திசையில்லாப் பயணம் 8: சங்கத் தமிழே நாடகத் தமிழ்!

By இந்திரா பார்த்தசாரதி

‘முத்தமிழ்’ என்றால் ‘இயல், இசை, நாட கம்’ என்று சொல்லப்படுவது வழக்கம். ‘முத்தமிழ் விரவிய பாட்டுடைச் செய்யுள்’என்று சிலப்பதிகாரத்தில் வருகிறது. இது ‘சேர, சோழ, பாண்டிய’ மூன்று நாடுகளுக் குரிய தமிழ் என்று கூறுவதும் பொருந்தும். அடியார்க்குநல்லார் தம் உரையில், ஆங்காங்கே, சில சொற்களை, ‘இது மலைநாட்டு வழக்கு’ என்று குறிப்பிடுவது இதனால்தானோ!

‘நாடகம்’ என்பது ‘கூத்தின்’ உட்பிரிவு என்றும், ‘கதை தழுவி வருவது கூத்து’ என்றும் அடியார்க்குநல்லார் சொல்கிறார். சமஸ்கிருத்தத் தில் இதற்கு ‘நாட்டிய’ என்பார்கள். ‘நாட்டியம்’ என்ற சொல் தற்காலத்தில், ‘நடனத்தை’ மட்டும் குறிக்கும் சொல்லாக வழங்குகிறது. ஆனால், பரதர் எழுதியுள்ள ‘நாட்டிய சாஸ்திரம்’, ‘இயல், இசை, நாடகம்’ ஆகிய மூன்றுக்கும் உரிய இலக் கண நூல். ‘நாட்டியம்’, ‘ கூத்து’ ஆகியவைதான் ஆங்கிலத்தில் ‘theatre’ எனப்படும். ‘கூத்து’ என்ற சொல் இயலையும், இசையையும், நாடகத்தையும் குறிக்கும் சொல்லாக வழங்குவதினால், அது எப்படி வழக்காற்றில் வந்தது என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது.

‘கூற்று’ என்ற சொல் கூத்தாக வந்திருக்கக் கூடுமோ? ‘ற’கரம் தமிழில், ‘த’கரமாகப் பேச்சு வழக்கில் மாறுவது இயல்பு. ஆகவே ‘கூற்று’ என்பதுதான், ‘கூத்தாக’ மாறியிருக்குமோ?

தொல்காப்பியம், அகத்திணையில் வரும் கதை மாந்தர்கள் எந்தெந்த இடத்தில், அதாவது, எந்தெந்த சூழ்நிலையில் கூற்று நிகழ்த்த வேண்டும் என்று பட்டியல் தருகிறார். அப்படியானால், அகத்திணைப் பாடல்கள் நாடகத் தனிமொழிகளா, உரையாடல்களா என்று சிந்திக்கத் தோன்றுகிறது. ஆகவே, ‘கூற்று’ என்பதுதான், ‘கூத்தாக’ மருகிவிட்டதா?

தொல்காப்பியம், ஏற்கெனவே இருந்திருக்கக் கூடிய பெரும்பான்மையான சங்க நூல்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு எழுதப்பட்ட இலக்கணம் என்றால், தொல்காப்பியத்தில் உள்ள ‘அகத்திணையியல் களவியல், கற்பியல்’ ஆகிய அதிகார சூத்திரங்கள் அரங்கியலுக்காகவே எழுதப்பட்டவையா என்ற கேள்வியும் எழுகிறது.

ஒரு நாடகத்துக்குக் கதா பாத்திரங்கள் வேண்டும். அவர்கள் எந்தெந்தச் சூழ்நிலையில் என்னென்ன பேச வேண்டும்? அவர்கள் இருக்கும் இடம் எது? அவர்கள் இருக்கும் இடத்தின் பூகோள மற்றும் காலப் பின்னணி என்ன? எந்தெந்த நேரத்தில் அவர்கள் சந்தித்துப் பேசுகிறார்கள்… போன்ற செய்திகளும் நாடக இலக்கணமாகின்றன.

தொல்காப்பியம் இவை அனைத்தையும் சூத்திரங்களாக விளக்குகிறது. சங்கப் பாடல்களை மனதில்கொண்டுதான் தொல்காப்பியர் இந்தச் சூத்திரங்களை யாத்திருப்பார் என்று உறுதியாகக் கூறலாம். தலைவிக் கூற்று, தோழிக் கூற்று, செவிலித்தாய்க் கூற்று, நற்றாய்க் கூற்று, காமக்கிழத்தியர் கூற்று என்று இக்கூற்றுகள் நிகழும் இடத்தை வகைப்படுத்தியிருப்பது, அகத்திணையியல் சங்கப் பாடலாகிய ஓரங்க நாடகத்தை மனதில்கொண்டுதான்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை என்ற ஐந்திணைகளுக்குக்கு உரிய ஒழுக்கங்களும் நாடகம் சார்ந்தே வருகின்றன.

நாடக வழக்கு என்றால் என்ன? இளம்பூரணர் கூறுகிறார்: ‘சுவைபட வருவனெல்லம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறல். அன்பினானும் ஒத்தார் இருவராய்த் தமரின் நீங்கித் தனியிடத்து மின்றி எனவும், அவ்வுழிக் கொடுப்போருமின்றி அடுப்போரு வேட்கை மிகுதியால் புணர்ந்தார் எனவும், பின்னும் அவர் களவொழுக்கம் நடத்தி இலக்கண வகையால் வரைந்தெய்தினார் எனவும் பிறவும் இந்திகரானவைகிச் சுவைபட வருவனவெல்லாம் ஒருங்கு வந்தனவாக் கூறல்’

யதார்த்த வாழ்க்கையில் நடப்பதைப்போல் அல்லாமல், கற்பனையாகக் கதைத் தொடர்ச்சி யுடன், சற்று மிகைபடக் கூறுதல் என்பது இதன் பொருள். ஆகவே யதார்த்த வாழ்க்கையில் அந்தக் காலத்தில் நடந்திருக்க வேண்டுமென்று கூறுவது பாரதி கூறுவது போல், ‘காவியத்தே நாடகத்தே காதலை வரவேற்கின்றார்கள், சமூக நடப்பில் காதல் என்றால் பாடை கட்டி விடுகின்றார்கள்’ என்பது உண்மைதான்.

‘கதைத் தழுவி வருவது கூத்து’ என்கிறார் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்குநல்லார். அதுமட்டுமல்ல அவரே கதை என்பது ‘புனைந்து கூறுவது’ என்கிறார். ‘கூத்து’ என்பது ‘கற்பனை’ என்றும், ‘பொய்’ என்றும் பொருள்படத் திருவாய்மொழியில் வருகிறது.

‘உலகியல் வழக்கை’ விளக்கும்போது, ‘உலகத்தார் ஒழுகலாற்றோடு ஒத்து வருதல்’ என்று இளம்பூரணர் கூறியிருப்பதால், உலகத் தார் வாழ்க்கை, ஒருங்குசேர, சுவைபட, அமை வதில்லை என்று அவர் குறிப்பிடுகிறாரா என்று எண்ண வேண்டியிருக்கிறது. ஆகவே, நாடகத்தில் கற்பனை மெருகு ஊட்டி, நாடக மரபுக்கு ஏற்பப் பாடல்கள் அமைய வேண்டும். அவை தன் கூற்றாகவோ, உரையாடல்களாகவோ (கலிதொகை) அமையலாம்.

புறத்திணைப் பாடல்கள் உலகியல் வழக்கைச் சொல்கின்றனவா என்ற கேள்வி எழக்கூடும். இளம்பூரணர், ‘புறப்பொருள் உலகியல்பாலன்றி வாராமையின் அது நாடக வழக்கு அன்றாயிற்று’ என்று கூறியிருப்பதனால், புறப்பொருள் உலகி யல் வழக்காகக் கூறப்பட்டிருக்கலாமென்று தோன்றுகிறது. தொல்காப்பியர் நாடகத்துக்கு ஏற்றதாகக் கலிப்பாவையும் பரிப்பாடலையும் குறிப்பிடுகிறார். சங்க நூலாகிய பரிபாடலில் ஆக்கியோன், இசை அமைத்தவன், பண் (ராகம்) அனைத்துத் தகவல்களும் தரப்படுகின்றன. ஆகவே, இந்தியாவில் காலத்தால் மிகவும் மூத்த இசை தமிழிசைதான் என்று தெரிகின்றது. தமிழிசைதான் 16-ம் நூற்றாண்டுக்குப் பிறகு கர்னாடக இசை என்று வழங்கலாயிற்று. சிலப்ப திகார இசை, நாடகச் சொற்கள் பலவற்றுக்கு பொருள் விளங்காமைக்குக் காரணம், அவை சமஸ்கிருத மரபுக்கு முந்தியதாக இருக்கக் கூடும் என்கிறார் டாக்டர் உ.வே.சா.

தொன்றுதொட்டுத் தமிழில் இந்த நாடக, இசை மரபு இருந்துவந்த காரணத்தினால்தான், கம்பராமாயணத்தில் உணர்ச்சி செறிந்த இடங் களில் அது நாடகக் காப்பியமாகிவிடுகிறது. வால்மீகி ராமாயணம், கவித்துவ வருணனைகள் மிகுந்திருந்தாலும், எந்த இடத்திலும் நாடகப் பாங்கு புலனாகவில்லை. வழக்காற்றில் ‘கம்ப நாடகம்’ என்று கூறப்படுவதையும் கவனிக்க வேண்டும். கம்பராமாயணத்தில் தோய்ந்த அரு ணாச்சலக் கவிராயர், தான் இயற்றிய நூலுக்கு ‘இராமநாடகக் கீர்த்தனை’என்று தமிழின் நாடக, இசை மரபுக்கு ஏற்பப் பெயரிட்டார்.

தமிழ் நாடகங்களுக்கு முன்னோடி சங்க காலப் பாடல்கள். நாடக இலக்கணம் தொல்காப்பியம். இவை அனைத்தையும் ஆவணப்படுத்திக் காப்பிய வடிவில் தருவதுதான் சிலப்பதிகாரம்.

- பயணம் தொடரும்… | எண்ணங்களைப் பகிர: parthasarathyindira@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

4 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

2 hours ago

மேலும்