என் உலகம்: என் நண்பர்கள்

By தோப்பில் முஹம்மது மீரான்

என் முதல் நாவல் ‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை’ 1988-ல் வெளிவந்தது. அதுவரை தமிழ்ப் படைப்புகள் எதைப் பற்றியும் எனக்குத் தெரியாது; வாசித்ததில்லை. மலையாளம் மூலமாகத்தான் எழுதினேன். எனது நாவலை கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுநிலைப் பாடத்திட்டத்தில் சேர்த்திருந்தார்கள். ஒரு சமயம் திருவனந்தபுரம் போயிருந்தபோது, கேரளப் பல்கலைக்கழகம் சென்று தமிழ்த் துறைத் தலைவரான பேராசிரியர் கி. நாச்சிமுத்துவைச் சந்தித்தேன். அவர் தமிழ்ப் படைப்புகள் பற்றி என்னிடம் பேசினார். எனது பதிலை வைத்து நான் தமிழில் எதுவும் படித்ததில்லை என்பதைப் புரிந்துகொண்டார். அன்று ‘ஒரு புளிய மரத்தின் கதை’, ‘கோபல்ல கிராமம்’ ஆகிய நாவல்களைப் படிக்கத் தந்தார். நான் முதன்முதலில் தமிழ்ப் படைப்புகள் வாசித்தது அப்போதுதான். அவர் மூலமாகத்தான் ஆ. மாதவன் எனும் தமிழ் எழுத்தாளர் திருவனந்தபுரத்தில் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டேன்.

ஆ. மாதவனைச் சென்று பார்த்தேன். அவரது ‘கடைத்தெருக் கதைகள்’ புத்தகத்தை வாசிக்கத் தந்தார். முதன்முதலில் ஒரு தமிழ் எழுத்தாளரின் பழக்கம் அப்போதுதான் எனக்கு ஏற்பட்டது.

அதன் பிறகு வியாபார விஷயமாகத் திருவனந்தபுரம் செல்லும்போதெல்லாம் ‘செல்வி ஸ்டோர்’ சென்று மாதவனுடன் பேசிக்கொண்டிருப்பேன். அவர்தான் பல தமிழ்ப் படைப்புகளை அறிமுகப்படுத் திவைத்தார். அவர் மூலமாகத்தான் சுந்தர ராமசாமியின் நட்பு கிடைத்தது.

சுந்தர ராமசாமியை நாகர்கோவிலில் சென்று சந்தித்தேன். அவரிடம் எனது ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ நாவலைக் கொடுத்தேன். நாவலைப் பற்றிய அவரது கருத்தை எதிர்பார்த்திருந்தேன். ஆனால், அவர் மெளனமாகவே இருந்தார். அது நடந்து ஒரு வருடத்துக்குப் பிறகு அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் நாவலின் ஐந்து படிகளை நெய்தல் கிருஷ்ணனுக்கு அனுப்பிவைக்கவும் என எழுதியிருந்தார். நெய்தல் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த அந்தக் கூட்டத்துக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வ.ஐ. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். எனக்கு எதிர்பாராத சந்தோஷமாக சுந்தர ராமசாமியே அந்த நாவலைப் பாராட்டிப் பேசினார். எனது நாவலுக்குக் கிடைத்த முதல் பாராட்டு அதுதான். அதன் பிறகு எனக்கும் சுந்தர ராமசாமிக்குமான நட்பு நெருக்கமானது. எனது ‘கூனன் தோப்பு’ நாவலுக்கு அவரிடம் முன்னுரை எழுதிக் கேட்டேன். முன்னுரை எழுதியதோடு அல்லாமல் நாவலில் உள்ள பிழைகளைத் திருத்தவும் உதவினார். இலக்கியம் தொடர்பாகப் பல அறிவுரைகளை அவரிடம் கேட்டுக்கொள்வேன். அவர் போட்டுத்தந்த தடத்தில் இன்றுவரை பயணித்துக்கொண்டிருக்கிறேன்.

கி. ராஜநாராயணனுடனும் எனக்கு நெருங்கிய நட்புண்டு. அவரைச் சந்திப்பதற்காகவே பாண்டிச்சேரி சென்றேன். இன்றுவரை அவருடனான நட்பு தொடர்கிறது. அவரும் அவரது மனைவி குணவதி அம்மாளும் எங்கள் பிரியத்துக்குரிய குடும்ப நண்பர்கள். எனக்கு சாகித்ய அகாடமி விருது கிடைக்க ஒரு வழியில் கி.ரா. முக்கியக் காரணம்.

தி.க. சிவசங்கரன் பணி ஓய்வுபெற்று திருநெல்வேலிக்கு வந்த பிறகுதான் அவர் எனக்குப் பழக்கம். தினசரி அவரைச் சென்று சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். நள்ளிரவு 12 மணிக்கெல்லாம் அவர் வீட்டுக்குப் போயிருக்கிறேன். அவர் உறங்கிய பிறகும் அவர் வீட்டுக் கதவைத் தட்டியிருக்கிறேன். எவ்வளவு உறக்கத்தில் இருந்தாலும் ‘மீரான்’ என்ற சப்தத்தைக் கேட்டு எழுந்து வந்துவிடுவார் அவர். அவரோடு பேசிக்கொண்டிருந்த ஒரு நள்ளிரவு எனக்குத் தெளிவாக நினைவிருக்கிறது. அன்று தி.க.சி.க்கு ஒரு அழைப்பு வந்தது. இந்தச் சமயத்தில் யார் அழைக்கிறார்கள் என நினைத்தேன். ஆனால், அவர் சாதாரணமாகத்தான் பேசினார். பிறகு சந்தோஷப்பட்டதுபோலத் தெரிந்தது. “அவர் பக்கத்தில்தான் இருக்கிறார். நீங்களே பேசுங்கள்” என்று சொல்லிவிட்டுத் தொலை பேசியை என்னிடம் கொடுத்தார். மறுமுனையில் பேசியவர், “உங் களுக்கு சாகித்ய அகாடமி கிடைத்திருக்கிறது. டிவியில் சொன்னார்கள்” என்றார். அதைக் கேட்டதும் உணர்ச்சி வசப்பட்டுப் போனேன். என்னுடன் பேசியவருக்கு நன்றி சொல்ல வில்லை. அவர் யார், பேரென்ன? என்று கூடக் கேட்க வில்லை. இன்றுவரை அவர் யாரெனத் தெரியாது. தி.க.சி.யை நினைக்கும்போதெல்லாம் எனக்கு இந்தச் சம்பவம் நினைவுக்கு வரும்.

தி.க.சி. எனக்கு நண்பரான பிறகு எனது எல்லா எழுத்துகளின் முதல் வாசகர் அவர்தான். அவற்றில் உள்ள பிழைகளைக் கவனம் எடுத்துத் திருத்தித் தருவார். அவர் எனக்குள் ஒரு பாகமாக இருந்தார். அவர் மறைந்தபோது என்னுடலில் ஒரு உறுப்பை இழந்ததுபோல் உணர்ந்தேன். நெல்லையில் பேரெடுத்துச் சொல்லக்கூடிய ஒரு நண்பர் கிருஷி என்று எல்லோராலும் அழைக்கப்படும் ராமகிருஷ்ணன். இவர்கள் தவிர இந்திரா பார்த்தசாரதி, வாஸந்தி ஆகியோருடனும் எனக்கு நெருங்கிய நட்புண்டு.

மலையாளத்தில் எனக்கு நண்பர்கள் பலருண்டு. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒருவர், மறைந்த மலையாள கரமனை ஜனார்த்தனன் நாயர். ‘எலிப்பத்தாயம்’ படம் மூலம் பெரும் புகழ்பெற்றவர். எனக்கு அவருக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. இங்கே திருநெல்வேலியில் வந்து பல நாட்கள் வந்து தங்கியிருக்கிறார். என்னுடைய ‘கூனன் தோப்பு’ நாவலை மலையாள வார இதழான ‘கலாகெளமுதி’யில் நேரடி யாகக் கொண்டுவரப் பெரும் முயற்சி எடுத்துக்கொண்டார். ஆனால், மதக் கலவரம் ஏற்படும் என மறுத்துவிட்டார்கள். அந்த நாவல் தமிழில் வெளிவந்த பிறகு மலையாளத்தில் மொழிபெயர்க்கப் பட்டபோது அதை இதே ‘கலாகெளமுதி’ வெளியிட்டது. அந்த மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருதும் கிடைத்தது. இன்னும் நண்பர்கள் பலர் நினைவுக்கு வருகிறார்கள். ஆனால் எல்லோரையும் ஒரே கட்டுரைக்குள் அடக்க முடியவில்லை.

-(தொடரும்)

தோப்பில் முஹம்மது மீரான், மூத்த தமிழ் எழுத்தாளர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

17 mins ago

இந்தியா

25 mins ago

தமிழகம்

53 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்