பாலியல் அத்துமீறலும் பேசப்படாத உண்மைகளும்: பின்னணியிலுள்ள ‘பெரிய கைகள்’ தண்டிக்கப்பட வேண்டும்!

By கலைச்செழியன்

றிவுக்கோயில்களாக கருதப்படும் கல்வி நிறுவனங்களில் அறிவுக்குப் புறம்பான, ஒழுக்கக்கேடான காரியங்கள் நடந்தேறுவது பெரும் சோகம். அருப்புக்கோட்டை சம்பவம்போல வெளியே தெரிபவை பனிமலையின் சிறுநுனி மட்டுமே. உண்மை பனிமலைபோல கடலுக்கு உள்ளே ஒளிந்துகொண்டிருக்கிறது. தங்கள் மீதான பாலியல் அத்துமீறல்களை வெளியே சொல்லாமல் விழுங்கித் தீர்க்கும் ஆய்வு மாணவிகள் பலரைப் பற்றி நம்மில் யாரும் சிந்திப்பதில்லை. பல்கலைக்கழகமொன்றில் முக்கியப் பொறுப்பில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவன் என்ற முறையில், இரண்டு சம்பவங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.

சம்பவம் 1:

தமிழகத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துக்கு வெளிநாட்டிலிருந்து ஒரு இளம் ஆய்வு மாணவி வந்திருந்தார். இவரது ஆய்வு வழிகாட்டி பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர். ஒரு விடுமுறை நாளில் என் அறைக்குள் பதற்றத்துடன் நுழைந்த அந்த மாணவி “தலைவலி தாங்கமுடியவில்லை உடனே ஒரு காபி வரவழைக்க முடியுமா?” என்றார். அதேசமயம் வெளியே வழக்கமாக சைக்கிளில் காபி கொண்டுவரும் பையனின் மணிச்சத்தம் கேட்டது. அவன் காபியைக் கொண்டுவந்து அந்தப் பெண்ணின் முன்னால் வைத்து “வணக்கம்மா’” என்றான் பணிவுடன் எட்ட நின்றபடி.

அந்தப் பையன் போனதும் “ஏன் இந்தப் பதற்றம்?” என்று கேட்டேன்.

அந்தப் பெண் தயக்கத்துடன் சொன்னார், “என் துறைத் தலைவர் சற்றுமுன் என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார். கடந்த சில மாதங்களாகவே அவர் தவறான நோக்கத்துடன் பார்ப்பதும் விரசமாகப் பேசுவதுமாக இருந்தார். நான் அவற்றைப் புறந்தள்ளுவது வழக்கம். இன்று நிலைமை மோசம். என்ன செய்யட்டும் சொல்லுங்கள்” என்றார்.

“துணைவேந்தரிடம் புகார் அளிக்கலாம்” என்று சொன்னேன். பேராசிரியருக்கும், பல்கலைக்கழகத்துக்கும் கெட்ட பெயர் வேண்டாம் என்று அந்தப் பெண் மறுத்துவிட்டார். அதேசமயம், ஆண்கள் என்றாலே வெறுப்பு எனும் நிலைக்கு வந்துவிட்டதாகச் சொன்னார்.

“இங்கே இருக்கும் எல்லா ஆண்களையுமா வெறுக்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

“சற்றுமுன் வந்து சென்றானே, அந்த காபி பையன். நான் இங்கு பார்த்தவர்களில் அவன் மட்டும்தான் என்னைத் தவறான நோக்கத்தில் பார்க்கவில்லை. அவன் பார்வையில் மட்டும்தான் ஒரு கண்ணியம் இருக்கிறது” என்றார் அந்த வெளிநாட்டு மாணவி. கடைசியில் அந்தப் பெண்ணின் ஆய்வேடு என்னவாகியிருக்கும் என்பதைச் சொல்லவே தேவையில்லை!

சம்பவம் 2:

பொதுவாகவே, பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பிரிவு மட்டும் இரவு எட்டு ஒன்பதுவரை பணியில் மூழ்கி இருக்கும். அன்றைக்கு பதிவாளர் அறையில் விளக்கு எரிந்தது. பதிவாளர் பிரிவில் எல்லோரும் போய்விட்டார்கள். ஒரு எழுத்தர் பெண்மணி மட்டும் பதிவாளர் அறைக்குள் கோப்புடன் சென்றார்.

திடீரென்று அந்தப் பெண் என் அறைக்குள் ஓடிவந்து, “சார், எனக்கு பயமா இருக்கு! பதிவாளர் என்கிட்டே தப்பா நடக்க பார்க்கிறார்” என்று சொன்னார்.

பல நாட்கள் இந்தப் பிரச்சினை இருந்திருக்கிறது. அந்தப் பெண்ணிடம் தவறான அர்த்தத்தில் பேசியிருக்கிறார் அந்தப் பதிவாளர். சில சமயம் கோப்பில் பணம் வைத்து அனுப்புவாராம். திருப்பிக் கொடுத்தால், ‘உனக்குப் பிடிச்சதை வாங்கிக்கோ’ என்று சொல்வாராம். இதையெல்லாம் என்னிடம் சொல்லி அழுதார் அந்தப் பெண். அந்தப் பெண்ணுடன் துணைவேந்தர் அறைக்குச் சென்றேன். பதிவாளர் நடந்துகொண்ட விதம் குறித்து துணைவேந்தரிடம் அந்தப் பெண் சொன்னார். நடந்ததை எல்லாம் பொறுமையாகக் கேட்ட துணைவேந்தர் அந்தப் பெண்மணியை உடனே வீட்டுக்குத் திரும்புமாறு கூறினார்.

பதிவாளரை அழைத்துவருமாறு உதவியாளருக்கு உத்தரவிட்டார். சற்று நேரத்தில், பதிவாளர் கைகளைப் பிசைந்தபடி உள்ளே நுழைந்தார். “ஐயா தப்பு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க...”என்றார்.

பத்து நிமிடம்தான் உரையாடல். பதிவாளர் பதவி பறிக்கப்பட்டது. இரவோடு இரவாக வீட்டைக்காலி செய்துவிட்டு வெளியேறினார்.

இந்த அசிங்கங்கள் தமிழகக் கல்வித் துறையில் தொடர்ந்து நடந்துவருகின்றன. இந்தக் கொடுமை இனியும் தொடராமல் இருக்க உறுதியான நடவடிக்கை அவசியம். நிர்மலா தேவியோடு இந்த விஷயம் முடிந்துவிடக் கூடாது. இதன் பின்னணியிலுள்ள ‘பெரிய கைகள்’ அத்தனையும் வெளிக்கொணரப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும்!

(கட்டுரை ஆசிரியர் கேட்டுக்கொண்டதற்கிணங்க

அவரது பெயர் மாற்றப்பட்டிருக்கிறது)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

விளையாட்டு

44 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

4 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்