அரசியல் அழுத்தம் தராமல் உருவாகாது காவிரி மேலாண்மை வாரியம்!

By து.அரிபரந்தாமன்

கா

விரியில் தமிழ்நாட்டுக்கு உச்ச நீதிமன்றம் ஒதுக்கியிருக்கும் தண்ணீரானது தமிழ்நாட்டு விவசாயத்தின் மீது விழுந்திருக்கும் பேரிடி. ஆனாலும், ஏன் நம் விவசாயிகள் இழந்தததைப் பெரிதெனக் கருதாமல், டெல்லியின் நடவடிக்கை நோக்கி கண்களைத் திருப்பிக் காத்திருக்கிறார்கள்?

பங்கீட்டை உறுதிசெய்ய இந்தத் தீர்ப்பில் உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். ஆறு வாரங்களுக்குள் ஒரு செயல்திட்டத்தை உறுதிசெய்யுமாறு அது மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதைத்தான் உச்ச நீதிமன்றம் அப்படிக் கூறியிருக்கிறது. இழந்த தண்ணீர் போக தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள மிச்ச தண்ணீரேனும் தமிழகம் வருவதை இது உறுதிசெய்திடுமா என்ற எதிர்பார்ப்பில் ஆழ்ந்திருக்கிறார்கள் தமிழக விவசாயிகள்.

தமிழகத்தின் ஆளுங்கட்சி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டதாலேயே எல்லாம் சரியாகிவிடும் என்ற தோரணையில் இருப்பதுபோலவே தெரிகிறது. எதிர்க்கட்சிகளும் அடையாளரீதியான கருத்துகளைத் தாண்டி இதில் வினையாற்றவில்லை. ஆனால், உரிய அரசியல் அழுத்தம் தராவிட்டால் காவிரி மேலாண்மை வாரியம் அமைவது எளிதல்ல என்பதையும் உச்ச நீதிமன்றம் இப்போது ஒதுக்கியிருக்கும் குறைந்தபட்ச தண்ணீரையும் தமிழகம் தனதாக்கிக்கொள்ள வழியில்லை என்பதையும் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டும்.

அரை நூற்றாண்டாக இழுத்துக்கொண்டிருக்கும் இந்த விவகாரத்தை அதன் ஆதியிலிருந்து புரட்ட நான் விரும்பவில்லை. பத்தாண்டுகளுக்கு முன்பு 5-2-2007-ல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பு இங்கு எப்படி அணுகப்பட்டது என்பதை நாம் நினைவுகூர்ந்தாலே, நமக்கு முன்னிருக்கும் சவால் எவ்வளவு பெரியது என்பதை உணர்ந்துவிடலாம்.

நடுவர் மன்றத் தீர்ப்பு

இழுக்கடிக்கப்பட்ட கதை!

முன்னதாக, மத்திய அரசு 1970-களில் நியமித்த ‘காவிரி உண்மை அறியும் குழு’ அளித்த அறிக்கையில் தமிழகம் பெற்றுவந்ததாகக் குறிப்பிடப்பட்டதைக் காட்டிலும் குறைந்த தண்ணீரையே காவிரி நடுவர் மன்றம் தன்னுடைய இடைக்கால உத்தரவில் தமிழகத்துக்கு ஒதுக்கியது. இறுதித் தீர்ப்பிலோ மேலும் குறைத்து 192 டிஎம்சி தண்ணீரைத் தமிழகத்துக்கு இனி கர்நாடகம் தந்தால் போதுமானது என்று சொன்னது காவிரி நடுவர் மன்றம்.

கர்நாடகம் இதை ஏற்கவில்லை என்பது ஒருபுறமிருக்க இந்தத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடவே இழுத்தடித்தது மத்திய அரசு. காங்கிரஸ், பாஜக இரண்டுமே கர்நாடக ஓட்டரசியலைக் கணக்கில் கொண்டு தமிழகத்துக்கு பாதகமாகவே நடந்துகொண்டன. தமிழ்நாடு அரசு இதற்கென ஒரு பெரும் போராட்டம் நடத்தி, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பெற்ற பின்னர் 19-2-2013-ல்தான் மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது.

இதன் தொடர்ச்சியாகவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால், காவிரி நடுவர் மன்றம் ஒதுக்கீடு செய்த தண்ணீர் தமிழகத்தை வந்தடைய வேண்டும் என்றால், காவிரி நதியானது மேலாண்மை வாரிய நிர்வாகத்தின் கீழ் வந்தால்தான் அது சாத்தியம். ஆனால், அதை முற்றிலுமாக தவிர்த்தது மத்திய அரசு.

இதன் இடையே சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களும் தொடுத்திருந்த மேல் முறையீடுகள் உச்ச நீதிமன்றத்தில் இழுத்துக்கொண்டிருந்தன. பத்தாண்டுகள் ஆகிவிட்டிருந்தன. மேல்முறையீடுகள் விசாரணைக்கே வரவில்லை.

20,000 கன அடி நீருக்குப் பட்ட பாடு!

ஏற்கெனவே இருந்த மோசமான சூழலோடு கடுமையான வறட்சியும் வந்து சேர்ந்துகொள்ள 2016 காவிரிப் படுகையை மோசமாக தாக்கியது. பயிர்கள் கருகியதோடு விவசாயிகளின் பிணங்கள் விழத் தொடங்கின. விவசாயிகளின் தற்கொலைகள் தொடர் செய்தி ஆயின. ‘நட்ட பயிரைக் காப்பாற்ற தினம் 20,000 கனஅடி தண்ணீரையாவது வழங்க’ உத்தரவிடும்படி கோரி உச்ச நீதிமன்றத்திடம் நின்றது தமிழகம். “10,000 கன அடி மட்டுமே தர முடியும்” என்றது கர்நாடகம். அணைகளில் தண்ணீர் உள்ள அளவு, தமிழக விவசாயிகளின் பரிதாபச் சூழலை உணர்ந்த உச்ச நீதிமன்றம், ‘பத்து நாட்களுக்கு தினம் 15,000 கனஅடி தண்ணீர் தர வேண்டும்’என்று உத்தரவிட்டது.

அந்த உத்தரவைக்கூட ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது கர்நாடகம். ஆளும்கட்சியான காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாஜக இரண்டும் இந்த விஷயத்தில் கை கோத்தன. தொடர்ந்து வெடித்த போராட்டங்கள் பெரும் வன்முறைக்கு அடிகோலியது.

மீண்டும் மீண்டும் உச்ச நீதிமன்றப் படியேறியது கர்நாடகம். ‘தினம் 12,000 கனஅடி, தினம் 6,000 கனஅடி’என்று உத்தரவிட்டுவந்த உச்ச நீதிமன்றம், தண்ணீர் கொடுப்பதில் கர்நாடகத்துக்கு இருக்கும் கசப்பை உணர்ந்ததன் விளைவாகவே “மத்திய அரசு அடுத்த நான்கு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.

கூட்டாட்சி முறைக்கே சவால்!

உடனே 23-9-2016 அன்று கூடிய கர்நாடக சட்ட மன்றம் “உச்ச மன்றத் தீர்ப்பின்படி தண்ணீர் தர முடியாது” என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. இதன் மூலம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் துச்சமாக்கியதோடு கூட்டாட்சி முறையையே கேள்விக்குள்ளாக்கியது.

இக்கட்டான சூழலில் இதுகுறித்து 27-9-2016 அன்று இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் முகுல் ரோத்தகியிடம் கருத்து கேட்டது உச்ச நீதிமன்றம். அவர் மூன்று நாட்கள் அவகாசம் கேட்டார் . வழக்கை 30-9-2016- க்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம் இடைப்பட்ட மூன்று நாட்களுக்கு ‘தினம் 6000 கனஅடி தண்ணீர் தர வேண்டும்’ என்று உத்தரவிட்டது. அனைத்துக் கட்சி கூட்டத்தின் முடிவில் அதையும் புறந்தள்ளியது கர்நாடகம். அடுத்த நான்கு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து மூன்று நாட்களுக்குப் பின்னர் தன் கருத்தைத் தெரிவித்தார் முகுல் ரோத்தகி. “மத்திய அரசு இதை விரும்புகிறது; ஆனால், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒத்துழைப்பு அவசியம்” என்றார்.

அடுத்த சில வாரங்களுக்குள் மத்திய அரசின் உண்மையான முழு முகமும் வெளியே வந்தது. 3.10.2016 அன்று “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சொல்லி மத்திய அரசை உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது; மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமா, வேண்டாமா என்பதுபற்றி மத்திய அரசு தேவையான முடிவை எடுத்துக்கொள்ளும்; எனவே இதுகுறித்த உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் திரும்பப் பெற வேண்டும்” என்றும் கூறினார் முகுல் ரோத்தகி. கர்நாடக அரசின் சட்ட விரோதச் செயல்பாட்டுக்கு நேரடியாகவே துணைபோனது மத்திய அரசு!

இனி என்னவாகும்?

இத்தகைய பின்னணியில்தான் காவிரி மேலாண்மை வாரியத்துக்கான சாத்தியங்களை நாம் பரிசீலிக்க வேண்டும். காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளுமே தமிழக அரசியல் களத்தில் ஒரு பெரிய சக்தியாக இல்லாத சூழலில், கர்நாடக ஓட்டு அறுவடையையே அவை பிரதானமாகக் கொண்டிருக்கின்றன.

உச்ச நீதிமன்றம் இப்போதைய இறுதித் தீர்ப்புக்குச் செல்லும் முன் நடத்திய விசாரணையிலும்கூட மத்திய அரசின் சார்பில் வாதாடிய ரஞ்சித் குமார், முகுல் ரோத்தகி இருவருமே “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லி உச்ச நீதிமன்றம் மத்திய அரசிற்கு உத்தரவிட முடியாது” என்ற வாதத்தைக் கடுமையாக முன்வைத்தனர். உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் அந்த வாதங்களை உடைத்திருக்கிறது. “மேலாண்மை வாரியம் போன்ற ஒரு அமைப்பு இல்லை என்றால், நதி நீர் பகிர்வு சம்பந்தமாக நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த இயலாது” என்று உச்ச நீதிமன்றம் சரியாகவே கூறியிருக்கிறது. ஆனால், அது நடக்க வேண்டும் என்றால், நீதித் துறையின் அழுத்தம் மட்டும் போதாது.

தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் தங்களுடைய எல்லா வேறுபாடுகளையும் கைவிட்டு ஒன்றிணைய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைய உரிய அரசியல் அழுத்தத்தை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும். முதல்வர் பழனிசாமி இதற்கான நடவடிக்கைகளைக் கீழே இறங்கி முன்னெடுக்க வேண்டும்!

- து.அரிபரந்தாமன்,

நீதிபதி (ஓய்வு), உயர் நீதிமன்றம். சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

32 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்