நூல்நோக்கு: தடைசெய்யப்பட்ட தலையங்கங்கள்

By செய்திப்பிரிவு

காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்
ப.திருமாவேலன்
பரிசல் வெளியீடு
திருவல்லிக்கேணி, சென்னை-600014.
விலை: ரூ.140
93828 53646

காமராஜருக்கு முன்பே திராவிட இயக்கத்தால் தீவிரமாக ஆதரிக்கப்பட்ட காங்கிரஸ் முதல்வர், ஓமந்தூர் ராமசாமி. இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியதாலும், ஆலய நிர்வாகங்களில் அரசின் கண்காணிப்பை வலுப்படுத்தியதாலும் உள்கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகளைச் சந்தித்த அவர், உள்கட்சிப் போட்டியில் தோல்வியடைந்து, முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. தீவிர காந்தியராகவும் பழுத்த ஆன்மீகவாதியாகவும் விளங்கிய ஓமந்தூராரை ஆதரித்து, 1948 ஏப்ரலில் ‘திராவிட நாடு’ இதழில் அண்ணா எழுதிய இரண்டு தலையங்கங்கள் வகுப்பு துவேஷத்தைத் தூண்டிவிடுவதாய்க் குற்றஞ்சாட்டப்பட்டு ரூ.3,000 பிணை கோரப்பட்டது. அந்த இரண்டு தலையங்கங்களை முன்வைத்து, ஓமந்தூராரின் உயரிய அரசியல் வாழ்க்கையையும், அன்றைய காங்கிரஸ் குழுச் சண்டைகளையும், அவற்றின் பின்னாலிருந்த நோக்கங்களையும் விளக்கியிருக்கிறார் பத்திரிகையாளர் ப.திருமாவேலன்.

- செ.இளவேனில்

பழங்குடி மக்களின் சுதந்திர தாகம்

விடுதலைப் போரில் பழங்குடி மக்கள்
வி.என்.சாமி
வில்லாபுரம்,
மதுரை - 625012.
விலை: ரூ.120
96297 61984

இந்தியாவில் ஆங்கில ஆதிக்கம் ஏற்பட்ட காலத்திலிருந்தே வெள்ளையரை எதிர்த்து நடைபெற்ற பெரும் விடுதலைப் போராட்டங்களில் பழங்குடி இன மக்களின் பங்கும் கணிசமானது. அவர்கள் உயிர்த் தியாகம் செய்து, தங்கள் நாட்டுப்பற்றை எடுத்துக்காட்டியுள்ளனர். ஆனால், அந்தப் போராட்டங்களை வெள்ளையர்கள் ‘கலகம்’ என்றும், ‘வெறும் கிளர்ச்சி’ என்றும் வர்ணித்தனர். அதனால், அவர்களின் வீரச் செயல்கள் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இடம்பெறாமல் போய்விட்டதாகச் சொல்கிறார் நூலாசிரியர். கூர்ந்து கவனிக்கப்படாமல் விடுபட்டுப்போன பழங்குடி மக்களின் போராட்டங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்நூலை உருவாக்கியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் வி.என்சாமி.

- சிவசு

அரபு நாடுகளின் அரசியல்

கடற்காகம்
முஹம்மது யூசுஃப்
யாவரும் பதிப்பகம்
வேளச்சேரி,
சென்னை-600042.
விலை: ரூ.395
90424 61472

இராக், குவைத், சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், அமீரகம், ஓமன், ஈரான் போன்ற அரபு நாடுகளின் அரசியலை இந்நாவல் பேசுகிறது. சுற்றுச்சூழல் போர் என்ற தொழில்நுட்பத்தை வல்லரசு நாடுகள் பயன்படுத்தி, செயற்கை சுனாமி, நிலநடுக்கத்தை உருவாக்குவதை விவரிக்கிறது. வானில் கருமேகம் சூழும்போதெல்லாம், ஈரானிய பார்சி மொழியில் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் சமீரா டீச்சர் கதாபாத்திரம் ஒரு கவிதை. அரபு மண் என்றாலே பாலைவனம், ஒட்டகம், வறட்சி என்றே பழக்கப்பட்ட நமக்கு அதன் இன்னொரு முகத்தைப் பற்றி சுவாரஸ்யமாய்ச் சொல்கிறார் யூசுஃப். நாவலை வாசித்து முடிக்கும்போது பாலஸ்தீன், இராக், சிரியாவின் பிரச்சினைகளை ஓரளவு நம்மால் புரிந்துகொள்ள இயலும். அதுவே வெற்றிதானே?

- இரா.நாறும்பூநாதன்

உரிமைகள் அறிவோம்...

முதியோர், போஸ்கோ மற்றும் வாடகைச் சட்டங்கள்
வெ.முருகன்
சி.சீதாராமன் அண்டு கோ
ராயப்பேட்டை,
சென்னை-600014
மொத்த விலை: ரூ.365
044 - 28111516

குற்றவியல் சட்டங்களைத் தீர்ப்பு விவரங்களுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட வழக்கறிஞர் வெ.முருகன், தொடர்ந்து முக்கியமான சட்டங்கள் பலவற்றையும் தமிழில் மொழிபெயர்த்துவருகிறார். முதிய குடிமக்களின் மற்றும் பெற்றோர்களின் பராமரிப்பு மற்றும் நலவாழ்வுச் சட்டம் 2007, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போஸ்கோ) 2012, தமிழ்நாடு நிலக்கிழார்களின் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகளை மற்றும் பொறுப்புகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் 2017 ஆகியவை வெ.முருகனின் தமிழாக்க வரிசையில் சமீபத்திய வரவுகள். இயற்றப்பட்ட சட்டத்துடன் அதன் நடைமுறை விதிகளையும், அது தொடர்பான வழக்குகளின் தீர்ப்பு விவரங்களையும் இதுவரையிலான சட்டத் திருத்தங்களையும் தொகுத்து வழங்கியுள்ளார் வெ.முருகன்.

- புவி

பிள்ளை பாடிய தந்தை தமிழ்

ஐயா (எ) 95 வயது குழந்தை
வடிவரசு
விஜயா பதிப்பகம்
ராஜ வீதி,
கோயம்புத்தூர் - 641001
விலை: ரூ.80
0422 2382614

கிராமத்து வெள்ளந்தி மனிதரான தனது தந்தையின் 94-வது பிறந்த நாளில், தனது தகப்பனையும் தாயையும் சென்னையிலிருந்து கோவைக்கு அவர்களின் வாழ்நாளில் முதன்முறையாக விமானத்தில் அழைத்துவந்த நினைவின் பதிவும் தொடர்ச்சியும்தான் இந்நூல். வடிவரசு சின்னப் பிள்ளையாக இருந்தபோது, ஒருவர் வீட்டில் டிவி பார்க்கப்போய் அங்கேயே தூங்கிவிட, அந்த வீட்டுக்காரர் இவரைத் தூக்கிவந்து தெருவில் படுக்க வைத்துவிட்டுப் போய்விட்டாராம். மறுநாளே சில ஆடுகளை விற்று டிவி வாங்கிவந்து வைத்துவிட்டு, “உன் கூட்டாளியையெல்லாம் கூட்டி வந்து டிவி பாரு” என்றிருக்கிறார் அவரது தந்தை. இப்படியான ஒரு மனிதருடைய வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைப் படிக்கிற ஒவ்வொரு மகனுக்கும் தனது தகப்பனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றும். இது ஒரு பிள்ளை பாடிய தந்தை தமிழ்.

- மானா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

7 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்