வீடில்லா புத்தகங்கள் 9 - திரைப்படம் உருவாகிறது!

By செய்திப்பிரிவு

திரைப்படம் உருவாகிறது!

பள்ளி வயதில் ‘பேசும்படம்’ பத்திரிகையை வாங்குவதற் காக அடிக்கடி பழைய புத்தகக் கடைகளுக்குப் போவேன். ஒரு இதழ் நாலணா. அதில் சினிமா பற்றிய தகவல்கள், நடிகர் நடிகைகளின் நேர்காணல்கள், கையெழுத்துப் போட்ட புகைப்படங்கள், படப்பிடிப்புத் தளத்தில் நடந்த சம்பவங்கள், திரைக்கதை சுருக்கம் என சுவாரஸ்யமான செய்திகள் நிறைந்திருக்கும்.

சினிமா எப்படி எடுக்கிறார்கள்? படப்பிடிப்புத் தளத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய செய்திகள் எப்போதும் படிக்க ஆவலைத் தூண்டவே செய்கின்றன. பள்ளி நாட்களில் அதைத் தேடிப் படித்துப் பேசிக் கொண்டிருப்பது சுவாரஸ்யமான பொழுதுபோக்கு.

‘பென்ஹர்’ படத்தை எப்படி எடுத்தார்கள்? டைரக்டர் ஹிட்ச் காக் எப்படி சைக்கோ படத்தை உருவாக்கினார் என்பது போன்று, நூற்றுக்கணக்கான புத்தகங்கள் ஆங்கிலத்தில் உள்ளன. ஆனால், தமிழில் இதுபோன்று வெற்றிகரமான திரைப்படங்கள் எதைக் குறித்தும் புத்தகங்கள் எழுதப்படவில்லை. சில நேரங்களில் இயக்குநர் அல் லது தொழில்நுட்பக் கலைஞர்கள் பகிர்ந்து கொண்ட நினைவுகள் வழியாக தெரிவிக்கப்பட்ட செய்தி கள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன.

தமிழ் சினிமாவுக்கு என ஓர் ஆவணக் காப்பகம் இன்று வரை கிடையாது. இதனால், பல படங்களின் மூலப் பிரதிகள் அழிந்துபோய்விட்டன.

பிரெஞ்சு சினிமா இயக்குநரான லூயிமால், இந்தியாவைப் பற்றி ஆறு மணி நேரம் ஒடக் கூடிய விரிவான ஆவணப்படம் ஒன்றை இயக்கியிருக்கிறார். 1969-ம் ஆண்டு வெளியான இந்த ஆவணப்படத்தின் ஒரு பகுதியில் தமிழகக் கலைகள் மற்றும் வாழ்க்கை முறையைப் பதிவு செய்திருக்கிறார் லூயிமால்

1968-ம் ஆண்டு தமிழ் சினிமா உலகம் எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்ள லூயிமால், ‘தில்லானா மோக னாம்பாள்’ படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்று சிவாஜி, பத்மினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுவதைப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஒன்றுதான் தமிழ் சினிமா படப்பிடிப்புகுறித்து பதிவு செய்யப்பட்ட பழைய ஆவணம்.

படப்பிடிப்பில் சிவாஜி, பத்மினி இருவரும் நடிப்புக்குத் தயார் ஆகும் விதம், நடிப்பில் சிவாஜி காட்டும் ஈடுபாடு, இயக்குநரான ஏ.பி.நாகராஜன் தாளகதியுடன் கைதட்டிப் பாடி, நடிகர் வெளிப்படுத்த வேண்டிய பாவத்தைக் காட்டும் தனித்துவம் என்று லூயிமால் காலத்தின் அழியாத நினைவுகளை ஆவணப் படுத்தியிருக்கிறார். இன்று இக்காட்சியை யூ-டியூப்பில் நாம் காண முடிகிறது.

மதுரை ‘ரீகல்’ தியேட்டர் முன்பாக உள்ள பழைய புத்தகக் கடையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக அரிய நூல் ஒன்றை வாங்கினேன். அது ‘திரைப்படம் உருவாகிறது’ என்ற கலைஅன்பன் எழுதிய புத்தகம். 1973-ம் ஆண்டு வெளியாகியுள்ளது.

நடிகர் திலகம் சிவாஜிகணே சன் நடித்த ‘ராஜராஜசோழன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாளில் இருந்து படப்பிடிப்பு முடியும் நாள் வரை என்னவெல்லாம் நடந் தது என்பதைப் பற்றி ஒரு டாகுமென்டரி படத்தைப் பார்ப்பது போல நேரடியாக விவரிக்கிறது இப்புத்தகம்.

சுப.ராமன் என்ற பத்திரிகை யாளர் படப்பிடிப்புத் தளத்தில் கூடவே இருந்து, இதை ஆவணப்படுத்தியிருக்கிறார். இவர் ‘தமிழ்நாடு’ இதழில் பணியாற்றியவர்.

‘ராஜராஜசோழன்’ தமிழின் முதல் சினிமாஸ்கோப் படம். அரு. ராமநாதன் எழுதிய ‘ராஜராஜசோழன்’ நாடகத்தை டி.கே.எஸ் சகோதரர்கள் 1955-ல் திருநெல்வேலியில் அரங்கேற்றி உள்ளனர்.

அதன்பிறகு, இந்த நாடகத்தைப் படமாக்க பல முக்கிய தயாரிப்பு நிறுவனங்கள் முயற்சி செய்து, எதிர்பாராத காரணங்களால் நடைபெறாமல் போயுள்ளது.

இந்நிலையில் 1972-ம் ஆண்டு ஜி.உமாபதி அவர்கள் இதனைப் படம் எடுக்க முன் வந்துள்ளார். புராணப் படங்களை இயக்கி புகழ்பெற்றிருந்த ஏ.பி.நாகராஜன் முதன்முறையாக ஒரு சரித்திரப் படத்தை இயக்க இருக்கிறார் என்பது பரபரப்பாக அப்போது பேசப்பட்டுள்ளது. படத்தின் ஒளிப்பதிவு டபிள்யூ.ஆர். சுப்பா ராவ். ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ போன்ற புகழ் பெற்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் இவர்.

சினிமாஸ்கோப்பில் படம் எடுப்பதற்காக இவரை பம்பாய்க்கு அழைத்துப் போய், அமெரிக்க கம்பெனியில் பயிற்சி கொடுத்து அவர்களிடமிருந்த சினிமாஸ்கோப் லென்ஸ்களை வாடகைக்கு வாங்கி வந்திருக் கிறார்கள்.

சோதனை முயற்சியாக, ‘அகஸ்தியர்’ படத்தின் உச்சகட்டக் காட்சியினை 500 அடிகள் சினிமாஸ்கோப்பில் படமாக்கிப் பார்த்திருக்கிறார்கள். அது சிறப்பாக அமையவே, ‘ராஜராஜசோழன்’ முழுப் படமும் சினிமாஸ்கோப்பில் எடுக்க முடிவு செய்தார்களாம். இப்படத்துக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைக்க, கலை இயக்குநராக கங்கா வும், எடிட்டிங் வேலையை டி.விஜயரங்கமும் கவனித்துள் ளனர்.

1972 பிப்ரவரி 2-ம் நாள் வாசு ஸ்டுடியோவில் ‘ராஜராஜ சோழன்’ படப்பிடிப்பு ஆரம்பம். ஐந்து ஏக்கர் நிலத்தில் பிரம் மாண்டமான முறையில் தஞ்சை பெரிய கோயிலை செட் போட்டுள்ளார்கள். 25 அடியில் ஒரு நந்தியை உருவாக்கியுள்ளனர். படப்பிடிப்புத் தளத்தில் தான் நடிக்கிறோம் என்ப தையே மறந்துவிட்டு, ராஜராஜசோழனாகவே வாழ்ந்துள்ளார் நடிகர் திலகம்.

ஒருநாள் படப்பிடிப்பைக் காண்பதற்காக பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சீவ்குமார் வந்திருக்கிறார். அவர் நடிகர் திலகத்தின் நடிப்பைக் கண்டு வியந்து பாராட்டியதோடு, கோயில் போல அமைக்கபட்ட செட் அமைப்புகளைக் கண்டு பிரமித்துப் போனாராம்.

படப்பிடிப்பின்போது ஒருநாள் கடும் மழையால் படத்துக்காக போடப்பட்ட செட் சரிந்து விழுந்துள்ளது. மேட்டி தொழில்நுட்பத்துக்காக கேமரா முன்பு வைக்கப்பட்டிருந்த கண்ணாடி உடைந்து போனதாம்.

அன்றைக்கு படப்பிடிப்பு நின்று போனதுடன், 2 லட்ச ரூபாய் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. ஆனால், இதற்கெல்லாம் அந்தப் படத்தின் ஜி.உமாபதி கலங்கவில்லை. படத்தைத் திட்டமிட்டபடியே இன்னும் சிறப்பாக எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். மீண்டும் அதே போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்புத் தொடர்ந்துள்ளது.

இப்படி ‘ராஜராஜசோழன்’ படப்பிடிப்பில் நடைபெற்ற பல சுவாரஸ்யமான விஷயங்களுடன், அன்றைய தமிழ் சினிமாவின் நிலை, ஹாலிவுட் சினிமா எப்படி இயங்குகிறது என்றெல்லாம் இந்தப் புத்தகத்தில் நுட்ப மாக எழுதியிருக்கிறார் கலை அன்பன். இந்நூலில் அரிய புகைப்படங்களும் திரைக்கதையின் மாதிரி பக்கமும் இடம்பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாகும்.

தமிழ் சினிமாகுறித்து இன்று அமெரிக்கப் பல்கலைக்கழகங் களில் தொடர்ச்சியாக ஆய்வுகள் நடைபெறு கின்றன. அங்கிருந்து வரும் ஆய்வாளர்கள் ஆதங்கத்துடன் கேட்கும் கேள்வி என்னவெனில்... ‘தமிழ் சினிமாவின் அரிய திரைப்படங்கள் ஏன் முறையாக பாதுகாத்து வைக்கப்படவில்லை?’ ‘ஆண்டுக்கு பல நூறு கோடி ரூபாய் செலவு செய்யும் தமிழ் சினிமா உலகம்… பழைய புகைப்படங்கள், இசைத் தட்டுகள், நடிகர் - நடிகையர், இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்களைப் பற்றிய விவரங் கள், விளம்பரங்கள், சினிமா பத்திரிகைகள், பிரிண்ட்... என நீளும் ஆவணப்படுத்துதலில் ஏன் அக்கறை காட்ட மறுக்கிறது?’ என்பதே.

டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இன்றைய நாளில் எதையும் ‘ஆவணப்படுத்துதல்’ என்பது சாத்தியமானதே. அதற்குத் தேவை கூட்டு உழைப்பும் பொருளாதார உதவியுமே. அரசும், திரை உலகமும் இணைந்து இதில் கவனம் செலுத்தினால் மட்டுமே இது சாத்தியமாகும்.

சினிமாவை ஆவணப்படுத்துவதன் மூலமாக மட்டுமே அதை கல்விபுலங்களுக்குக் கொண்டுச் செல்ல முடியும். இல்லாவிட்டால் இதுவெறும் பொழுதுபோக்காக காலவெள்ளத்தில் கரைந்து போய்விடும்.


- இன்னும் வாசிப்போம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள:writerramki@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

விளையாட்டு

33 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்