எப்படி நடந்தது இந்திய சட்டசபைத் தேர்தல்?

By கோ.ரகுபதி

இந்திய சுதந்திரப் போராட்டம் நாளுக்கு நாள் வீரியமடைந்து வந்ததைக் கவனித்த பிரிட்டிஷ் இந்திய அரசு, அதைத் தணிக்க அதிகார மையங்களில் இந்தியர்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்க முன்வந்தது. ஒரு வகையில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அந்த முடிவு, இந்தியாவில் மக்களாட்சிக்கு வித்திட்டது.

இக்காலத்தில் சுதந்திர, சுயமரியாதை, சமத்துவ உரிமைப் போராட்டங்களாலும் கூர்மையான விவாதங்களாலும் சென்னை மாகாணம் அரசியல்மயமாகிக் கொண்டிருந்தது. இச்சூழலில், இந்திய சட்டசபைத் தேர்தல் 1934 நவம்பர் 10 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தேர்தல் வேலைகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கின.

அப்போது இந்திய சட்டசபையின் மொத்த இடங்கள் 144. இவற்றில் அரசாங்கத்தால் நியமிக்கப்படுவோர் 40; மீதமுள்ள 104இல் இஸ்லாமியர்களுக்கு 30, ஐரோப்பியர்களுக்கு 8, வியாபாரிகளுக்கு 4, நிலச்சுவான்தார்களுக்கு 7, சீக்கியர்களுக்கு 2 என 51 போக மீதமுள்ள 53 இடங்கள் பொதுத் தேர்தலுக்கு விடப்பட்டன.

இதில், சென்னைக்கு 10, பம்பாய் 7, வங்காளம் 6, ஐக்கிய மாகாணம் 8, பஞ்சாப் 3, பிஹார்-ஒடிஷா 8, மத்திய மாகாணம் 4, அஸ்ஸாம் 2, டெல்லி 1,பர்மா 3, அஜ்மீர் 1 எனப் பிரிக்கப்பட்டன.

சென்னை மாகாணத்தில்… சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை இத்தேர்தல் தங்களின் கெளரவத்தையும், செல்வாக்கையும் நிலை நிறுத்துவதாகக் காங்கிரஸ், நீதிக் கட்சிகள் கருதின. இத்தேர்தல் காங்கிரஸுக்கும் பிரிட்டிஷ் அரசுக்குமான போராட்டம் என்பதால், பிற கட்சிகள் இதிலிருந்து விலக வேண்டுமென காங்கிரஸ் கூறியது.

இத்தேர்தல், காங்கிரஸுக்குள் பிளவை ஏற்படுத்தியது; பிராமணர்-பிரமணரல்லாதோர் மோதலாகவும் இருந்தது. இவ்விரு கட்சிகளும் மக்களின் பிரதிநிதிகள் அல்ல என்று சிலர் சுயேச்சையாகக் களமிறங்கினர்.

காங்கிரஸ் சார்பில் சென்னை வர்த்தகர் தொகுதியில் சாமி வேங்கடாசலம் செட்டியார், சென்னை நகரத்தில் எஸ்.சத்தியமூர்த்தி, செங்கல்பட்டு - தென் ஆர்க்காட்டில் சி.என்.முத்துரங்க முதலியார், தஞ்சை – திருச்சியில் டாக்டர். தி.செ.செள.ராஜன், மதுரை – ராமநாதபுரம் – திருநெல்வேலியில் பி.எஸ்.குமாரசாமி ராஜா, கோவை – சேலம் – வட ஆர்க்காட்டில் டி.எஸ்.அவிநாசிலிங்கம் செட்டியார், நீதிக்கட்சி சார்பில் சென்னை நகரத் தொகுதியில் ஏ.ராமசாமி முதலியார், மதுரை - திருநெல்வேலி - ராமநாதபுரம் மாவட்ட பொதுத் தொகுதியில் வி.வி.இராமசாமி, வியாபாரிகள் தொகுதியில் இந்திய சட்டசபைத் தலைவர் ஆர்.கே.ஷண்முகம், சுயேச்சைகளாக சேலம் – கோவை - வட ஆர்க்காடு மாவட்டத் தொகுதியில் டாக்டர் பி.வரதராஜுலு, சென்னை நகராட்சியின் முன்னாள் உதவி வருவாய் அதிகாரி பி.சிவபூஷண முதலியார், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களின் இஸ்லாமியர் அல்லாத தொகுதியில் டி.ஆர்.வேணுகோபால் செட்டியார் ஆகியோர் போட்டியிட்டனர்.

கோவை – சேலம் - வட ஆர்க்காடு தொகுதியில் வேட்பாளரை நிறுத்தாத நீதிக்கட்சி, பி.வரதராஜுலுவை ஆதரித்தது. “வரதராஜுலு ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்தவரல்லர் ஆயினும், அவருடைய பொது வாழ்க்கையில் அவர் ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கையைப் பொதுவாக ஆதரித்தே வந்திருக்கிறார். நமது அரசியல் திட்டத்தில், அவர் வேறுபாடுள்ள அபிப்பிராயம் உடையவராயினும், நமது சமுதாயத் திட்ட விஷயத்திலும், பிராமணர் அல்லாதாருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற விஷயத்திலும் அவர் நமக்குப் பெரிதும் உதவியாக இருந்துள்ளார்” எனத் தங்கள் ஆதரவை நீதிக்கட்சியினர் நியாயப்படுத்தினர்.

“இவரைப் போன்ற தேசபக்தர்கள் இந்திய சட்டசபையில் இடம்பெற்றால் நாட்டு மக்களுக்கு நன்மை” என வட ஆர்க்காடு மாவட்ட வாரிய அங்கத்தினர்கள் அறிக்கை வெளியிட்டனர். சுதந்திரப் போராட்டத்தில் அனுபவித்த சிறைவாசமும், முதுகுத் தழும்புகளும், அரசாங்கம் கொடுத்த பட்டங்களும் வேட்பாளரின் தகுதிகளாக எடுத்துரைக்கப்பட்டன. பத்திரிகைகள் தங்கள் அரசியல் நிலைப்பாட்டையும் ஆதரவையும் வெளிப்படையாக எழுதின.

அந்தக் காலகட்டத்தில், ‘வேட்பாளர்’, ‘வாக்காளர்’ என்ற சொற்களுக்குப் பதிலாக, ‘அபேட்சகர்’, ‘ஓட்டர்’ ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. வாக்காளர்களின் சாதிகளும் கணக்கிடப்பட்டன.

வேட்பாளருக்காக வாக்காளர்கள்: வரதராஜுலுவின் தேர்தல் பிரச்சாரம், செப்டம்பர் 1 முதல் 14ஆம் தேதிவரை வட ஆர்க்காட்டிலும் 15 முதல் 25ஆம் தேதிவரை கோயம்புத்தூர் மாவட்டத்திலும் பின்னர், சேலம் மாவட்டத்திலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆம்பூரிலும் சுற்றுப்புறக் கிராமங்களிலும் முக்கிய நபர்களைச் சந்தித்த வரதராஜுலுவுக்கு ஆம்பூர் ஒன்றிய வாரியத் தலைவர் முகம்மது உஸ்மான் சாகிப் மதியவேளையில் கொடுத்த சமபந்தி விருந்தில் அம்மாவட்டத்தைச் சேர்ந்த 100 முக்கிய நபர்கள் பங்கேற்றனர்.

கோயம்புத்தூர் டவுன் ஹால் மைதானத்தில் 12.10.1934 அன்று வரதராஜுலுவுக்காகச் சுமார் 6,000 பேர் திரண்டிருந்த கூட்டத்தில், “எப்படிப்பட்ட நியாயமான, யோக்கியமான கொள்கைகள் கொண்ட அபேட்சகரும் ஜனங்களிடையில் வந்து தங்களது அபிப்பிராயங்களையும், நிலைமைகளையும் சொல்லித்தீர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது” என்று பெரியார் பேசினார்.

சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் ஏ.ராமசாமி முதலியாருக்காக 02.11.1934 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பெண்கள் உள்படச் சுமார் 4,000 பேர் திரண்டனர். ‘தேக சிரமத்தைப் பாராமல் அல்லும் பகலும்’ குழந்தைகளும், பெண்களும், ‘பெயர் தெரியாத தீரன்க’ளும் காங்கிரஸுக்காகப் பணியாற்றினர். சுவர்களில் தேர்தல் விளம்பரங்கள் செய்யப்பட்டன. வேட்பாளருக்காகக் கூட்டங்களையும் விருந்துகளையும் வாக்காளர்களும் பொதுமக்களும் நடத்தினர்; இவர்களே பணமும் செலவிட்டனர்!

வாக்களித்த விழா: 1934 நவம்பர் 9ஆம் தேதி இரவில் சிவராத்திரி போன்று மக்கள் விழித்திருந்தனர். சென்னையில் மூலை முடுக்கெல்லாம் பஜனை கோஷங்களும் ஊர்வலங்களும் நடைபெற்றன. 10ஆம் தேதி காலை 5 மணிக்கு சென்னைத் தெருக்களில் மோட்டார் வாகனங்கள் ஹாரன் கூவிக்கொண்டு இங்குமங்கும் அலைந்தன. வாக்குச்சாவடி அருகில் உள்ள கட்சித் தேர்தல் அலுவலகங்களில் 6 மணிக்கு மக்கள் கூடினர்.

7 மணி அடித்ததும் வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டதும் நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் ‘நான் முந்தி, நீ முந்தி’ என்று வாக்களிக்க வெகு ஆவலாக நின்றனர். தேர்தல் அலுவலர்கள் வெகு பாடுபட்டனர். சிலர் இதற்கு முன் எவ்வளவோ தேர்தல்களைப் பார்த்தாலும் இந்த மாதிரி அமர்க்களத்தைப் பார்த்ததில்லை.

அவர்கள் சற்றுக் குழப்பமடைந்தனர். சிலருக்கு இதுதான் முதல் அனுபவம் என்பதால் செய்வதறியாது திகைத்தனர். வாக்காளர்களில் பாதிப் பேருக்கு எழுதப் படிக்கத் தெரியாது! இவர்கள் யாருக்கு வாக்களிக்க விருப்பம் என்று பகிரங்கமாகச் சொல்லியே வாக்களிக்க வேண்டும்.

“யாருக்கு நீ வோட்டுப் போடப்போகிறாய்?” என்று முறைப்படி தேர்தல் அதிகாரி கேட்பார். வேட்பாளரின் பெயரைச் சொல்லி வாக்களித்தனர். ஒரு பெண் காங்கிரஸை ஆதரிப்பதாகக் கூறியதால், தேர்தல் அலுவலர் அதைப் பதிவுசெய்யச் சென்றார். ஆனால், அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கையில்லை.

“இல்லிங்க உங்ககிட்டே அந்த வோட்டைக் கொடுக்க மாட்டேன். அவருகிட்டேதான் நேரே கொடுப்பேன்” என்று கண்டிப்பாகக் கூறவே, “யாரிடத்தில்?” என்று கேட்டார் தேர்தல் அலுவலர். “காங்கிரஸ் (சத்தியமூர்த்தி) அய்யரு, என்னைக்கூட நேரிலே வந்து கண்டுகிட்டுப் போனாரு. அவரண்டதான் நேரிலே கொடுத்துடுறேன்” என்றார். சத்தியமூர்த்தி நேரில் இல்லாவிட்டாலும், வோட்டு அவரிடம் சேர்ந்துவிடும் என்று அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கையூட்டி அவரது வாக்கு பதிவுசெய்யப்பட்டது.

ராஜபாளையம் வர்த்தகர் தொகுதியில் உள்ள மூன்று வாக்காளர்களில் இருவர் ஷண்முகத்துக்கு வாக்களிப்பதாகக் கூறினர். இவர்களில் ஒருவராகிய சத்திரப்பட்டி உப்புக்கடை இராமசாமி மூப்பனாருக்கு வந்த வாக்குச் சீட்டை, அவ்வூர் தபால் அலுவலகத்திலிருந்து பெற்றுச் சென்றபோது ஒருவர் பறித்தார்.

பின்னர், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து வேறொரு வாக்குச் சீட்டைப் பெற்று வாக்களித்தார். தேர்தல் முடிந்ததும் அன்றிரவு ஊர்வலமாக கோஷங்கள் எழுப்பினர். சில தேர்தல் அலுவலர்கள் சீட்டுகளின் மேல் கையொப்பமிட மறந்ததால் பல சீட்டுகள் உபயோகமில்லாமல் போய்விட்டன. பிரிட்டிஷ்-இந்தியாவில் முக்கிய அரசியல் சூழலில் நிகழ்ந்த இத்தேர்தலில் காங்கிரஸ் வென்றது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

32 mins ago

சினிமா

53 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்