புத்தகக் காட்சித் துளிகள்...

By செய்திப்பிரிவு

இறையன்பு முதல்

வைரமுத்து வரை!

 

ஈரோடு புத்தகத் திருவிழாவில் நாள்தோறும் மாலை 6 மணிக்கு நடக்கும் சிந்தனை அரங்கில், புகழ்பெற்ற ஆளுமைகள் பங்கேற்றுப் பேசுகின்றனர். ஆகஸ்ட் 13-ம் தேதிஅன்று உயர் நீதிமன்ற நீதியரசர் கள் பிரபா ஸ்ரீதேவன், ஆர்.மகாதேவன், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முறையே, ‘சிந்தித்த வேளையில்’, ‘மண்ணும் மொழியும்’, ‘நீர்’ என்ற தலைப்புகளில் பேசவுள்ளனர். அதேபோல், ஐஏஎஸ் அதிகாரிகள் வெ.இறையன்பு, கோ.பாலச்சந்தர், ஆர்.பாலகிருஷ்ணன், ஐபிஎஸ் அதிகாரிகள் அ.கலியமூர்த்தி, அ.பாரி ஆகியோரும் சிந்தனை அரங்க அமர்வில் பங்கேற்கின்றனர். கவிஞர் வைரமுத்து, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சுப.வீரபாண்டியன், பேராசிரியர் காமராசு, பி.ஹெச்.அப்துல்ஹமீது என சிந்தனை அரங்கைப் பலரும் அலங்கரிக்கவிருக்கிறார்கள். சிந்தனை அரங்கத் தொடக்க விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைக்க, பள்ளிக்கல்வித் துறையின் செயலாளர் த.உதயசந்திரன் மற்றும் நீதிபதி சொக்கலிங்கம் ஆகியோர் புத்தகத் திருவிழாவை நிறைவுசெய்து வைக்கிறார்கள்.

ஈரோடு புத்தகத் திருவிழாவில் ‘தி இந்து’

ஈரோடு புத்தகத் திருவிழாவில் அரங்கு எண்: 112-ஐ அலங்கரிக்கிறது ‘தி இந்து’ மற்றும் ‘தமிழ் திசை’ பதிப்பகத்தின் அரங்கு. ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழ் நாளிதழ்கள் மற்றும் யங் வேர்ல்டு, ஸ்போர்ட்ஸ் ஸ்டார், ஃபிரண்ட் லைன் ஆகிய இதழ்களின் சந்தா சேர்ப்பும் நடப்பதால், கணிசமான வாசகர்கள் குவிகிறார்கள். ‘மகா அமிர்தம்’, ‘எம்ஜிஆர் 100’, ‘உன்னால் முடியும்’, ‘ஜிஎஸ்டி: ஒரு வணிகனின் பார்வையில்’, ‘பரிசோதனை ரகசியங்கள்’, ‘என்னைச் செதுக்கிய மாணவர்கள்’, ‘கடல்’, ‘ஸ்ரீராமானுஜர் 1000’ உள்ளிட்ட ‘தி இந்து’வின் 60-க்கும் மேற்பட்ட வெளியீடுகளை வாசகர்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

மாநிலம் முழுவதும் வாசகர் வட்டம்

புத்தக வாசிப்பாளர்களை ஒருங்கிணைக் கும் வகையில் தமிழகம் முழுவதும் வாசகர் வட்டம் அமைப்பது மக்கள் சிந்தனைப் பேரவையின் திட்டம். முதல்கட்டமாக 100 இடங்களில் வாசகர் வட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் குறைந்தபட்சம் 20 பேர், அதிகபட்சம் 50 பேர் வரை வாசகர் வட்டத்தில் இணையலாம். ஏதாவது ஒரு நூலகத்தில் உறுப்பினராக இருப்பதும், அவரது வீட்டில் மிகச் சிறிய அளவிலாவது நூலகத்தைத் தொடங்கியிருப்பதும் அவசியம். மாதம் ஒரு முறை வாசகர் வட்டத்தைக் கூட்டி, உறுப்பினர்கள் தாங்கள் படித்த நல்ல புத்தகம் குறித்து பேச வேண்டும். இந்த கூட்டத்தில் படைப்பாளி ஒருவரை அழைத்து, கருத்துரை வழங்கவும் ஏற்பாடு செய்யலாம் என்பது உள்ளிட்ட விதிமுறைகளுடன் தொடங்கப்படும் வாசகர் வட்டங்கள் நிச்சயம் தமிழகத்தின் வாசிப்பைச் செழுமைப்படுத்த உதவும்.

குழந்தைகளுக்கு நேரம் கொடுங்கள்!

ஈரோடு புத்தகத் திருவிழாவுக்குத் தொடக்கப் பள்ளியில் தொடங்கி கல்லூரி மாணவ, மாணவியர் வரை பள்ளி வாகனங்களில் நாள்தோறும் அழைத்து வரப்படுகின்றனர். அவர்களை அழைத்து வரும் பொறுப்பாளர்கள் (ஆசிரியர்கள்) புத்தகத் திருவிழா அரங்குகளில் ஊர்வலம்போல் மாணவர்களை வரிசையாக அழைத்துச் சென்று, உடனடியாக வெளியே அழைத்து வந்துவிடுகின்றனர். இந்தக் கட்டுப்பாடுகளால் வீட்டில் அடம்பிடித்துப் பணம் வாங்கி வந்தும், எந்த புத்தகத்தையும் வாங்காமல் குழந்தைகள் திரும்பிச் செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே, குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான நூல்கள் அடங்கிய சிறப்பு அரங்கு வரிசை ஒன்று அமைத்தால், அவர்கள் புத்தகங்களை வாங்க வசதியாக இருக்கும். கல்வி நிறுவனங்களும் குழந்தைகளுக்கான கட்டுப்பாடுகளைக் கொஞ்சம் தளர்த்தி, விரும்பிய அரங்கில் சில நிமிடங்களை செலவிட அனுமதிக்கலாம்.

 

தமிழகம் வாசிக்கிறது

ஈரோடு புத்தகத் திருவிழாவின் ஒரு அங்கமாக, ‘தமிழகம் வாசிக்கிறது’ என்ற முழக்கத்தை முன்வைத்து, புத்தக வாசிப்பு விழிப்புணர்வுப் பேரணி ஈரோட்டில் நடந்தது. திருவிழாவின் தொடக்க நாளில் நடந்த இந்த உற்சாகப் பேரணியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர். புத்தகத் திருவிழா நடைபெறும் செய்தியையும், வாசிப்பு வேட்கையையும் நகர் முழுக்க அந்த மாணவர்கள் பரப்பினார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

37 mins ago

வணிகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

கல்வி

43 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்