்எஸ்ஸின் மதவாத கொள்கைகளை எதிர்த்து காங்கிரஸ் போராடி வரும் நிலையில், பிரணாப் அந்த அமைப்பின் விழாவில் பங்கேற்பது கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என காங்கிரஸ் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அமைப்பும் செயல்பாடும்

தொண்டர்களுக்கு தினசரி ஷாகா மூலம் பயிற்சி அளிப்பது, பயிற்சி முகாம்கள் நடத்துவதுதான் ஆர்எஸ்எஸ்ஸின் முக்கிய செயல்பாடாக உள்ளது. ஆரம்பநிலை, முதல் ஆண்டு, 2-ம் ஆண்டு 3-ம் ஆண்டு என 4 பயிற்சி முகாம்கள் நடக்கின்றன.

இதை முடிப்பதுதான் ஒவ்வொரு ஆர்எஸ்எஸ் தொண்டரின் கடமை. 3-ம் ஆண்டு பயிற்சி முகாம் நாக்பூர் தலைமையகத்தில் மட்டுமே நடக்கும். 25 நாட்கள் நடக்கும் இந்த முகாமியில் தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 42 பேர் கலந்து கொண்டுள்ளனர். இன்று மாலை நடைபெறும் இந்த முகாமின் நிறைவு விழாவில்தான் பிரணாப் பங்கேற் கிறார்.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ்

1925-ல் ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே தமிழகத்திலும் அந்த அமைப்பு தொடங்கப்பட்டுவிட்டது. அதன் தலைவர் ஹெட்கேவரால் சென்னைக்கு அனுப்பப்பட்ட மராட்டியரான தாதாராவ் பரமார்த், சென்னை கோபாலபுரத்தில் முதல் ஷாகாவை தொடங்கினார்.

அதன்பிறகு சென்னை அனுப்பப்பட்ட சிவராம் ஜோக்லேக்கர் என்ற மராட்டியர் பெரம்பூரில் இருந்த பின்னி மில் தொழிலாளர்கள் பலரை ஆர்எஸ்எஸ் பக்கம் ஈர்த்தார். பின்னர் சவுராஷ்டிரர்கள் அதிகம் இருக்கும் மதுரை, சேலம், பரமக்குடி உள்ளிட்ட இடங்களில் ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்டது.

சுவாமி சித்பவானந்தர் ஆர்எஸ்எஸ்-ஸை ஆதரித்ததால் கொங்கு மண்டலத்தில் உள்ள அவரது பக்தர்கள் பெருமளவில் அந்த அமைப்பில் இணைந்தனர். அப்பகுதியில் ஆர்எஸ்எஸ்ஸின் வளர்ச்சிக்கு இதுவே காரணம்.

இந்தியா தவிர இலங்கையில் இந்து ஸ்வயம்சேவக சங்கம் (எச்எஸ்எஸ்) என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் இயங்கி வருகிறது.

கடந்த ஏப்ரல் - மே மாதத்தில் தமிழகத்தில் 6 இடங்களில் ஆர்எஸ்எஸ் முகாம்கள் நடந்தன. இதில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயிற்சி பெற்றுள்ளனர். 7 நாள் ஆரம்பநிலை பயிற்சி முகாம் முடித்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இவர்களில் 50 சதவீதத்தினர் பள்ளி மாணவர்கள்.

பாஜகவை இயக்கும் ஆர்எஸ்எஸ்

பாரதிய ஜனதா கட்சியை பின்னணியில் இருந்து ஆர்எஸ்எஸ் இயக்குவதாக சொல்லப்படும் கூற்றை பாஜக மறுத்ததே இல்லை. மறுக்கவும் முடியாது. பாஜகவில் தேசிய தலைவருக்கு இணையான அதிகாரம் கொண்ட பதவி தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர். அதுபோல மாநிலத் தலைவருக்கு இணையானது மாநில அமைப்பு பொதுச்செயலாளர்.

இந்த அமைப்பு பொதுச்செயலாளர் களுக்கு உதவியாக தேசிய, மாநில அளவில் இணை அமைப்பு பொதுச்செயலாளர்களும் உண்டு. இவர்களை மீறி பாஜகவில் மோடி, அமித்ஷா கூட எந்த முடிவையும் எடுக்க முடியாது.

இந்த சர்வ அதிகாரம் கொண்ட அமைப்பு பொதுச்செயலாளர்களாக ஆர்எஸ்எஸ் முழுநேர ஊழியர்கள் மட்டுமே இருக்க முடியும். தேசிய, மாநில, 4 மாவட்ட அளவில் பாஜகவைக் கட்டுப்படுத்த ஒரு குழுவினையும் ஆர்எஸ்எஸ் அமைத்துள்ளது. வேட்பாளர் தேர்வு முதல் உட்கட்சி மோதல் வரை முக்கியப் பிரச்சினைகளை இந்தக் குழுதான் தீர்மானிக்கும். இவ்வளவையும் செய்யும் ஆர்எஸ்எஸ் முழுநேர ஊழியர்கள் மேடையில் அமர மாட்டார்கள். ஊடகங்களில் தலைகாட்ட மாட்டார்கள். இவர்கள் தேர்தலிலும் போட்டியிடவும் முடியாது. அதனால் அவர்களை யாருக்கும் தெரியாது.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ்ஸில் 150-க்கும் அதிகமான முழுநேர ஊழியர்களும் பாஜக, இந்து முன்னணி, ஏபிவிபி,, சேவா பாரதி, விசுவ இந்து பரிஷத், வனவாசி கல்யாண் ஆசிரமம், வித்யா பாரதி, பாரதிய மஸ்தூர் சங்கம், பாரதிய கிசான் சங்கம் போன்ற துணை அமைப்புகளில் 500 முழுநேர ஊழியர்கள் என 650-க்கும் அதிகமானோர் உள்ளனர்.

பாலர் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை நாடு முழுவதும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளை ஆர்எஸ்எஸ் நடத்துகிறது. தமிழகத்தில் மட்டும் 200 பள்ளிகள் உள்ளன. நாடு முழுதும் 50-க்கும் அதிகமான துணை அமைப்புகள் உள்ளன. இப்படி நாடெங்கும் வலுவாக காலூன்றி இருப்பதால்தான் பாஜகவால் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. ஆர்எஸ்எஸ் எதையும் வெளிப்படையாக பேசுவதில்லை. உறுப்பினர் சேர்க்கையும் கிடையாது. எனவே ஆர்எஸ்எஸ் பற்றிய விவரங்கள் யாருக்கும் சரியாகத் தெரிவதே இல்லை.

முதல் கூட்டணி அமைத்த காமராஜர்

1998 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததற்கு ஜெய லலிதா மீது கடும் விமர்சனம் எழுந்தது. ஆனால், உண்மையில் தமிழகத்தில் பாஜகவுடன் முதல் கூட்டணி வைத்தவர் காமராஜர். 1971 தேர்தலில் காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸுடன் ராஜாஜியின் சுதந்திரா கட்சி, ஜனசங்கம் (பாஜகவின் முந்தைய பெயர்) கட்சிகள் கூட்டணி அமைத்தன. பின்னர் மதுரை மாநகராட்சியில் திமுகவும் காங்கிரஸும் சம அளவு இடங்களைப் பிடித்தபோது ஒரே ஒரு கவுன்சிலர் இடத்தைப் பிடித்த ஜனசங்கம் திமுகவை ஆதரித்தது. இதனால் திமுகவுக்கு மேயர் பதவி கிடைத்தது. தமிழக சட்ட மேலவை தேர்தலில் ஜனசங்கம் ஆதரவுடன் திமுக முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் வெற்றி பெற்றார். 1999 மக்களவைத் தேர்தல், 2001 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக - பாஜக கூட்டணி ஏற்பட்டதும், 1999 முதல் 2004 வரை வாஜ்பாய் அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்ததும் அனைவரும் அறிந்த வரலாறு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

8 mins ago

சுற்றுலா

20 mins ago

தமிழகம்

51 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்