எஸ்.ராம்: சில சிந்தனைகள்

By செய்திப்பிரிவு

உயர்தர ஹோட்டலில் ஏகப்பட்ட பணம் செலவழித்து ஒரு கோப்பை காபியைக் குடிப்பவர்கள், மிகச் சிறந்த காபி மிகக் குறைந்த விலையில் கொடுக்கப்பட வேண்டும் என்று கேட்பதில்லை; கேட்கவும் கூசுவார்கள். ஆனால், புத்தகங்கள் என்று வந்துவிட்டால், பதிப்புத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் அன்றாடங்காய்ச்சிகளாக, வயிற்றில் ஈரத் துணியைப் போட்டுக்கொண்டிருக்க வேண்டும். ஊதிய கமிஷன் அவ்வப்போது அள்ளித் தரும் ஊதிய உயர்வுகளோ ஓய்வூதியமோ பிற வசதிகளோ, பதிப்புத் துறையில் வேலை செய்பவர்கள் எதிர்பார்க்கக் கூடாது. ஏனென்றால், அவர்கள் ஒரு ‘புனிதப் பணியில்’ அல்லவா இருக்கிறார்கள்! என்ன கொடுமை இது!

எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் செயல்பாட்டின் ஒரு பகுதியாக எடிட்டர்களை ஏற்றுக்கொண்டாலொழிய எடிட்டர்கள் ஒழுங்காகச் செயல்பட முடியாது. எடிட்டர் ஒருபோதும் எழுத்தாளரின் இடத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது, முடியவும் முடியாது. ஒரு ஆசிரியருக்கு உதவுவதற்குத்தான் எடிட்டர் இருக்கிறார். இதில் ஈகோவுக்கு வேலையே இல்லை.இன்றைக்குத் திரும்பிப் பார்க்கும்போது, எவ்வளவு பண நெருக்கடிகள், ஆள் பற்றாக்குறை, எதிர்மறை விமர்சனங்களுக்கு நடுவில் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி வந்திருக்கிறது என்று நினைத்துப்பார்க்கும்போதே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இந்த மாதிரி ஒரு பெரிய காரியத்தில் நான் ஒரு கருவியாகச் செயல்பட்டிருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வளவு பேர் உழைப்பும் உதவியும் இதற்குப் பின்னால் இருக்கிறது.

புத்தகம் என்பது ஒருவர் எழுதி ஒருவர் வெளியிடுவதால் உருப்பெற்றுவிடுவதில்லை. அது சமூகத்தில் வேர்விட்டுத் தனக்கான ஆகிருதியை வளர்த்துக்கொள்வதற்கு எழுத்தாளர்கள், பதிப்பாளர்களைத் தாண்டி, கல்வி அமைப்பு, ஊடகங்கள், குடும்பம் என்று எல்லா அங்கங்களும் இடம்தர வேண்டும். புத்தகங்களுக்குச் சமூக அந்தஸ்து ஏற்பட வேண்டும். இந்த அந்தஸ்து கிடைக்க, பதிப்பாளர்களும் தங்கள் தொழிலைத் தொழில் திறனோடு மேற்கொள்ள வேண்டும்.அகராதி என்பது ஒரு சொல்லைப் பற்றி அந்தச் சமூகம் என்ன நினைக்கிறது என்பதைத் திரட்டித் தருவது. ஒரு சொல்லின் முழு அர்த்தத்தையும் அது தருவதால், அறிவு சார்ந்த ஒரு சமூகத்தை உருவாக்க அது உதவுகிறது. அதனால், அகராதி என்பது வெறுமனே மொழித் தெளிவைக் கொடுப்பது மட்டுமே இல்லை. அறிவையும் கொடுப்பது.மூன்றாம் உலகச் சமூகம் நாம் என்கிறீர்கள். இந்த மூன்றாம் உலகச் சமூகத்துக்குத்தான் இரண்டு லட்ச ரூபாய்க்குப் பட்டுப் புடவை வாங்குவது தேவையாக இருக்கிறது. முப்பத்தியெட்டு ரூபாய்க்கு காபி தேவையாக இருக்கிறது. புத்தகம் என்று வந்தால் மட்டும் நமது நாடு ஏழை நாடு என்ற ஞாபகம் வருகிறது. புத்தகத்தில் ஆர்வமுள்ள வாசகர்களில் சிலரே புத்தகம் வாங்க வசதி இல்லாதவர்கள். பெரும்பாலானோருக்குப் புத்தகம் வாங்க வசதி நிச்சயம் இருக்கிறது. புத்தகம் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இடம்பெறவில்லை; இதுதான் பிரச்சினை.

என்னைப் பொறுத்த அளவில் அகராதி என்பது ஒரு மொழிக்கருவி மட்டும் இல்லை. அதுவும் ஜனநாயகத்துக்கான ஒரு சாவி. உலகமயமாக்கல் என்கிறோம், பெண்ணுரிமை என்கிறோம், பணவீக்கம் என்கிறோம்; முழு அர்த்தம் தெரியும் வரைக்கும் எல்லாமே வெறும் வார்த்தைகள்தானே? அர்த்தம் தெரியும்போதுதான் வார்த்தைக்குள்ளே இருக்கும் அரசியல் வெளியே வருகிறது. அப்படியென்றால், அகராதி சாமானியர்களுக்கு ஒரு தெளிவையும், அதனால் அவர்கள் கையில் அதிகாரத்தையும் கொடுக்கிறதா, இல்லையா? அதைச் செய்வதுதான் இந்தப் பணியிலுள்ள பெரிய திருப்தி!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்