நூல்நோக்கு: குடும்ப அமைப்புக்குள் பெண்களின் பாடு

By சுப்பிரமணி இரமேஷ்

பிச்சியின் பாடு
பி.உஷாதேவி
அகநி வெளியீடு
அம்மையப்பட்டு, வந்தவாசி - 604 408
விலை: ரூ.140
தொடர்புக்கு: 98426 94443

பி.உஷாதேவியின் தாய்மொழி மலையாளம். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் சிறுகதைகளை எழுதிவருகிறார். ‘வீடு பள்ளத்தில் இருக்கிறது’, ‘ஊதா வண்ண இலைகளின் பாடல்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து வெளிவந்துள்ள தொகுப்பு ‘பிச்சியின் பாடு’. வளர்ச்சியானது உறவுகளுக்குள் ஏற்படுத்தும் நுட்பமான விரிசலையும், அதை எதிர்கொள்ள முடியாத ஆண்களின் இயலாமையையும் முதல் தொகுப்பில் செறிவாக எழுதியிருந்தார். இந்த மூன்றாவது தொகுப்பு வருவதற்குள், கீழ்நடுத்தரக் குடும்பப் பெண்களின் பிரச்சினைகளை உணர்வுபூர்வமாக எழுதுவதில் பி.உஷாதேவியின் கை தேர்ந்திருக்கிறது. இந்தத் தொகுப்பின் கதைகள் ஒரு குறிப்பிட்ட நிலத்தை அழித்துப் பொதுவெளியை உருவாக்கியிருக்கின்றன. பி.உஷாதேவி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனினும் எங்கும் இருக்கும் பெண்களின் துயரங்களையே இவர் கூர்மையாக்கியிருக்கிறார்.

எங்கோ பிறந்து செழிப்புடன் வளர்ந்து, மணமாகிக் கணவன் வீட்டுக்கு வரும் பெண்கள், அந்தக் குடும்பத்துக்காகத் தங்களை எப்படியெல்லாம் கரைத்துக்கொள்கிறார்கள் என்ற குரலை உஷாதேவி தம் புனைவுகளூடாகத் தொடர்ந்து எழுப்பிக்கொண்டே இருக்கிறார். அத்தகைய பெண்களை ஆண்கள் நடத்தும் விதம் மிக மோசமாக இருக்கிறது என்ற வருத்தமும் அந்தக் குரலில் சேர்ந்திருக்கிறது. இவரது கதைகளில் வெளிப்படும் பெண்களெல்லாம் ஆண்களின் குறைகளை மனமுவந்து ஏற்றுக்கொண்டு, அதற்கேற்பத் தங்களைத் தகவமைத்துக்கொண்டு வாழ்பவர்கள். அந்தக் குறைகள் ஏற்படுத்தும் குற்றவுணர்விலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள நினைக்கும் ஆண்கள் தம் வீட்டிலுள்ள பெண்களை எவ்வாறு துயரத்துக்கு உள்ளாக்குகிறார்கள் என்ற உளவியலையும் அருமையாக எழுதியிருக்கிறார்.

காதல் திருமணத்தின் தோல்விகள் குறித்து இந்தத் தொகுப்பின் பல கதைகள் வெளிப்படையாக விமர்சிக்கின்றன. போலவே, ஆண்களின் இரட்டை மனநிலை பற்றியும் உஷாதேவி தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார். இவரது கதைகளில் வரும் ஆண்கள் கல்வியிலும் வசதிவாய்ப்பிலும் உயர் நிலைக்குப் போனாலும், ஒன்றுமில்லாமல் அடிமட்டத்தில் கிடந்தாலும் பெண்களை ஒன்றுபோலவே நடத்துகின்றனர் என்பதைக் கோடிட்டுக்காட்டுகிறார். இது காலங்காலமாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் பிரச்சினைதான் என்றாலும் இந்த யதார்த்தம் மாறும் வரை இப்படியான கதைகள் வரத்தான் வேண்டும். கதைகளில் வரும் பெண்களெல்லாம் துயரங்களில் உழன்றுகொண்டிருந்தாலும் அவர்களிடம் வெளிப்படும் வலிமை முக்கியமானதாக இருக்கிறது. இந்த வலிமைதான் குடும்ப அமைப்பை உண்மையில் தாங்கிக்கொண்டிருக்கிறது. இந்த வலிமை பலவீனப்பட்டாலோ, கனன்றுகொண்டிருக்கும் இந்த வலிமை பற்றிக்கொண்டாலோ என்னவாகும் என்றும் எழுதத் தொடங்க வேண்டும்.

- சுப்பிரமணி இரமேஷ், ‘தொடக்க காலத் தமிழ் நாவல்கள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: ramesh5480@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

தமிழகம்

29 mins ago

ஓடிடி களம்

31 mins ago

விளையாட்டு

46 mins ago

சினிமா

48 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

51 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்