அரசியல் வாழ்வின் ஒரு பகுதி ஆன தமிழ் சினிமா!

By செய்திப்பிரிவு

தமிழ் சினிமாவின் தொடக்கத்திலிருந்தே தாக்கம் செலுத்திய ஒரு வடிவம், வெகுஜன நாடக மேடை. அந்தப் பாதிப்பிலிருந்து தமிழ் சினிமா மீளவே இல்லை எனலாம். மௌனப் பட யுகத்தில் மேடை நாடகமும் திரைப்படமும் தனித்தனியே வளர்ந்தன. தமிழ் நாடக நடிகர்களின் பலம் வாய்ப்பாட்டு; மௌனப் படத்தில் அதற்கு இடம் இருக்கவில்லை. ஆனால், திரைக்கு ஒலி வந்தவுடன் உடனடி மாற்றம் ஏற்பட்டது. மேடை நடிகர்கள், பாடலாசிரியர்கள், மேடை அமைப்புக் கலைஞர்கள், ஓவியர்கள் ஆகியோர் ஒட்டுமொத்தமாக ஸ்டூடியோக்களுக்குள் நுழைந்தனர். நாடகக் குழுக்களின் இசைக் குழுக்களும் ஸ்டூடியோவில் பணியாற்றத் தொடங்கின. சினிமா என்ற காட்சி ஊடகத்தைப் பொறுத்தவரை இந்த மாற்றம் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தியது. திரைப்படங்கள் வெறும் படமாக்கப்பட்ட நாடகங்களாக உருவாகின. கேமராவின் தனிப் பண்புகள் இடம்பெற வாய்ப்பின்றிப்போனது. சினிமாவின் சிறப்பியல்புகள் குன்றிப்போனது. அதே சமயம், மேடையிலிருந்து தமிழ் சினிமாவுக்குள் புகுந்த இந்தக் குழுப்பெயர்வுதான் தமிழ் சினிமாவுக்குள் அரசியலைக் கொண்டுவந்தது.

1919-ல் ஒத்துழையாமை இயக்கம் வலுப்பெற்றதும் மேடை நாடகம் தமிழகத்தில் அரசியல் பிரச்சாரத்தில் இறங்கியது. சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கியபோது, எல்லா நாடகங்களுமே தேசிய விடுதலைக்கான பிரச்சாரக் களமாக ஆகியிருந்தது. பேசும் படம் தோன்றிய பின் சினிமாவின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமான கூறாகப் பாடல்கள் அமைந்தன. அரசியல் ஈடுபாடு கொண்ட நடிகர்களும், பிற கலைஞர்களும் வெகுஜன மேடையிலிருந்து ஸ்டூடியோக்களுக்குள் நுழைந்தனர். அதன் விளைவாக, தமிழ் சினிமா அரசியல் வாழ்வின் ஒரு பரிமாணமாயிற்று. சினிமாவில் நடிக்க வந்த பல மேடை நடிகர்கள், ஏற்கெனவே நேரடி அரசியலில் ஈடுபட்டவர்களாக இருந்தனர். அவர்கள் சினிமாவுக்குள் வந்ததும் அங்கும் அரசியல் உணர்வு பரவியது.

வரிகொடா இயக்கத்தின்போது சிறை சென்ற எம்.ஜி.நடராஜ பிள்ளை, கள்ளுக்கடை மறியலில் கைதான எஸ்.வி.சுப்பையா பாகவதர் போன்றோர் தொடக்கக் காலத் தமிழ்ப் படங்களின் கதாநாயகர்களாக வலம்வந்தனர். திருநெல்வேலிப் பகுதியில் தீண்டாமை ஒழிப்பில் ஈடுபட்டிருந்த சுந்தரமூர்த்தி ஓதுவாரும் தமிழ்த் திரையுலகின் அன்றைய ஒரு பிரபல நடிகர். காங்கிரஸ் மேடைகளில் பிரச்சாரத்தில் பல ஆண்டுகளாக ஈடுபட்டிருந்த நாடக நடிகர் எம்.வி.மணி திரையுலகில் நுழைந்தார். வேதாரண்யம் நடைப்பயணத்தில் தொண்டராகப் பணியாற்றியவரும், ஆட்சிக்கு எதிரான பாடல்கள் பாடியமைக்காகச் சிறை சென்றவருமான எஸ்.தேவுடு அய்யர், திரையுலகில் நடிகராக ஒளிர்விட்டார். எம்.ஆர்.கமலவேணி போன்ற நடிகர்களும், தேசியவாத செயல்பாட்டுக்காகச் சிறை சென்ற பல மேடைசார் நடிகைகளும் திரையுலகில் நுழைந்தனர்.

காங்கிரஸ் சார்பு சிந்தனை கொண்ட பாடலாசிரியர்களும் நடிகர்களும் தமிழ்த் திரையுலகில் சேர்ந்ததால், தமிழ் சினிமா அக்காலத்தின் அரசியல் போக்கைப் பிரதிபலித்தது. ஆனால், தணிக்கை கெடுபிடியாக இருந்ததால், தேசியக் கருத்துகளை ஒளிவுமறைவாகவே பதிவுசெய்ய முடிந்தது. அதன் ஒரு பகுதியாக, மகாத்மா காந்தி வலியுறுத்திய சமூகச் சீர்திருத்தங்களைப் பேசுவதாக வடிவெடுத்தது.

தொடக்க காலத் தென்னிந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்கவரான ஏ.நாராயணன் தமிழ் சினிமா அரசியலில் பங்காற்ற முடியும் என நம்பினார். விடுதலை இயக்கத்துக்கு சினிமா உதவக்கூடும் என்று நம்பினார். காங்கிரஸ் ஆதரவாளரான அவர், சினிமா நேரடிப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை ஆதரித்தார். இராஜகோபாலாச்சாரி, சத்தியமூர்த்தி, டி.பிரகாசம் ஆகிய தலைவர்களோடும் நாராயணன் தொடர்புகொண்டிருந்தார். தனது வீட்டில் மிகுந்த விளம்பரத்தோடு அந்நியத் துணி எரிப்பை நடத்திவிட்டு, அவர் கதர் அணியத் தொடங்கினார். ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன் தலைவர் என்ற முறையில், அவர் காங்கிரஸ் நிகழ்வுகள் பலவற்றைக் குறித்த செய்திச்சுருள், குறும்படங்களையும் தயாரித்திருந்தார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் நாட்டுத் திரைப்பட மையங்களுக்குப் பயணித்தார். ‘தி இந்து’ ஆங்கில இதழில் சினிமா பற்றி அவர் எழுதிய கட்டுரைகள், வெகுஜனப் பார்வையாளர்கள் மீது சினிமாவுக்கு உள்ள வீச்சு பற்றிய அவரது புரிதலைக் காட்டின.

நாடக நடிகர்கள், பாடகர்கள், நாராயணன் போன்ற பிரபல சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் தமிழ் சினிமாவை அரசியல்மயமாக்கத் தம்மளவில் முயன்றனர். அதோடு, அன்று நிலவிய அரசியல் சூழலும் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழ் பேசும்படம் தோன்றிய காலத்தில், சென்னையிலிருந்த அரசியல் சூழல் வலுவான தேசிய விடுதலை சார்ந்ததாக இருந்தது. வெகுஜன அடிப்படை கொண்ட சினிமா போன்ற எந்த நிகழ்கலையும் அதன் தாக்கத்திலிருந்து தப்பியிருக்க முடியாது. வரிகொடா இயக்கம், தேசிய விடுதலை இயக்கத்தை முதன்முறையாகப் பரவலாக்கியிருந்தது. அதன்மூலம் பல முனிசிபாலிடி மற்றும் உள்ளூர் அரசு நிர்வாகக் குழுக்களில் காங்கிரஸ் இடம்பெறத் தொடங்கியிருந்தது.

வரி கொடா இயக்கத்தின் அரசியல் செயல்பாடுகள் சென்னை ராஜதானியில் புதியதொரு விழிப்பை உருவாக்கியிருந்தன. அரசாங்கம் வெகுஜன தொடர்புச் சாதனங்கள் மீது பலத்த தணிக்கைகளை ஏவியிருந்தது. இயக்கம் முடிவுபெற்றதும், 1935 இந்திய அரசு சட்டம் தேர்தல்களைக் கொண்டுவந்தது. பின்னர், தணிக்கை விதிகள் சற்றுத் தளர்ந்த பின், அரசியல் களத்தோடு ஊடாட்டத்துக்கு சினிமா தயாராக இருந்தது. தமிழகத் திரைப்படக் கலைஞர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தித் தமது படங்களின் மூலம் பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.

சு.தியடோர் பாஸ்கரன் எழுதிய ‘தண்டோராக்காரர்கள்’ புத்தகத்திலிருந்து ஒரு பகுதி...

தண்டோராக்காரர்கள்

சு.தியடோர் பாஸ்கரன்

தமிழில்: அ.மங்கை

அகநி வெளியீடு

அம்மையாபட்டு, வந்தவாசி-604408

தொடர்புக்கு: 98426 37637

விலை: ரூ.220

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

7 mins ago

வாழ்வியல்

12 mins ago

ஜோதிடம்

38 mins ago

க்ரைம்

28 mins ago

இந்தியா

42 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்