காமிக்ஸ் இலக்கிய வளர்ச்சிக்குக் கரம் கொடுப்போம்!

By செய்திப்பிரிவு

டைப்பிலக்கிய வகைகளில் காமிக்ஸ் எனப்படும் ‘சித்திரக் கதைக’ளுக்கு உலக அளவில் முக்கிய இடம் உண்டு. இளம் பிராயத்து நினைவுகளின் முக்கிய அம்சமாக இருக்கும் காமிக்ஸ்கள் தமிழில் இன்றும் வெளியாகிக்கொண்டுதானிருக்கின்றன. ஆனால், தமிழ்ச் சூழலில் வாசிப்பு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்திருக்கும் நிலையிலும், இன்றைக்கு காமிக்ஸ்களுக்கான வரவேற்பு பெரிய அளவில் அதிகரித்துவிடவில்லை.

மேற்கத்திய நாடுகளில் காமிக்ஸ் புத்தகங்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கிறது. ஜப்பானில் ‘மாங்கா’ காமிக்ஸ் கதைகள் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி இன்றுவரை வாசகர்களின் மனதை ஈர்த்துவருகின்றன. வளமான இதிகாசப் பின்னணி கொண்ட இந்தியாவில் அமர்சித்திரக் கதைகள் உள்ளிட்ட காமிக்ஸ்கள் நல்ல வரவேற்பைப் பெற்றவை.

தமிழில் நேரடியான காமிக்ஸ்கள் குறைவு. காமிக்ஸ் உருவாக்கம் என்பது கடும் உழைப்பும் கால அளவும் தேவைப்படும் விஷயம் என்பதாலும், அதன் மூலம் பெரிய வருமானத்துக்கு உத்தரவாதம் இல்லை என்பதாலும் வெளிநாடுகளில் இருப்பதைப் போல், இங்கு நேரடி காமிக்ஸ் படைப்புகள் வளர்ச்சியடையவில்லை. அதேசமயம், மொழிமாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க, ஐரோப்பிய காமிக்ஸ் கதைகள் ஒரு தலைமுறையின் கற்பனை வளத்துக்கு பெரும் பங்காற்றியிருக்கின்றன.

மின்சாரத்தைத் தொட்டவுடன் உருவம் மறைந்துவிடும் ‘இரும்புக் கை மாயாவி’ தொடங்கி ஆர்ச்சி, ஜானி நீரோ, மாயாவி, ஜேம்ஸ் பாண்ட் தொடங்கி, அமெரிக்காவின் வன்மேற்குப் பிரதேசத்தின் டெக்ஸ் வில்லர் வரை எண்ணற்ற கதாபாத்திரங்கள் தமிழ் வாசகப் பரப்புக்கு அறிமுகமானவர்கள். காமிக்ஸ்கள் பொதுவாகவே இயல்புக்கு மீறிய கற்பனையம்சம் கொண்டவைதான் என்றாலும், பல காமிக்ஸ்கள் இரண்டாம் உலகப் போர் தொடங்கி, சோவியத் ஒன்றியம் சிதறியது வரை பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்டவை. இளம் வயது வாசகர்களுக்குப் பல்வேறு நாடுகள் குறித்த அடிப்படையான தகவல்களை வழங்குவதிலும் காமிக்ஸ்களுக்குக் குறிப்பிட்ட அளவு பங்கு உண்டு.

அச்சுத் தொழிலில் நவீனத் தொழில்நுட்பங்கள் வந்துவிட்ட நிலையில், முன்பை விட அதிகத் தரத்துடன் தமிழில் மொழிபெயர்ப்பு காமிக்ஸ்களும், நேரடி காமிக்ஸ்களும் வெளியானாலும் வாசகர்கள் பெரிய அளவில் ஆர்வம் செலுத்துவதில்லை. புத்தகக் காட்சிகளில் கூட, பால்ய நினைவுகளின் தொடர்ச்சியாக, காமிக்ஸ் புத்தகங்களைப் பார்க்க வருபவர்கள் அதிகரித்திருக்கிறார்களே தவிர விற்பனை உயர்ந்துவிடவில்லை.

பல சிறப்பம்சங்களைக் கொண்ட காமிக்ஸ் இலக்கியம் வளர்ச்சியடைய ஊக்கம் தரும் நடவடிக்கைகளை அரசால் எடுக்க முடியும். நூலகங்களில் காமிக்ஸ் புத்தகங்களுக்குக் குறிப்பிடத்தக்க இடம் ஒதுக்கலாம். சித்திரங்களை அடிப்படையாகக் கொண்ட பாடங்கள் குழந்தைப் பருவத்துக்கு ஏற்றவை என்பதால் ஆரம்பப் பள்ளிப் பாடங்களில் சித்திரக் கதைகளுக்கு முக்கியத்துவம் தரலாம். பள்ளிக்கல்வித் துறையும் கல்வியாளர்களும் பதிப்பாளர்களும் இது குறித்து பரிசீலிக்க வேண்டும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

52 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்