எம்.ஜி.சுரேஷ்: சாகசத்தன்மை கொண்ட எழுத்தாளர்

By மனோ.மோகன்

மிழ் இலக்கிய வட்டாரத்தில் பின்நவீனத்துவ எழுத்தாளராகப் பரவலாக அறியப்பட்ட சுரேஷ் கடந்த அக்டோபர் 2 அன்று இயற்கை எய்தினார். சென்னை அம்பத்தூர் புறநகர்ப் பகுதியில் வசித்துவந்த அவர் சிங்கப்பூரில் பணியாற்றும் தனது மகள் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் அங்கேயே இதயக் கோளாறு காரணமாகக் காலமானார். அவருக்கு வயது அறுபத்து நான்கு.

70-களின் ஆரம்பத்திலிருந்து எழுதிவந்தவர் எம்.ஜி. சுரேஷ். இதுவரை ஆறு நாவல்களும் மூன்று சிறுகதைத் தொகுதிகளும் மூன்று குறுநாவல்களும் எழுதியுள்ளார். அவருடைய கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள், நேர்காணல்கள் போன்றவையும் நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. பன்முகம் (2001 – 2005) என்னும் காலாண்டு இதழையும் அவர் நடத்திவந்தார். திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, ஏலாதி இலக்கிய விருது, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பாரதியார் நினைவுப் பரிசு, இலக்கியவீதி அன்னம் விருது முதலான விருதுகளைப் பெற்றிருக்கிற எம்.ஜி.சுரேஷ் திரைப்படத் தணிக்கைத் துறையில் ஆலோசனைக் குழு உறுப்பினராக நான்கு ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்.

‘பின் நவீனத்துவம் என்றால் என்ன?’, ‘ இஸங்கள் ஆயிரம்’ என்னும் இரண்டு கோட்பாட்டு அறிமுக நூல்களும் தெரிதா, ஃபூக்கோ, பார்த், லக்கான், தெலூஸ்- கத்தாரி போன்ற சிந்தனையாளர் அறிமுக நூல்களும் அவருக்கு மிகுந்த புகழ் தேடித் தந்த நூல்களாகும். பின் நவீனக் கோட்பாடுகள் குறித்த அறிமுக நூல்கள் தமிழில் அதிகம் இல்லாத நிலையில் குறிப்பிட்ட சில கோட்பாடுகளின் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்கு வாசகர்கள் இந்த நூல்களை வாசிக்கலாம்.

எம்.ஜி.சுரேஷுக்குத் திரைப்பட இயக்குநராவது குறித்த கனவிருந்தது. ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, ‘காவலுக்குக் கெட்டிக்காரன்’, ‘உன்னை ஒன்று கேட்பேன்’, ‘கண்ணே கனியமுதே’, ‘என் தமிழ் மக்கள்’, ‘அழகி’, ‘இயற்கை’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். சில தொலைக்காட்சித் தொடர்களிலும் பணியாற்றியிருக்கிறார். என்றபோதும் தான் சாதிக்கவேண்டுமென்று கனவு கண்ட சினிமாத் துறையில் பெரிதாக எதையேனும் சாதிக்கும் வாய்ப்பு அவருக்கு அமையாமலே போய்விட்டது.

பரிசோதனை முயற்சிகள்

வறுமையான சூழலில் சிறுவயதிலேயே தந்தையை இழந்து குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அவர் பிறகு இருபத்தியொரு ஆண்டுகள் தமிழ்நாடு பொதுச் சுகாதாரத் துறையில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார். இந்தக் கால வாழ்க்கையைப் பிரதிபலிக்கக் கூடிய சுயசரிதைத் தன்மை கொண்டதும் அதை மீறுவதற்கான பரிசோதனைக் கதை சொல்லல்களைக் கொண்டதுமான இரட்டைப் பண்பு கொண்ட ‘அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்’ முதலான அவருடைய அனைத்து பரிசோதனை நாவல்களும் பணி ஓய்வுக்குப் பிறகு எழுதப்பட்டவையே. க்யூபிஸ நாவல், ஆட்டோஃபிக்ஷன் நாவல், தோற்ற மெய்ம்மை நாவல் என்றெல்லாம் அவரால் அடையாளப்படுத்தப்பட்ட பரிசோதனை நாவல்கள் அந்த அடையாளங்களுக்கு உகந்தவை அல்ல என்றாலும் தமிழ்

‘மெட்டாஃபிக்ஷன்’ வரலாற்றில் முன்னோடி முயற்சிகள் என்னும் வகையில் பொருட்படுத்திப் பார்க்க வேண்டிய முக்கியமான நாவல்கள் ஆகும்.

எம்.ஜி.சுரேஷ் ஒரு எழுத்தாளர் என்பதைக் கடந்து, பழகுவதற்கு நல்ல மனிதர். அமைதியான சுபாவம் கொண்டவர். அவருடைய எழுத்துக்களின் மீதான கடுமையான விமர்சனத்தோடேயே கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக அவரோடு பழகியிருக்கிறேன். முனைவர் பட்டம் வாங்குவதற்காக எம்.ஜி.சுரேஷின் புனைவுகளைத்தான் ஆய்வு செய்து ஆய்வேடு சமர்ப்பித்தேன். என்னுடைய முனைவர் பட்டத்துக்கான வாய்மொழித் தேர்வின்போது எம்.ஜி.சுரேஷ் முன்வரிசையில் புன்முறுவல் மாறாத முகத்தோடு அமர்ந்திருந்தார். அவர் கியூபிச நாவல் ஆட்டோஃபிக்ஷன் என்றெல்லாம் அடையாளப்படுத்திக் கொண்டு எழுதிய நாவல்கள் அப்படியான நாவல்களே இல்லையென்று நான் அடுக்கடுக்காகக் குற்றம்சாட்டிக் கொண்டிருந்தேன்.

பேராசிரியரொருவர் எழுந்து “உங்களைச் சரமாரியாகக் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிற ஒருவரைப் பார்த்துக் கோபப்படாமல் எப்படி உங்களால் புன்முறுவலோடு அமர்ந்திருக்க முடிகிறது?” என்று அவரிடம் கேட்டார். “என்னுடைய புனைவுகளைக் குறுக்கு நெடுக்காக வாசித்திருக்கிற வாசகன் கிடைத்திருப்பது அலாதியான இன்பம் தரக் கூடியதல்லவா? இதற்கெதற்குக் கோபப்பட வேண்டும்!” என்றார் எம்.ஜி.சுரேஷ். அவர் எழுதிய ‘தந்திர வாக்கியம்’ நாவலை எழுதி முடித்த சூட்டோடு எனக்குத்தான் அனுப்பி ஆலோசனை கேட்டிருந்தார். விமர்சனங்களுக்குச் செவிசாய்க்கிறதும் தன் தரப்பு நியாயங்களை பேசி விவாதத்தைத் தொடர்கிறதுமான அவருடைய இந்தப் பக்குவம் அவ்வளவு எளிதில் வாய்த்துவிடக் கூடியதா என்ன! கடந்தாண்டு வெளிவந்த ‘தந்திர வாக்கியம்’ நாவல்தான் சுரேஷின் கடைசி நாவல்.

கதைகளோடு வாழ்ந்தவர்

தான் எழுதிய கதைகள் அல்லாமல் மூளை முழுக்க கதைகளை வைத்துக்கொண்டு சுற்றிய மனிதர் எம்.ஜி.சுரேஷ். பலமுறை அவரைச் சென்னையில் சந்தித்திருக்கிறேன். என் நிமித்தமாக மூன்று முறை அவர் பாண்டிச்சேரிக்கு வந்திருக்கிறார். அத்தனை சந்திப்புகளும் கதைகளோடு கழிந்த சந்திப்புகள்தான். நான்கு ஆண்டுகளுக்குமுன் என் கவிதைத் தொகுப்பு வெளியீடு முடிந்த இரவும் அதற்குப் பின்பான முழுநாளும் யவனிகா ஸ்ரீராம், செல்மா ப்ரியதர்ஷன், ரமேஷ் பிரேதன் முதலான சக எழுத்தாளர்கள் உடனிருக்க உறங்காமல் கதைசொல்லிக் கொண்டிருந்த அவரிடம் சொல்வதற்கான கதைகள் அதற்குப் பிறகும் தீர்ந்தபாடில்லை.

ஒரு மனிதனால் எப்படித்தான் சுவாரஸ்யம் குறையாமல் இப்படிக் கதைசொல்ல முடிகிறதென்னும் பிரமிப்பு அவரிடம் இன்றுவரை எனக்குக் குறைந்தபாடில்லை. அதேசமயம் அவர் சொல்கிற கதைகளில் அதிகமாக இருந்த சுவாரஸ்யம், அவர் எழுதுகிற கதைகளில் குறைவாகவே இருந்திருக்கிறது. சக எழுத்தாளர்கள் மிகையுணர்ச்சி பொங்கக் கதை எழுதி வாசகர்களின் மூளையை மழுங்கடிக்கிறார்கள் என்று குறை சொன்ன எம்.ஜி.சுரேஷ் வருணனைப் பாங்கற்ற தட்டையான எழுத்து நடையைத் தனக்கான எழுத்தாகத் தேர்ந்துகொண்டதன் விளைவு இது.

தனிமனிதன் என்பவன் ஒற்றைத் தன்னிலையாக இல்லாமல் சிதறுண்ட பல தன்னிலைகளாக இருக்கிறான் என்று எம்.ஜி.சுரேஷ் அடிக்கடிச் சொல்வார். அவருடைய பரிசோதனை நாவல்கள் எல்லாவற்றிலும் அடிநாதமாக ஒலிக்கிற விஷயமும் இதுதான். இன்றைக்கு அவரே தன்னுடைய உடல் அணு அணுவாகச் சிதறுண்டு போக அனுமதித்து ஆழ்ந்தகன்ற அமைதியோடு மீளா உறக்கம் உறங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு என் அஞ்சலி.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்