பதிப்பாளர்களாகும் எழுத்தாளர்கள்: ஆக்கபூர்வமான மாற்றமா?

By ச.கோபாலகிருஷ்ணன்

 

மிழகத்தில் எழுத்தாளர்களே தங்களது புத்தகங்களைப் பதிப்பிக்கத் தனிப் பதிப்பகம் தொடங்கும் நிலை அதிகரித்துவருகிறது. ‘தேசாந்திரி’ எனும் பெயரில் பதிப்பகத்தைத் தொடங்கியிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். சாரு நிவேதிதாவின் நண்பர்கள் ராம்ஜி நரசிம்மன், காயத்ரி சேர்ந்து ‘ஸீரோ டிகிரி பப்ளிஷிங்’ என்ற பதிப்பகத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்கள் சாருவின் நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை வெளியிட இருக்கிறார்கள். இன்னும் சில எழுத்தாளர்கள் பதிப்பகங்களைத் தொடங்கியிருக்கிறார்கள் அல்லது தொடங்கும் திட்டத்தில் இருக்கிறார்கள். நூற்றுக்கணக்கில் பதிப்பாளர்கள் இருந்தும் எழுத்தாளர்களே பதிப்பிக்கும் பணியை ஏற்றுக்கொள்ள நேர்ந்தது ஏன்?

“இதுவரை நான் எழுதிய 115 புத்தகங்களை ஒன்பது பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கின்றன. பல புத்தகங்கள் மறு பதிப்பு காணாமல் இருக்கின்றன. என்னுடைய புத்தகங்களை நான் மறு பதிப்பு செய்ய விரும்பிய நேரத்தில் செய்வதில் நடைமுறைச் சிரமங்கள் இருக்கின்றன. நானே ஒரு பதிப்பகம் தொடங்கினால் என்ன என்று தோன்றியது” என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

“ஒரு பதிப்பகம் தொடங்கி என்னுடைய எல்லா நூல்களையும் கொண்டுவந்தால் அவை ஒரே இடத்தில் கிடைக்கும். அதோடு இன்று இணைய வழியில் புத்தகங்களை விற்கும் வாய்ப்புகளும் பெருகிவிட்டன. அதுவும் சேர்ந்தால் என்னுடைய அன்றாடச் செலவுகளுக்கு எழுத்தை நம்பியே வாழ முடியும். பதிப்பகங்களைச் சார்ந்தே செயல்படும்போது குறைவான வருமானமே கிடைக்கிறது. அதற்கும் ஆண்டுக் கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. எனவே நானே பதிப்பகம் தொடங்கும் முடிவுக்கு வந்தேன். என் மகன் ஹரிபிரசாத் இந்தப் பதிப்பகத்தை நடத்தப்போகிறார். எனக்குப் பதிப்பகம் நடத்திய அனுபவமும் இருக்கிறது. புத்தகத் தயாரிப்பிலும் அனுபவம் இருக்கிறது. சொந்தமாகப் பதிப்பகம் நடத்தினால் விரும்பிய நேரத்தில் விரும்பிய வடிவங்களில் என்னுடைய புத்தகங்களைக் கொண்டுவரலாம் ” என்கிறார்.

“எழுத்தாளர்கள் பதிப்பகம் தொடங்குவது என்பது ஒரு அவலமான நிலை. பல புத்தகங்கள் கிடைப்பதேயில்லை என்பது இதற்கு ஒரு முக்கியமான காரணம்” என்கிறார் சாரு நிவேதிதா. “நான் எழுதிய 70 புத்தகங்களில் ஏழு அல்லது எட்டு புத்தகங்கள் மட்டுமே கிடைக்கின்றன. எஸ்.ராமகிருஷ்ணனுக்கும் இதே நிலைமைதான். அதனால்தான் எழுத்தாளர்கள் பதிப்பகம் ஆரம்பிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பலரது புத்தகங்களில் எக்கச்சக்க எழுத்துப் பிழைகள் இருக்கின்றன. பதிப்பாளர்கள் யாரும் வேண்டுமென்றே இந்தத் தவறுகளைச் செய்வதில்லை. போதுமான எண்ணிக்கையில் பிழை திருத்துநர்களை வைத்துக்கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை” என்கிறார் அவர்.

“புத்தகச் சந்தையில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வியாபாரம் நடப்பது உண்மை. ஆனால் எந்த எழுத்தாளர் எழுதிய புத்தகமும் ஆயிரம் பிரதிக்கு மேல் விற்பதில்லை. புத்தகம் வாங்கிப் படிக்க நினைக்கும் வாசகர்கள் விலை அதிகம் என்று நினைக்கிறார்கள். புத்தகம் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால்தான் விலை குறையும். புத்தகங்களை நல்ல முறையில் அச்சிட்டு வெளியிடும் சூழல் உருவாகும்” என்று முடிக்கிறார் சாரு.

ஸீரோ டிகிரி பப்ளிஷிங் பதிப்பகம் பற்றிப் பேசிய சாரு ”அப்பதிப்பகம் மூலம் என் நூல்கள் மட்டும் அல்ல; பாலகுமாரனின் ’புருஷ வதம்’, எஸ்.ராமகிருஷ்ணனின் ’இடக்கை’ போன்ற நாவல்களும் மதனின் ’வந்தார்கள் வென்றார்கள்’ போன்ற வரலாற்று நூல்களும் மற்றும் தமிழின் முன்னோடிகள் அனைவருடைய நூல்களும் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளிவருகின்றன.  இலக்கியம் மட்டும் அல்லாமல் பயணம், துப்புறியும் நாவல் போன்ற வெகுஜன எழுத்தும் கூட அதில் அடங்கும்.  பதிப்பக உரிமையாளர்களான காயத்ரியும் ராம்ஜி நரசிம்மனும் என் நண்பர்கள் என்பது தவிர அப்பதிப்பகத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.” என்கிறார்.

எழுத்தாளர்கள் சொந்தமாகப் பதிப்பகம் தொடங்குவதற்குச் சொல்லும் காரணங்கள் நியாயமானவைதான் என்கிறார் ‘காலச்சுவடு’ பதிப்பாளர் கண்ணன். “எழுத்தாளர்கள் எழுதும் வேலையை மட்டும் பார்ப்பதுதான் ஒரு சரியான பதிப்புச் சூழல் என்பேன். உலகம் முழுவதும் புத்தகப் பண்பாடு வளர்ந்த பகுதிகளில் அப்படித்தான் உள்ளது. தமிழில் நூறாண்டுகளுக்கு முன்பு உ.வே.சா, சி.வை.தாமோதரனார் உள்ளிட்டோர் அவர்கள் பதிப்பித்த நூல்களை அவர்களே வெளியிட்டுக்கொள்ள வேண்டிய சூழல் இருந்தது. இன்றைக்கும் அதன் ஒரு பகுதி தொடர்வது என்பது நிச்சயமாக நல்ல விஷயம் அல்ல. எழுத்தாளர்கள் தாங்கள் மேலும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதைச் செய்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்களுக்குப் பொருத்தமான பதிப்பகங்கள் அமைவதில்லை. ஒரு எழுத்தாளர் தங்கள் புத்தகங்கள் முறையாக விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் தனக்கான சன்மானம் முறையாகத் தரப்பட வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார். இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாத சூழலில்தான் அவர்கள் பதிப்பகம் தொடங்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்” என்கிறார்.

மேலும், “பதிப்பாளர் என்பவர் பதிப்புத் தொழிலை முழுமையாகப் புரிந்துகொண்டவராக இருக்க வேண்டும். எழுத்தாளர்களுக்கு முறையான சன்மானம் கொடுத்து நியாயமான முறையில் நடத்துபவராக இருக்க வேண்டும். அப்படி ஒரு சூழல் இங்கு இல்லவே இல்லை என்று சொல்ல முடியாது ஆனால் முழுமையாக உருவாகவில்லை. யாருடைய புத்தகங்கள் அதிகம் விற்கப்படுகிறதோ அவர்களுக்கே இப்படிப்பட்ட பதிப்பகங்கள் அமையவில்லை என்பது விசித்திரமான விஷயம்” என்று சுட்டிக்காட்டுகிறார்.

ஆக, தாங்கள் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகள் மேலும் தொடராமல் தவிர்ப்பதற்கும், தங்கள் படைப்புகளைத் தாங்கள் விரும்பிய வடிவிலேயே வெளியிடுவதற்கும் வசதியாக இருக்கும் என்று இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள் எழுத்தாளர்கள். இந்த மாற்றத்தின் விளைவு எப்படி இருக்கும் என்பது வாசகர்கள் கையில்தான் இருக்கிறது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

சினிமா

43 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்