2017: மறக்க முடியுமா? - தமிழ்த் திரை

By செய்திப்பிரிவு

சீறி எழுந்த சிறிய படங்கள்

முன்னணிக் கதாநாயகர்களின் பெரும்பான்மையான படங்கள் தோல்விஅடைந்த நிலையில் ‘குற்றம் 23’, ‘மாநகரம்’, ‘மரகத நாணயம்’, ‘மீசைய முறுக்கு’, ‘தரமணி’, ‘அவள்’, ‘அறம்’, ‘அருவி’ ஆகிய படங்கள் வசூல் வெற்றியைப் பெற்றன. இவற்றில் ‘மீசைய முறுக்கு’ தவிர மற்ற படங்கள் விமர்சனரீதியான பாராட்டுகளையும் பெற்றன. ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘அறம்’, ‘அருவி’ ஆகிய படங்கள் சமூக ஊடகங்களில் பெரிதும் கொண்டாடப்பட்டன.

2CH_Arammபாகுபலியும் பத்மாவதியும்

சில காட்சிகளைத் தமிழில் நேரடியாகப் படமாக்கியிருந்தாலும் மொழிமாற்றுப் படம் என்ற உணர்வை ஏற்படுத்திய ‘பாகுபலி 2’ இந்த ஆண்டில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படம் என்று வசூல் வட்டாரங்கள் வர்ணிக்கின்றன. தமிழகத்தில் வெளியான நேரடி மலையாளப் படங்கள் எதுவும் கவனம்பெறவில்லை. ஆனால், தெலுங்குப் படமான ‘அர்ஜுன் ரெட்டி’க்கு வரவேற்பு கிடைத்தது.

பாலிவுட்டிலிருந்து வெளியான மொழிமாற்றுப் படங்கள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாத நிலையில் ‘பத்மாவதி’ படத்தின் சரித்திர சர்ச்சை தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், இந்திப் படவுலகிலிருந்து அக்ஷய்குமார், கஜோல், அனுராக் காஷ்யப், விவேக் ஓபராய், நானா படேகர் எனப் பிரபல நட்சத்திரங்கள் தமிழ்ப் படங்களில் நடிப்பது இந்த ஆண்டு அதிகரித்தது.

ஜி.எஸ்.டி.யும் சினிமாவும்

இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்குப் பெரும் தலைவலியாக அமைந்தது ஜி.எஸ்.டி. அறிமுகம். முதலில் 28 சதவீத வரிவிதிப்பு, உள்ளாட்சிகளுக்கு ஜி.எஸ்.டி.க்கு அளிக்கப்பட்ட விதிவிலக்கால் மாநில அரசு விதித்த 30 சதவீதக் கேளிக்கை வரி ஆகிய இரண்டும் சேர்ந்து ஒட்டுமொத்தமாகச் சுமார் 58 சதவீத வரிச் சுமை கூடியதில் திரைப்பட வசூலின் சரிபாதியை வரியாகச் செலுத்த வேண்டியிருக்கும் என்ற நிலை உருவானது.

2CH_Bahubali2right

சில உச்சநட்சத்திரங்களைத் தவிர ஒட்டுமொத்தத் திரையுலகமும் இதற்காகக் கொதித்தது. திரையரங்க வேலை நிறுத்தம், தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்த அறிவிப்பு, கமலின் அறிக்கை எனப் பரபரப்பை அடுத்து 100 ரூபாய்க்கும் குறைவான டிக்கெட்டுகளுக்கு 18 சதவீத வரி என்ற ஜி.எஸ்.டி. சலுகையுடன் உள்ளாட்சி வரி 8 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. ஜி.எஸ்.டி.யால் மாநகரங்களில் டிக்கெட்டின் விலை 50 ரூபாய் முதல் 70 ரூபாய்வரை உயர்ந்தது.

தணிக்கையும் கந்துவட்டியும்

தமிழ் சினிமாவை ஜி.எஸ்.டி. உலுக்கி முடித்த கையோடு பெப்சி சம்பளப் பிரச்சினையால் திரைப்படத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் அறிவித்தனர். இதனால் ரஜினியின் ‘காலா’ உள்ளிட்ட சுமார் 20 படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. பின்னர், விஷால் தலையீட்டால் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது. படங்களுக்கான புதிய தணிக்கை நடைமுறைகள் கண்டிப்புடன் அமல்படுத்தப்பட்டதால் ஒரு படத்துக்குத் தணிக்கை முடிக்க 60 நாட்கள்வரை தேவைப்பட்டதை அடுத்துப் பல படங்கள் அறிவித்தபடி வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்தப் பிரச்சினைகளுக்கு அடுத்து கந்துவட்டிக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட தயாரிப்பாளரும் சசிகுமாரின் உறவினருமான அசோக் குமாரின் மரணம் ஆண்டின் இறுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. சினிமா பைனான்சியர் அன்புச் செழியன் தரப்பால் தனக்குத் தரப்பட்ட நெருக்கடியும் மிரட்டலுமே இந்த முடிவுக்குக் காரணம் என்பதாக அவர் எழுதிவைத்த கடிதம் திரையுலகைக் கொதிப்படைய வைத்தது.

நடிகர் திலகத்துக்கு மரியாதை

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னை மெரினா கடற்கரையில் திமுக அரசால் நிறுவப்பட்ட சிலை சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அகற்றப்பட்டது. அடையாறு பகுதியில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தில் அந்தச் சிலை நிறுவப்பட்டது. சிலை திறப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஆளும் கட்சி அமைச்சர்களும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்படத் துறைப் பிரபலங்களும் பங்கேற்றனர்.

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

# விஜய்க்கு இந்த ஆண்டு ‘பைரவா’ பெரும் தோல்வி என்றாலும் ‘மெர்சல்’ வெற்றிப்படமானது. ‘மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டி.க்கு எதிராக விஜய் பேசிய வசனங்களால் எரிச்சலுற்ற ஆளும் தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் செய்த எதிர்ப்புப் பிரச்சாரத்தால் படத்தின் வசூல் மேலும் அதிகரித்தது.

# அஜித் நடித்த ‘விவேகம்’ படத்தின் மேக்கிங் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட அதே நேரம் அதன் கதையிலிருந்த ஓட்டைகள் காரணமாக வசூல்ரீதியாகத் தோல்வியடைந்தது.

# சூர்யாவின் ‘சிங்கம் 3’ எதிர்பார்த்த வசூலை எட்ட முடியாத நிலையில், அவரது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் வெளியீடு 2018-க்குத் தள்ளிவைக்கப்பட்டது. முன்னணி நட்சத்திரங்களில் விஜய்சேதுபதிதான் இந்த ஆண்டு ‘விக்ரம் வேதா’, ‘கருப்பன்’ என்ற இரண்டு பிளாக் பஸ்டர் வெற்றிகளைக் கொடுத்தவர்.

# சிவகார்த்திகேயன் - இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் வெளியான ‘வேலைக்காரன்’ சீரியஸான பொழுதுபோக்குப் படம் என்ற பாராட்டுடன் எதிர்பார்த்த லாபத்தையும் கொடுத்திருப்பதாக வசூல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

# தனுஷ் இயக்குநர் அவதாரம் எடுத்த ‘ப.பாண்டி’, சௌந்தர்யா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வி.ஐ.பி-2’ இரண்டுமே ‘லாபமும் இல்லை- நஷ்டமும் இல்லை’ வகை.

# மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘காற்று வெளியிடை’ பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பிப் புஸ்வாணமானது. ஆனால், எதிர்பார்ப்பு எதையும் ஏற்படுத்தாமல் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ கார்த்திக்கு மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது. தொடர்ந்து தோல்விப் படங்களையே கொடுத்துவந்த விஷாலுக்கு ‘துப்பறிவாளன்’ ஆறுதல் வெற்றியானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 mins ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

46 mins ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்