இலக்கியம்

இந்தியா 75: படைப்புகள் வழி இந்தியா

செய்திப்பிரிவு

சம்ஸ்காரா

ஞானபீட விருதுபெற்ற கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’ நாவல், இந்திய மொழிகளில் சிறந்த நாவலாகக் கருதப்படுகிறது. பிராமணியத்தைத் துறந்த நாரணப்பா என்பவரின் மரணத்துடன் தொடங்கும் நாவல், அவரது சடலத்தைக் கொண்டே சுதந்திர இந்தியாவின் நிலையைச் சொல்கிறது.

செம்மீன்

மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரன் பிள்ளையின் புகழ்பெற்ற நாவல் இது. சாகித்ய அகாடமி பரிசுபெற்ற முதல் மலையாள நாவலான இது, மீனவர்களின் வாழ்க்கையை அவர்களது நம்பிக்கைகளின் பின்னணியில் சொன்னது. இதன் நாயகர்கள் கருத்தம்மாவும் பாரீக்குட்டியும் உதாரண புருஷர்களாக இன்றும் இருக்கிறார்கள்.

தர்பாரி ராகம்

இந்தி எழுத்தாளர் ஸ்ரீலால் சுக்ல எழுதிய இந்த நாவல், அதன் அங்கத பாணிக்காக மிகவும் ரசிக்கப்பட்டது. ஷிவ்பால்கஞ்ச் என்னும் கிராமத்தின் வழி அமைப்புகளை சுக்ல இதன் மூலம் கேள்விக்கு உட்படுத்துகிறார். தர்பாரி ராகம் என்பதே தர்பார்களின் அரசியல் எனப் பொருள்படும்படி இந்த நாவலை எழுதியுள்ளார்.

அக்னி நதி

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த உருது எழுத்தாளர் குர்அதுல் ஐன் ஹைதரின் ‘அக்னி நதி’ கௌதம நீலாம்பரன் என்ற இளைஞனை மையமாகக் கொண்டது. சரயூ நதியை நீந்திக் கடந்து ஞானத் தேடலை அவன் மேற்கொள்கிறான். இந்தப் பயணம்தான் நாவலின் பின்னணி.

ஆரோக்ய நிகேதனம்

ஜீவன்மஷாய் என்னும் மையப் பாத்திரத்தின் வழியாக இந்த நாவல் விரிகிறது. பாரம்பரிய முறை மருத்துவரான இவர் வழியாகப் புதிய உலகின் மாற்றங்களை இந்த நாவல் சிறப்பாகச் சித்தரிக்கிறது. புகழ்பெற்ற வங்க எழுத்தாளர் தாராசங்கர் பந்த்யோபாத்யாய இதன் ஆசிரியர்.

ஜீவன் லீலா

இந்தியாவின் நதிகள், கடல்சங்கமங்கள் பற்றி காந்தியவாதியும் எழுத்தாளருமான காகா காலேல்கரின் குஜராத்திப் பயண அனுபவ நூல் இது. கூவம், அடையாறு நதிகளைக் குறித்த பதிவும் இதில் உள்ளது. இதிகாசம், வரலாறு, வாழ்க்கை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்தப் பயணத்தை எழுதியிருப்பது விசேஷமான அம்சம்.

பன்கர்வாடி

ஓராசிரியர் பள்ளி ஆசிரியரான நாயகன், அடிப்படை வசதி இல்லாத சுதந்திர இந்தியாவின் பன்கர்வாடி கிராமத்துக்கு வந்துசேர்கிறார். அந்தக் கிராமத்து மக்களுக்குக் கல்வி விளக்கை ஏற்றிவைக்க அவர் படும்பாடுதான் இந்த நாவல். புகழ்பெற்ற மராத்தி எழுத்தாளர் வெங்கடேஷ் மால்கூட்கரின் நாவல் இது.

அவன் காட்டை வென்றான்

சினைப் பன்றியைத் தேடிக் காட்டுக்குள் செல்லும் ஒரு முதியவரின் கதைதான் இந்த நாவல். விவரிப்பு மொழியில் புனையப்
பட்டிருக்கும் இந்த நாவல், பல கேள்விகளை எழுப்புகிறது. தெலுங்கு எழுத்தாளர் கேசவ ரெட்டி இந்த நாவலை எழுதியுள்ளார்.

சூரியகாந்திப் பூவின் கனவு

தன்சிரி நதிக்கரையில் இருக்கும் ஒரு கிராமப்புறத்தை மையமாக வைத்து எழுதப்பட்டது இந்நாவல். ஒரே வீட்டுக்குள் இருக்கும் பலதரப்பட்ட வாழ்க்கை முறையை மூன்று கதாபாத்திரங்கள் வழியே சொல்கிறது. அஸ்ஸாமிய எழுத்தாளர் ஸையத் அப்துல் மாலிக் எழுதிய இந்நாவல் இந்திய அளவில் கவனம்பெற்றது.

துருவ நட்சத்திரங்கள்

கேரளம், தமிழ்நாடு, அமெரிக்கா ஆகிய பகுதிகளைக் களமாகக் கொண்ட பஞ்சாபி நாவல் இது. பஞ்சாபி எழுத்தாளர் குல்ஜார் சிங் சித்து எழுதிய இந்நாவல், கணவன் - மனைவி உறவு, கிழக்குக்கும் மேற்குக்குமான வாழ்க்கை முரண்கள் ஆகிய அம்சங்களைப் பேசுகிறது.

SCROLL FOR NEXT