நூல்நோக்கு: தூரங்களின் பாடல்

By செய்திப்பிரிவு

தமிழக சௌராஷ்டிரர்களின் தியாகம்

சுதந்திரப் போராட்டத்தில் சௌராஷ்ட்ரர்
வி.என்.சாமி
வி.என்.சாமி வெளியீடு
வில்லாபுரம்
மதுரை-625012.
96297 61984
விலை ரூ.300

சௌராஷ்டிர சமூகத்தினர் தமிழகம் வந்த பிறகு எப்படி இங்கேயுள்ள சமூகப் பங்களிப்பில் தங்களைப் பிணைத்துக்கொண்டார்கள் என்பதைப் பேசும் புத்தகம் இது. மதுரை காந்தி என்.எம்.ஆர்.சுப்புராமன், குடந்தை கே.கே.ராமாச்சாரி, யோகாசன நிபுணர் வி.என்.குமாரசாமி, வெங்கட்ராமையா, அஷ்டாவதானி பத்மநாபய்யர், பாலாஜி சொர்ணம்மாள், சோலை பாக்கியலட்சுமி அம்மாள், தாயம்மாள் இன்னும் இந்நூலில் வரும் பலருடைய வாழ்க்கையும் தியாகமும் என்றென்றும் நினைவுகூரத்தக்கவை. ராஜாஜியின் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தைத் தினசரிக் குறிப்புகளாக எழுதிய டி.ஆர்.பத்மநாபன், அரிய வரலாற்றுப் பதிவுக்கு உதவியிருக்கிறார். சொந்தபந்தங்களோடு சுதந்திரப் போராட்டத்தில் சௌராஷ்டிரர்கள் ஈடுபட்டதைப் பதிவுசெய்திருக்கிறார் 90 வயதை எட்டிய முதுபெரும் பத்திரிகையாளர் வி.என்.சாமி. பெரியாரின் உதவியாளராகவும் ‘தமிழ்நாடு’, ‘சுதேசமித்திரன்’, ‘தினமணி’ நாளிதழ்களில் நிருபராகவும் பணியாற்றிய இவர் தமிழக அரசியல் வரலாற்றின் நேரடி சாட்சி. இன்றைய இளம் பத்திரிகையாளர்கள் பின்பற்றத்தக்க முன்னோடி.

- சாரி

தூரங்களின் பாடல்

மணல் உரையாடல்
இசாக்
தமிழ் அலை வெளியீடு
தேனாம்பேட்டை, சென்னை-86.
விலை: ரூ.150
9486838801

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதை உணர்ந்து ஆயிரமாயிரம் இளைஞர்கள் சொந்த தேசத்தை விட்டு, தூர தேசம் சென்று உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வலி மிகு துயர வாழ்வை வார்த்தை வயல்களில் விதைத்திருக்கிறார் இசாக். துபாய் தேசத்துக்குச் சென்று நிமிடந்தோறும் நெஞ்சில் குடும்பத்தைச் சுமந்துகொண்டு, கண்ணின் நீருக்கு உள்ளுக்குள் தாழ்போட்டுக்கொள்ளும் நாட்களின் பாடல்தான் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கவிதைகள். ஏற்கெனவே வந்த ‘துணையிழந்தவளின் துயரம்’ சிற்சில மாற்றங்களுடன் வெளியாகியுள்ளது. சம்பாத்தியம் புருஷ லட்சணம் என்று சொன்ன முதல் மனிதனின் எலும்புக்கூடுகள்கூடக் கிடைக்கலாம் ஒட்டகங்கள் தவழும் பாலை தேசத்தில். ஆம்! பொருளீட்டும் கனவுக்காகத் தர வேண்டிய விலை சாதாரணமானது அல்ல என்பதை ஒவ்வொரு கவிதையும் சொல்கிறது.

- மானா

பிம்பச் சிறையல்ல எம்ஜிஆர்!

நான் கண்ட எம்.ஜி.ஆர்.
இரா.தங்கத்துரை
கருத்துக்களம்
வேப்பேரி, சென்னை- 7.
விலை: ரூ.175
9381020748

நடப்புப் பொருளாதாரத்தை வெகுநுட்பமாக ஆராயும் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டுவரும் ‘கருத்துக்களம்’ காலாண்டிதழின் ஆசிரியர் இரா.தங்கத்துரை, எம்ஜிஆர் நூற்றாண்டையொட்டி எழுதி வெளியிட்டிருக்கும் நூல் இது. மக்களவைத் துணை சபாநாயகரின் சிறப்பு உதவியாளராகவும், தமிழக அமைச்சர்களின் உதவியாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் இரா.தங்கத்துரை. நடிகராகவும் தலைவராகவும் புகழ்பெற்ற எம்ஜிஆரின் நிர்வாக ஆளுமையை விவரிக்கும்வகையில் அவரது ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சமூக நலத் திட்டங்களையும், பொருளாதார வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் அவர் காட்டிய அக்கறையையும் ஆதாரங்களோடு இந்நூலில் பட்டியலிட்டிருக்கிறார். அதன் வாயிலாக, ஆய்வறிஞர் எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் ‘பிம்பச் சிறை’ என்ற விமர்சனத்தையும் மறுத்திருக்கிறார். எப்போதும் தன்னை ஒரு எம்ஜிஆர் ரசிகராகவே அடையாளப்படுத்திக்கொள்ளும் இரா.தங்கத்துரை பொருளாதார மாணவராகத் தனது தலைவருக்குச் செய்திருக்கும் அஞ்சலி இந்நூல்.

- புவி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

21 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

44 mins ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்