கடவுளின் நாக்கு 8: தேசங்களின் தலைவிதி

By திருவனந்தபுரம் எஸ்.ராமகிருஷ்ணன்

கெய்ரோவில் சொல்லப்பட்டு வரும் கதை இது. ஹசன் என்றொரு பேராசைக்கார வணிகன் இருந் தான். அவன் தங்கத்தை எங்கே பார்த் தாலும் அதை தன்னுடையதாக்கிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படு வான். சில சமயங்களில் தங்கத்துக்காகத் திருட்டு வேலைகள் செய்வதும் உண்டு. அப்படி தேடிச் சேர்த்த தங்கத்தை, யாரும் திருடிப் போய்விடக்கூடாது என பூமிக்கு அடியில் புதைத்து வைத்திருந்தான். அவனிடம் 100 பானைகள் நிறைய தங்கம் இருந்தன. ஆனாலும், ஆசை அவனை விடவில்லை.

ஒரு நாள் சந்தைக்குப் போனபோது, பட்டுத் துணி விற்பவன் மேஜையில் ஒரு தங்க நாணயம் இருப்பதைக் கண்டான் ஹசன். யாராவது தன்னை கவனிக்கிறார்களா எனச் சுற்றிலும் பார்த்துவிட்டு, ரகசியமாக தங்க நாண யத்தை எடுத்து பையில் போட்டுக் கொண்டு வேகமாக வெளியேறி நடக்க ஆரம்பித்தான்.

சந்தையைத் தாண்டுவதற்குள் அவனை காவலர்கள் பிடித்துவிட்டார் கள். ‘‘இத்தனை பேர் கடையில் இருக்கும்போது தங்க நாணயத்தைத் திருடுகிறாயே, என்ன தைரியம்!’’ என்று காவலர் அடித்து உதைத்தபோது ஹசன் சொன்னான்:

‘‘எனக்கு தங்கத்தைத் தவிர வேறு எதுவும் கண்ணுக்குத் தெரியவே இல்லை. சுற்றிலும் திரும்பிப் பார்த்தேன். ஓர் ஆள் கூட என் கண்ணில்படவில்லை. யாருக்கும் தெரியாது என்றுதான் எடுத்தேன்!’’

ஹசனை சிறையில் அடைத்து வைத்தார்கள். தண்டனை முடிந்து வெளியே வந்தவுடன் தான் தங் கத்தை புதைத்து வைத்த இடத் துக்கு ஓடினான். அந்த இடத்தில் இப்போது பெரிய நந்தவனம் உருவாகியிருந்தது. தனது தங்கம் எங்கே போனது என்று தெரியாமல் மண்ணைத் தோண்டி, எதுவும் கிடைக் காமல் அழுது புலம்பி னான். முடிவில் பைத்தியக் காரனாகி தரையில் கிடக்கும் கற்களை எல்லாம் ‘தங்கம் தங்கம்’ என்று சேர்த்துக்கொள்ளத் தொடங்கினான்.

‘பல ஆண்டுகளுக்குப் பிறகு அவன் இறந்தபோது அவனை சுற்றிலும் ஆயிரக்கணக்கான கற்கள் குவிந்து கிடந்தன. பாவம் ஹசன், வாழ்க்கையின் அர்த்தத்தை உணரவே இல்லை!’ என்று அந்தக் கதை முடிகிறது.

தங்கம் பற்றிய கதையில்லாத சமூகமே இல்லை. மனிதனுக்கு ஆறாயிரம் வருஷங்களாக தங்கத்தை பற்றித் தெரியும். 2,500 ஆண்டுகளுக்கு முன்பே தங்க நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன. தங்கத்தை வழிபாட்டுப் பொருளாக கருதி வணங்கி வந்தான் மனிதன். தங்கம் மந்திர சக்தி கொண்ட உலோகம் என்று அக்கால மனிதர்கள் நம்பினார்கள்.

பண்டைய காலத்தில் சீனர்கள் தங்கத்தை தீவினையின் அடையாள மாகக் கருதினார்கள். ஆகவே, சீனா வைத் தவிர வேறு எல்லா நாடுகளிலும் தங்கம் ஏதோவொரு விதத்தில் கடவுளாகக் கருதப்பட்டிருக்கிறது.

தங்கத்தை சூரியனோடு ஒப்பிடும் தொடர்பு மிகவும் பழமையானது. பைபிளின் பழைய ஏற்பாட்டில் தங்கம் என்ற சொல் 415 முறை பயன்படுத் தப்பட்டுள்ளது. இது, அக்காலகட்டத்தில் தங்கம் வகித்த சமூகப் பொருளாதார முக்கியத்துவத்தையே அடையாளப் படுத்துகிறது.

‘உலகத்தின் உண்மையான அரசன் தங்கமே’ என்றொரு புத்தகம் உள்ளது. பிராங்க்ளின் ஹாப்ஸ் எழுதியது. இதில் ‘தேசங்களின் தலைவிதியை அதன் சேமிப்பில் உள்ள தங்கமே முடிவு செய்கிறது. உடலுக்கு ரத்தத்தைப் போல வர்த்தகத்துக்கு தங்கமே ஆதாரம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது அப்புத்தகத்தில்.

தங்கம் சாதாரண உலோகம் இல்லை. மக்களுக்கு இடையே உள்ள சொத்து உறவுகளி லும், சந்தை பரிவர்த்தனை களிலும் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தனிநபர் மற்றும் சமூகக் குழுக்களின் மூலதனமாகக் கருதப்படு வதுடன், அரசின் நிதிவளத் தையும் திட்டமிடுதலையும் தங்கமே தீர்மானிக்கிறது.

காகிதப் பணத்தைக் கண்டுபிடித்த ஜான் லோ என்ற ஸ்காட்லாந்துகாரர், செலாவணியில் தங்கத்துக்குப் பதிலாக காகிதப் பணத்தை உபயோகிப்பதன் மூலம், ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்பெறுவார்கள் என்று கருதினார். ஆனால், காலமாற்றத்தில் தங்கத்தை விட பணம் அதிக பிரச்சினைகளை உருவாக்கியது. பணவீக்கம் ஏற்பட்டு பெரும்நெருக்கடிகள் உருவாகி அரசு களே கவிழ்ந்தன.

தங்கத்தை அடைவதற்காகவே உலகில் அதிக குற்றங்கள் நடந் துள்ளன. கடலிலும், நிலத்திலும் எக் காலத்திலும் கண்டுபிடிக்கப்பட முடி யாத புதையலாக எவ்வளவு தங்கம் அழிந்துபோனது என்று யாருக்கும் தெரியாது. போர்ச்சுகீசியர்களின் தங்கப் பசியே அமெரிக்காவைக் கண்டுபிடிக்க முக்கிய காரணமாக இருந்தது. தங்கத்தின் மீதான கவர்ச்சியும், சந்தை மதிப்பில் தங்கம் கொண்டிருக்கும் இடமும் காலந்தோறும் உயர்ந்து கொண்டேயிருக்கிறது

இக்கதை தங்கத்தின் மீதான ஆசையை மட்டும் சொல்லவில்லை. மாறாக எந்த ஒன்றின் மீது பேராசை கொள்கிறோமோ, அப்போது அது மட்டுமே கண்ணுக்குத் தெரியும். சுற்றி யுள்ள யாவும் மறைந்து போய்விடும் என்று கூறுகிறது. இது அனுபவபூர்வமான உண்மை!

தங்கத்தை ஆசை ஆசையாக சேர்த்து வைப்பவர்கள் அதை அனுபவிப்பதில்லை. எப்படி பாதுகாத்து வைப்பது எனத் தெரியாமல் தடுமாறு கிறார்கள். பலநேரம் ஒளித்தும் மறைத் தும் வைத்த தங்கம் யாராலோ கண் டெடுக்கப்பட்டு, யாருக்கோ பயன் படுகிறது. தங்கத்தின் மீதான பேராசை ஹசனை மட்டுமில்லை; நம் காலத்தில் சகலரையும் பைத்தியமாக்குகிறது.

தங்கத்திலான சட்டை அணிந்து வந்த புனே வணிகர் ஒருவர் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஊடகங்களில் முக்கிய செய்தியாக இடம்பெற்றது. அந்த வணிகர் அணிந் திருந்த தங்கச் சட்டை பலரையும் பொறாமை கொள்ளச் செய்தது என் பதே உண்மை.

‘மெக்கனாஸ் கோல்டு’ படத்தின் முடிவில் தங்கம் தேடிப் போகிறவர் களில் ஒரு பெண் தங்க ஆற்றில் குளிப்பாள். அவளது உடையில் தங்கம் ஒட்டிக் கொள்ளும். மலைமுழுவதும் தங்கப் பாளமாக ஒளிரும். வெட்டி எடுத்து பை பையாக நிரப்புவார்கள். அப்படம் உலகெங்கும் வெற்றி கரமாக ஓடியதற்குக் காரணம், அப்படியொரு தங்க மலையை அதன் முன்பு திரையில் கண்டதே இல்லை என்பதே.

மத்திய தர மக்களின் தீராக் கனவு தங்கம் சேர்ப்பது மட்டுமே. பிள்ளை களுக்கு தங்கத்தின் பெயரை வைக்குமளவு நாம் தங்கத்தைக் கொண்டாடி வருகிறோம். தங்கம் வாங்கச் சொல்லி தொலைக்காட்சி விளம்பரங்கள் நம்மை துரத்துகின்றன. நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே போகிறது.

சென்னை போன்ற பெருநகரங்களில் தங்கத்துக்காக தொடர்ந்து நடைபெறும் வழிப்பறிகள், கொள்ளைகள் மற்றும் கொலைகளைக் காணும்போது அச்சமாகயிருக்கிறது. ஓர் உலோகம் மனிதர்களின் வாழ்க்கையை இவ்வளவு ஆட்டுவிக்கிறதே எனப் புதிராகவும் இருக்கிறது.

தங்கம் என்பது மனித விதியை மாற்றி விடும் பிசாசு என்கிறார் பால்சாக். வாழ்க்கையில் போதுமான அளவு தங்கத்தை அடைய முடியாதவர்கள் கதைகளின் வழியே தங்கக் கோட்டை களைக் கட்டி, தங்கக் கட்டிலில் அமர்ந்து கொண்டு, தங்கத் தட்டில் சாப்பிட்டு, தங்க விசிறிகளைக் கொண்டு வீசி கொள்வதாக கற்பனை செய்கிறார்கள். நம் இயலாமையும் ஏக் கமும்தான் கதைகளின் வழியாக தீர்த்துக் கொள்ளப்படுகின்றன.

மனிதனை ஆற்றுப்படுத்துவதுதான் கலை இலக்கியத்தின் வேலை. அதனை கதைகள் செய்கின்றன என்ப தால்தான் அதை நாம் கொண்டாட வேண்டியிருக்கிறது

இணையவாசல்: >எகிப்திய கதைகளை அறிந்துகொள்ள

- கதை பேசும்… | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்