அதிகாரத்துக்கு எதிராக நினைவுகளின் போராட்டம்

By ஷங்கர்ராமசுப்ரமணியன்

நிழல்களின் உரையாடல்
மார்த்தா த்ராபா
தமிழில்: அமரந்த்தா
காலக்குறி - யாழ் வெளியீடு
புழல், சென்னை-66.
தொடர்புக்கு:
99405 87670
விலை: 250

ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஒரு வீட்டில் சந்தித்துக்கொள்ளும் இரண்டு பெண்களின் உரையாடல்தான் ‘நிழல்களின் உரையாடல்’ நாவல். உருகுவே நாட்டில் மோன்தேவீதேயோ நகரத்தில் புகழ்பெற்ற முன்னாள் நாடக நடிகை ஐரீனுக்கும், அவளைவிட இளையவளுமான தொலோரெஸுக்கும் நடக்கும் உரையாடல் அது. இரண்டு பெண்களுக்குள் நடக்கும் உரையாடல், இரண்டு பெண்களும் உரையாடலின் இடையில் தங்கள் மனதில் அசைபோடும் எண்ணங்கள், கதையைக் கூறும் மூன்றாவது குரல் என்று மாறி மாறி வெளிப்பட்டு, வாசகரின் கவனத்தைக் கடைசி வரை கோரும் தீவிரமான படைப்பு இது.

1970-களில் ஜனநாயக அரசுகள் தூக்கியெறியப்பட்டு, ராணுவ அரசுகள் கொடுங்கோன்மை செய்த அர்ஜென்டினா, சிலி, உருகுவே நாடுகளின் சமூக, அரசியல் சித்திரம் நாவலாக உருக்கொண்டுள்ளது. 1968 முதல் 1973 வரையிலான காலகட்டத்தில் இருந்த அந்நாட்டுச் சமூகச் சூழல்கள் இரண்டு பெண்களுக்குள் ஒரு வீட்டில் நடக்கும் உரையாடலில் ஒரு பிரம்மாண்ட நாடகம்போல உருக்கொள்கின்றன. தாங்கள் கடைசியாகச் சந்தித்த பிற்பகல் விருந்தொன்றில், காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு, பல்வேறு இன்னல்களுக்குள்ளாகிப் பிரிந்துபோன பிறகு நடந்தவற்றை அவர்கள் பகிர்ந்துகொள்கின்றனர். தங்களுக்கு நடந்த கொடுமைகள், குழந்தைகள், நெருக்கமான உறவினர்கள், நண்பர்களுக்கு நடந்த கைதுகள், சித்ரவதைகள், மரணங்கள், காணாமல்போதல்கள் விவரிக்கப்படுகின்றன. நாம் பெருங்கொடுமை என்று நினைக்கும் ஒன்றை நாம் கடந்த பிறகு அது சாதாரணமாகச் சொல்லக்கூடிய யதார்த்தமாகிவிடுகிறது என்பதை உணர்கிறோம். ‘சாவு நெருக்கத்தில் வரும்போது வாழ வேண்டுமென்ற ஆவல் மேலிடும்’ உணர்வை நாமும் வாசிப்பின் வழியாக நம்மில் அடையாளம் காண்கிறோம்.

ஐரீன், தொலோரெஸ் இருவருமே வேறுவேறு விதமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தவர்கள். ஐரீன் அரசியல் சூழலிலிருந்து விலகியிருக்க முயல்பவள். தொலோரெஸ் தலைமறைவு அரசியல் செயல்பாட்டாளராக இருப்பவள். அவள் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு வயிற்றில் வளரும் சிசுவை போலீஸாரின் வன்முறைக்குப் பலியாகக் கொடுத்தவள்.
ஒரு கவிதாயினியும் ஒரு நாடக நடிகையும் பேசும் உரையாடல் என்பதால், பேச்சு கனமாகவும் வாசகர்கள் சுயத்தையும் பரிசீலிப்பதாகவும் ஆழமான உண்மைகளை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. ஐந்தாண்டுகளுக்கு முன் பார்த்தவர்கள் பரஸ்பரம் எவ்வளவு மாறிப்போயிருக்கிறார்கள் என்பதை இரண்டு பெண்களும் திரும்பத் திரும்ப அலசிக்கொண்டே இருக்கிறார்கள். தமது பழைய அனுபவங்கள், நினைவுகள் வழி உருவான முந்தைய சுயத்தின் சாயல்களை அவர்கள் பரிசோதித்துக்கொண்டே இருக்கின்றனர்.

அரசும் அதிகாரமும் வலியுறுத்தும் தணிக்கைக்கு, கருத்துரிமைக்கு எதிராகச் செயல்படுத்தும் அச்சுறுத்தலுக்கு, கொடுங்கோன்மைக்கு எதிராகப் பேசுவதன் வழியாக, நினைவுறுத்துவதன் வழியாகப் போராடுபவர்களாகப் பெண்கள் இந்த நாவலில் உள்ளனர்.

காணாமல்போன தங்களின் மகன்களையும் மகள்களையும் எங்கேயென்று கோரி ஆயிரக்கணக்கான அன்னையர், தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களோடு மே சதுக்கத்தில் கூடிய தென்அமெரிக்க வரலாற்றையே உலுக்கிய வியாழக்கிழமை பேரணியும் இந்த நாவலில் இடம்பெறுகின்றன. இங்கே வரலாறும் புனைவும் சேர்கின்றன. இந்த நாவலின் கதைக்களம் தொடர்பிலான பின்னணியும் குறிப்புகளும் தரப்பட்டுள்ளது இந்த நாவலை மேலும் நெருங்குவதற்கான வாய்ப்பு. லத்தீன் அமெரிக்கப் படைப்புகளைக் கூரிய அரசியல் பிரக்ஞையுடன் மொழிபெயர்த்து வரும் அமரந்த்தாவின் முக்கியமான பங்களிப்பு இந்த நூல்.

- ஷங்கர்ராமசுப்ரமணியன், தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

35 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்