நாவல்: போரும் துயரமும்

By செல்வ புவியரசன்

நடந்த இறுதிப் போரில் சிறைபிடிக்கப்பட்ட போராளிகள் அனுபவித்த சித்திரவதைக் கொடுமைகளின் பின்னணியில் ‘விடமேறிய கனவு’ என்ற நாவலை எழுதியிருக்கிறார் குணா கவியழகன்.

ஈழத்தில் களத்தில் நின்று போராடியவர்கள் கடைசியில் இயக்கத் தலைவர் இறந்துவிட்டார் என்ற செய்திக்குக்கூடக் காது கொடுக்காமல் தங்களது உயிரைக் காத்துக்கொள்வதற்காகச் சோற்றுப் பொட்டலங்களுக்கும் தண்ணீர் பாட்டிலுக்கும் கையேந்தி நிற்கிறார்கள்.

ஐ.நா.அமைப்போ, செஞ்சிலுவைச் சங்கமோ தங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையும் பொய்த்துப்போனது. எதிரிகளாக இருந்தவர்களிடமே சரணடைந்து அவர்களிடம் உயிரை இரந்து நிற்கும் நிலைக்கு ஆளாகிவிட்டனர். இரவில் விலங்கிடப்பட்டும் பகலில் சித்திரவதைகளுக்கு ஆளாகியும் மரணத்தின் முன்னால் அவர்களது வாழ்க்கை ஊசலாடுகிறது, ராணுவத்துக்கும் புலனாய்வு அமைப்பினருக்கும் இடையே பந்தாடப்படுகிறது. இயற்பெயரையும் இயக்கப் பெயரையும் மாற்றிச் சொல்லித் தப்பிக்க முயல்கிறார்கள். ஒற்றராய் இருக்கக்கூடுமோ என்று தங்களவர்களையே சந்தேகிக்கவும் செய்கிறார்கள்.

எந்த நொடியிலும் மரணம் நிகழக்கூடும் என்றறிந்த பிறகு, மனித மனம் மரணத்தைத் தடுத்துவிட, குறைந்தபட்சம் அதைத் தள்ளிப்போட்டுவிட வாய்ப்புள்ள வழிகளையெல்லாம் ஒவ்வொன்றாகச் சூழலுக்குப் பொருத்திப் பார்த்து, ஏதோவொன்றைக் கைக்கொள்ளத் துடிக்கிறது. அதே நேரத்தில், எதிர் நிற்கும் மரணம் தம்மை ஆட்கொண்டு விடுவதற் குள், வாழ்வின் இனிமையையும் துயரையும் உணர்த்திய சகல நினைவுகளையும் மீட்டெடுத்துப் பார்த்துவிடவும் விழை கிறது. விரும்பி ஏற்றுக்கொண்ட மரணம்தான் என்றபோது கலங்காது உவகை கொண்டிருந்த மனம், மரணம் நெருங்கி வரும்போது மாறிநிற்கிறது. எதை அடைவதற்காக உயிரை விலை கொடுக்கும் துணிவு பிறந்ததோ அது கனவாகவே கரைந்துவிட்டது. இப்போது எஞ்சி நிற்பது உயிர் மட்டும்தான்.

இனிமேல் அடைய வாய்ப்பே இல்லாத லட்சியத்திற்காக உயிரை விடுவது விவேகமல்ல. எனினும் இதுவரை பேணிவந்த அறத்தை உயிரின் பொருட்டு இழப்பதிலும் உடன்பாடில்லை. இவ்விரண்டு உணர்ச்சிகளுக்கும் இடையிலான போராட்டம்தான் இந்த நாவலின் மையம்.

குணா கவியழகனின் இரண்டாவது நாவல் இது. முதல் நாவலான ‘நஞ்சுண்ட காடு’, விடுதலைக்காகக் கூடுதல் விலை கொடுப்பதே தோல்விதான் என்று முன்னறிவித்தது. இரண்டாவது நாவலான ‘விடமேறிய கனவு’, போரின் முடிவு சர்வ நிச்சயமாகப் போராளிகளுக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்ட பிறகும் ஏன் அவர்கள் தொடர்ந்து களத்தில் நின்றார்கள் என்ற கேள்வியை எழுப்பி, பதிலைத் தேடுகிறது. இந்தப் பதில் அரசியல்ரீதியானதல்ல. மாறாக, தனிமனிதனின் ஆழ்மனதில் குமிழியிடும் நுண்ணுணர்ச்சிகளின் ஆதாரத்தைப் பற்றிய விசாரணை. அதுவே இந்நாவலைப் போர் இலக்கியம் என்பதையும் தாண்டித் தனித்துவம் கொண்ட நாவலாக வெற்றிபெறச் செய்திருக்கிறது.

ஒரே எடுப்பில் படித்து முடித்துவிடுகிற வகையில் மிகச் சரளமான நடை. எனினும் பக்கங் களைப் புரட்டிப் போக நாம் கல்நெஞ்சினராக இருந்தால் மட்டுமே முடியும். நாவல் முழுவதும் தனக்குத்தானே கீறி மருந்திட்டுக்கொள்ளும் துயருற்ற நெஞ்சத்தின் சுய எள்ளலின் கரிப்புச்சுவை இழையோடி நிற்கிறது.

விடமேறிய கனவு

குணா கவியழகன்

வெளியீடு: அகல், ராயப்பேட்டை சென்னை-14

தொலைபேசி: 98843 22398

பக்கங்கள்: 256 விலை: ரூ.240

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்