டெங்கு வைரஸில் புதிய வகை: புனே ஆய்வு சொல்லும் புதிய தகவல்!

By த.வி.வெங்கடேஸ்வரன்

டெ

ங்கு பாதிப்புகள் தொடர்பான செய்திகள் சற்றே குறைந்திருக்கும் நிலையில், தமிழகத்தில் 2012-லும் கேரளத்தில் 2013-லும் ஏற்பட்ட டெங்கு கொள்ளை நோய் காய்ச்சல், புது வகை டெங்கு வைரஸ் பரவியதன் மூலமே ஏற்பட்டுள்ளது என புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வு மைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சிங்கப்பூரில் உருவாகிய இந்தப் புது மரபணு வகை டெங்கு வைரஸ், 2005-ல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. பின்னர் 2009-ல் இலங்கையில் அந்த வகை வைரஸ் தாக்குதல் பரவியது. 2012-வாக்கில் தென்னிந்தியாவுக்கு இந்த வைரஸ் பரவியது என்கிறது இந்த ஆய்வு.

பொதுவாக, ஒரு முறை வைரஸ் தாக்குதல் ஏற்பட்டால் அதற்கு எதிரான நோய் எதிர்ப்புக் கூறை நமது உடல் தயாரித்து வைத்துக்கொள்ளும். அடுத்த முறை அந்த வைரஸ் வந்தவுடன், தயாரித்துவைத்திருந்த நோய் எதிர்ப்புக் கூறைக் கொண்டு நுழையவே விடாமல் வைரஸைக் கொன்றுவிடும். எனவேதான், பொதுவாகவே ஒருதடவை வைரஸ் நோய் வந்தால், அதே வைரஸ் நோய் மறுபடி வருவதில்லை.

டெங்கு வைரஸின் தந்திரம்

ஆனால், டெங்கு வைரஸ் சாமர்த்தியமானது. பல முகமூடிகளை அணிந்து தாக்குதல் தருவதால், நமது நோய் எதிர்ப்பு அமைப்பு திக்குமுக்காடிப்போகிறது. எளிதில் டெங்குவுக்குத் தடுப்பு மருந்து தயாரிக்க முடியாததன் காரணம் இதுதான். இந்த வைரஸில் DENV-1, DENV-2, DENV-3, மற்றும் DENV-4 என்கிற நான்கு நுண்ணுயிர் வகைகள் (serotype) இருக்கின்றன. எனவே, ஒரு வகை நுண்ணுயிர் தாக்கி, நமக்கு நோய் எதிர்ப்புக் கூறு உருவானாலும் இரண்டாவது முறை வேறு நுண்ணுயிர் வகை வைரஸ் தாக்கும்போது நமது உடலால் தாக்குப்பிடிக்க முடிவதில்லை.

அதுமட்டுமல்ல, இந்த வைரஸின் ஒவ்வொரு நுண்ணுயிர் வகையிலும் பல மரபணு அமைப்பு(Genotype) கிளை வகைகள் உள்ளன. வைரஸின் மேல்புறத் தோலில் சிறு மாற்றம், உள்ளே உள்ள மரபணுவில் மாற்றம் என மாற்றங்கள் தோன்றி, ஒவ்வொரு வகையும் பல்வேறு மரபணு அமைப்பு கொண்ட பல்வேறு கிளை வகைகளாக உள்ளன.

ஏந்திகள்வழி பரவும் நோய்க் கட்டுப்பாட்டுக்கான தேசியத் திட்டத்தின் (National Vector Borne Disease Control Programme -NVBDCP) புள்ளிவிவரப்படி, இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் 80,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் டெங்குவினால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் சுமார் 0.24% நோயாளிகள் மரணமடையும் அளவுக்கு டெங்கு மிக வீரியம் அடைகிறது.

புதிய கிளை வகை

பொதுவாக, தேசிய சராசரிக்கும் குறைவாகத்தான் தமிழகத்தில் டெங்கு மரணங்கள் ஏற்படும். 2007 முதல் 2016 வரையிலான பத்தாண்டுகளைக் கணக்கில் கொண்டு பார்த்தால், தமிழ்நாட்டில் ஆண்டுக்குச் சராசரியாக 2,539 பேர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சராசரியாக ஆண்டுக்கு 0.21% நோயாளிகளுக்கு மரணம் ஏற்படுகிறது.

ஆனால், 2012-ல் இயல்புக்கு மாறாக தமிழகத்தில் 12,826 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது என்றும், இதில் 66 பேர் மரணமடைந்தனர் என்றும் தரவுகள் கூறுகின்றன. அதாவது, 0.51% நோயாளிகளுக்கு மரணம் சம்பவித்தது. இதன் மூலம், அந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் கொள்ளை நோய் தமிழகத்தில் பரவியது தெளிவாகிறது.

ஏற்கெனவே 1980-களில் இதேபோல திடீரென டெங்கு காய்ச்சல் அளவுக்கு அதிகமாகப் பரவி, கூடுதலாக ரத்த இழப்பு சோகை தரும் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு, அதிக நோயாளிகள் மரணம் அடைந்த சமயத்தில், நான்கு வகைகளில் சிறு சிறு மரபணு மாற்றங்கள் ஏற்பட்டு புதிய கிளை வகைகள் உருவாயிருந்தன என ஆய்வுகள் சுட்டிக்காட்டி யிருந்தன.

மற்ற தொற்றுநோய்கள் போல விலங்குகளில் இந்த நோய் குறித்து ஆய்வு நடத்த முடியாத நிலையில் உள்ளதால், நோய் பரவும் விதம் மற்றும் வைரஸ் படிநிலை பரிணாம வளர்ச்சி ஆகியவற்றைக் கொண்டுதான் ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது. இந்த அடிப்படையில்தான், புணேவில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனம், வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் உதவியுடன் 2012-ல் திருநெல்வேலியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட திடீர் ரத்த இழப்பு சோகை தரும் டெங்கு காய்ச்சல் பரவலை ஆய்வுசெய்தது. நோய்ப் பரவல் விகிதங்களை ஆராய்ந்தபோது திருநெல்வேலிதான் நோய் மையமாக விளங்கியது என்றும் தெரியவந்தது.

முக்கிய மாற்றங்கள்

1943 முதலே பல்வேறு வகை கொண்ட டெங்கு வைரஸ் ஜீன்களைப் பாதுகாத்துவருகிறார்கள். இந்தத் தரவுகளுடன் ஒப்பிட்டால், புதிய வைரஸ் மரபணு அமைப்பு உருவாகியுள்ளதா என அறிய முடியும். தமிழகம் மற்றும் கேரளத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ரத்தத்திலிருந்து டெங்கு வைரஸை எடுத்து, பரிசோதித்துப் பார்த்தனர்.

இந்த ஆய்வு இரண்டு முக்கிய மாற்றங்களைக் காட்டியது. இதுவரை DENV-1 டெங்கு காய்ச்சலில் இந்தியாவில் பரவலாக இருந்தது ஆப்பிரிக்க - அமெரிக்கக் கிளைவகை. இப்போது DENV-1 ஆசிய வகைதான் தென் இந்தியப் பகுதிகளில் தாண்டவமாடும் வைரஸ் என்கிறது இந்த ஆய்வு. மேலும், இதுவரை இருந்த DENV-1 ஆசிய வகை அல்லாத புதிய மரபணு வகை உருவாகியுள்ளதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. DENV-1 டெங்கு வைரஸின் ஆசியக் கிளை வகை மரபணு அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு, புதிய வகை உருவாகியுள்ளது என்றும் அதன் காரணமாகவே 2012-ல் தமிழகத்தில் ஏற்பட்ட டெங்கு காய்ச்சல் வீரியம் கொண்டு தாக்கியது எனவும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

1932-ல் ஆசிய கிளை வகை DENV-1 டெங்கு வைரஸ் ஜப்பான் அல்லது அமெரிக்காவில் தோன்றியது. அங்கிருந்து தாய்லாந்துக்குப் பரவியது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவியது என ஏற்கெனவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2012-ல் தமிழகத்தைத் தாக்கிய வைரஸ் மரபணு வகை எங்கே உருவானது எனவும் ஆய்வுசெய்து பார்த்தனர். 2012 - 2015 காலகட்டத்தில் திருநெல்வேலி, கேரளம் முதலிய பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய DENV-1 ஆசிய வகையின் புது கிளை வகை சிங்கப்பூரிலிருந்து வந்தது என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

1980-களில் டெங்கு வைரஸில் பிறந்த புதிய கிளை வகைக்குப் பிறகு இதுவரை சுமார் 20 ஆண்டுகள் இந்தியாவில் புதிய கிளை வகை உருவானதாகத் தகவலே இல்லை. இந்நிலையில், முதன்முறையாகப் புதிய மரபணு அமைப்பு உருவாகி புதிய கிளை வகை ஏற்பட்டுள்ளது என இந்த ஆய்வு கண்டுபிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

- த.வி.வெங்கடேஸ்வரன்,

மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான

‘விஞ்ஞான் பிரசா’ரின் முதுநிலை விஞ்ஞானி.

தொடர்புக்கு: tvv123@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

இந்தியா

9 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்