சர்வதேசப் புத்தகக் காட்சியில் தமிழ்ப் பதிப்பகங்கள் ஏன் பங்கேற்பதில்லை?

By திருவனந்தபுரம் எஸ்.ராமகிருஷ்ணன்

லகின் மூன்றாவது மிகப் பெரிய புத்தகக் காட்சி ஷார்ஜாவில் நடைபெற்றது. அதில் தமிழ் இலக்கியத்தின் சார்பில் நான் கலந்துகொண்டேன். இந்தப் புத்தகக் காட்சியில் பதினைந்து லட்சம் புத்தகங்களுக்கும் மேலாக இடம்பெற்றிருந்தன. இதில் 64 நாடுகள் பங்கேற்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் கலந்துகொண்டார்கள்.

ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமியின் கனவுத் திட்டமாக இந்தப் புத்தகக் காட்சி கருதப்படுகிறது. அவரே நேரடியாகப் புத்தகக் காட்சி நிகழ்வுகளைத் திட்டமிடுகிறார். வழிநடத்துகிறார். ஆகவே, ஷார்ஜா நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. என் வாழ்நாளில் இவ்வளவு பெரிய புத்தகக் காட்சியைக் கண்டதேயில்லை. தள்ளுவண்டி நிறையப் புத்தகங்களை வாங்கிக் கொண்டு மக்கள் செல்வதைக் காண மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

புத்தகக் காட்சியை முன்னிட்டு கருத்தரங்குகள், விருது வழங்குதல், எழுத்தாளர்களின் சந்திப்பு, புதிய நூல் வெளியீடு, ஆய்வரங்குகள், சிறார்களுக்கான பயிலரங்குகள், திரைக் கலைஞர்களின் சந்திப்பு. பொது விவாதம் எனப் பல்வேறு வகை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் சர்வதேச எழுத்தாளர்களுள் ஒருவனாக அழைக்கப்பட்டு அரசு விருந்தினராகக் கௌரவிக்கப்பட்டேன்.

புத்தகக் காட்சியை முழுமையாகச் சுற்றிப் பார்ப்பதற்கு இரண்டு மூன்று நாட்கள் தேவைப்படுகிறது. காலை 9 மணி முதல் இரவு 10 வரை திறந்து வைக்கப்பட்டிருக்கிறது, முழுவதும் குளிர்சாதனமிட்ட அரங்குகள். ஒவ்வொரு அரங்கிலும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள். ஆயிரம் ஆண்டுகாலப் பழமையான அரிய நூல்களைக் கூடக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். கதை சொல்லுதல், சித்திர எழுத்து, வரைகலை, பொம்மலாட்டம் எனப் பல்வேறு விதமான பயிலரங்கு கள் நடைபெற்றன. ஒவ்வொரு அரங்கப் பகுதியிலும் உதவி செய்வதற்கெனச் சீருடை அணிந்த தன்னார் வத் தொண்டர்கள் நிறைய இருந்தார்கள். வாங்கிய புத்தகங்களை எடுத்துச்செல்ல தள்ளுவண்டிகள் தரப்பட்டன. சுத்தமான கழிப்பறைகள். குடிநீர் வசதி. பெரிய உணவகம் எனப் புத்தகக் காட்சிக்குள் நாள் முழுவதையும் செலவழிக்கும்படி வசதிகள் செய்திருக்கிறார்கள். புத்தகக் காட்சிக்குக் கட்டணமும் கிடையாது.

ஷார்ஜா நகரம் முழுவதும் எழுத்தாளர்களின் உருவம் கொண்ட விளம்பரப் பலகைகள். புதிய நூல்களின் முகப்புத் தோற்றங்கள். நிகழ்ச்சிகள் பற்றிய தொலைக்காட்சி விளம்பரங்கள், சாலைகளின் இரண்டு பக்கமும் புத்தகக் காட்சி பற்றி ஒளிரும் விளம்பரப் பதாகைகள். நாடே புத்தகங்களை, எழுத்தாளர்களைக் கொண்டாடுகிறது என்பது மிகுந்த சந்தோஷம் அளித்தது.

அரபி, உருது, பாரசீகம், இத்தாலி, ரஷ்யன், சீனா, ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, கேரளாவின் டிசி புத்தக நிறுவனம் இந்த நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்வதால் நிறைய மலையாளப் பதிப்பகங்கள் வந்திருந்தன. ஆனால், இவ்வளவு பெரிய புத்தகக் காட்சியில் ஒரு தமிழ் பதிப்பகத்தின் அரங்கு கூடக் கிடையாது என்பது வருத்தமளித்தது. அமீரகத்தில் லட்சக்கணக்கில் தமிழர்கள் வசிக்கிறார்கள். புத்த கங்களை வாங்கத் தயாராகவும் இருக்கிறார்கள். ஆனால், புத்தகம் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. தமிழகத்துக்கு வந்துபோகும்போது வாங்குவதைத் தவிர வேறு வழிகள் இல்லை.

இவ்வளவு பிரம்மாண்டமான புத்தகக் காட்சியில் ஏன் ஒரு தமிழ் புத்தக அரங்குகூட இடம்பெறவில்லை என்பது புதிராகவே இருந்தது. இது குறித்து ஷார்ஜா புத்தகக் காட்சி ஒருங்கிணைப்பாளர்களுடன் பேசியபோது, “நாங்கள் பல ஆண்டுகளாக தமிழகப் பதிப்பாளர்களை, பபாசியை அழைத்துவருகிறோம். ஆனால், ஒருவர் கூட அரங்கு அமைக்க முன்வர வில்லை. எல்லா உதவிகள் செய்வதாக முன்வந்தா லும் ஏன் எங்களைப் புறக்கணிக்கிறார்கள் எனப் புரியவில்லை” என ஆதங்கமாகக் கூறுகிறார்கள்.

இவ்வளவுக்கும் பதிப்பாளர்களுக்கு உதவி செய்யும் விதமாகப் புத்தகங்களைச் சென்னையிலிருந்து இலவசமாக ஷார்ஜா கொண்டுவரவும். திரும்பி அனுப்பிவைக்கவும் உதவுகிறோம் என நிர்வாகிகள் சொல்கிறார்கள். தனியாக ஒரு பதிப்பகம் இதனைச் செய்வதில் ஆர்வம் காட்டாமல் போனால் பபாசி போன்ற அமைப்புகள் முன்னெடுக்கலாம்தானே! ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்ப் பதிப்பகங்களிலிருந்து ஒருவர்கூட இது போன்ற சர்வதேசப் புத்தகக் காட்சியில் இடம்பெறுவதில்லை என்பது சோகமான விஷயமே.

இது போன்ற சர்வதேசப் புத்தகக் காட்சிக்குச் செல்வதற்குப் பதிப்பாளர்களுக்கு அரசு மானியம் அளிக்க வேண்டும். துருக்கி அரசு தனது செலவில் பதிப்பகங்களையும் எழுத்தாளர்களையும் புத்தகக் காட்சிக்கு அழைத்துவருகிறது. துருக்கி எழுத்தாளர்களின் நூல்களைப் பிற மொழியில் மொழிபெயர்ப்பு செய்கிறவர்களுக்கு நிதிநல்கை வழங்குகிறது. இவ்வளவு ஏன் கேரள அரசும் மலையாளப் பதிப்பகங்களும் போட்டி போட்டுக்கொண்டு எழுத்தாளர்களைத் தங்கள் செலவில் இங்கே அனுப்பி வைக்கின்றன.

உலகின் மூத்த செம்மொழி எனத் தமிழ் குறித்து நாம் பெருமை கொள்கிறோம். ஆனால், இது போன்ற சர்வதேசப் புத்தகக் காட்சியில் மருந்துக்குக்கூடத் தமிழ்ப் புத்தகம் கிடையாது என்பது வருத்தமாகவே இருக்கிறது. சர்வதேசப் புத்தகக் காட்சியில் தமிழ்ப் புத்தகங்கள் இடம்பெறுவது பண்பாட்டுச் செயலாகும். தமிழக அரசும் பதிப்பகங்களும் முன்வந்து உடனே இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் அடுத்த ஆண்டாவது தமிழ் அரங்குகள் அமைக்கப்பட்டால் அமீரகத்தில் வாழும் தமிழர்கள் நிச்சயம் பயன்பெறுவார்கள்.

துபாய், ஷார்ஜா, அபுதாபி என அமீரகத்தில் வாழும் தமிழர்களில் தீவிர இலக்கியம் வாசிப்பவர் கள் நிறைய இருக்கிறார்கள். நிறைய இலக்கிய அமைப்புகளும் செயல்பட்டுவருகின்றன. ஆனால், அவர்கள் தமிழ்ப் புத்தகங்கள் வாங்குவதற்குக் கடைகள் எங்கும் கிடையாது. நிரந்தரமாகப் பெரிய கடை ஒன்றை அமைத்தால் உதவியாக இருக்கும் என்பதே அவர்களின் வேண்டுகோள்.

மின்புத்தகங்கள் அறிமுகமாகிவிட்ட இன்றைய சூழலில், தமிழில் வெளியாகியுள்ள மின்புத்தகங்கள் கூட இந்தப் புத்தகக் காட்சியில் தனி அரங்கு அமைத்து விற்பனையும் விளம்பரமும் செய்யலாம். ஏன் தமிழ்ப் பதிப்புலகம் தமிழக எல்லையை விட்டு ஒரு அடி வெளியே செல்ல மறுக்கிறது?

தமிழக அரசே முன்வந்து இந்தப் புத்தகக் காட்சியில் தங்களுக்கென ஒரு அரங்கை அமைக்க வேண்டும். அத்துடன் தமிழ் வளர்ச்சித் துறை இதற்கெனத் தனிக் குழுவை அமைத்து பதிப்பாளர்களுக்கு உதவி செய்வதுடன் எழுத்தாளர்களைச் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கச் செய்ய வேண்டும்! ஷார்ஜா புத்தகக் காட்சி தங்களால் முடிந்த சகல உதவிகளையும் செய்ய முன்வருகிறது.

அதை முறையாக ஒருங்கிணைத்துப் பங்கேற்க வேண்டியது அரசின், பபாசியின் கடமையாகும். சர்வதேச அரங்கில் தமிழ் இடம்பெற வேண்டும். அது தான் தமிழ் இலக்கிய உலகுக்கு, தமிழ் மொழிக்குச் செய்யும் உண்மையான மரியாதையாகும்!

- எஸ். ராமகிருஷ்ணன், எழுத்தாளர்
தொடர்புக்கு: writerramki@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

கருத்துப் பேழை

8 mins ago

தமிழகம்

46 mins ago

சினிமா

51 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

2 hours ago

கல்வி

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்