சோளகர் தொட்டி’க்கு நன்றி கூறிய சோளகர் தொட்டி!

By நா.மணி

ஒரு கதையின் மாந்தர்கள், இன்று அவர்கள் உயிரோடு உலவக் காரணமானவர்கள், அந்த வரலாற்று நிகழ்வை நாவலாக்கி நாடறியச் செய்தவர் என்று முத்தரப்பினரும் கதைக் களத்திலேயே சங்கமித்தால் எப்படியிருக்கும்? அப்படியான ஒரு சந்திப்பு, தமிழ் இலக்கிய உலகில் நடந்துள்ளதா என்பதும் கூட ஆய்வுக்குரியது. இத்தகைய சந்திப்பு, கடந்த 26.05.2017 அன்று ஈரோடு மாவட்டம், தாளவாடி ஒன்றியத்தில் உள்ள சோளகர் தொட்டியில் நிகழ்ந்தது. ஒருபுறம் சந்தனக் கடத்தல் வீரப்பன், மறுபுறம் தமிழக-கர்நாடக அதிரடிப்படை போலீஸார். இவ்விரு முனைத் தாக்குதலில் சிக்கிச் சின்னாபின்னமாயினர் சோளகர் என்னும் பழங்குடி மக்கள். பல சோளகர் பழங்குடி கிராமங்கள் பாதிப்புக்குள்ளானாலும் அதிகபட்ச சேதம் சோளகர் தொட்டிக்குதான்.

சமவெளிப் பகுதியிலிருந்து மலைப் பகுதியில் ஊடுருவியவர்கள் அரசின் உதவியோடு பழங்குடிகளின் நிலத்தை அபகரித்தனர். வீரப்பனும் வீரப்பனைப் பிடிக்கச் சென்ற இரு மாநில அதிரடிப்படைகளும் பழங்குடிகள் காட்டுக்குள் தொடர்ந்து வாழ்வதையே கேள்விக்குள்ளாக்கினார்கள். வனத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் அவர்களின் வனத்துக்குள் செல்லவே தடை விதிக்கப்பட்டனர். சந்தன மரத்தின் கிளையைக்கூட ஒடித்துப் பழக்கப்படாத பழங்குடிகள் மீது சந்தனக் கடத்தல் குற்றச்சாட்டு வழக்குகள். ‘வீரப்பனைத் தேடுதல்’ என்ற பெயரால் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளில் ஒரு பகுதியை எடுத்துரைப்பது ச. பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ நாவல். நிலப்பிரபுத்துவ சமூகத்துக்கு முந்தைய புராதனப் பொதுவுடமைச் சமூகம் கற்பனையானது என விமர்சிப்பவர்கள் உண்டு ஆனால், ‘சோளகர் தொட்டி’ நாவலைப் படிக்கும் எவராலும் அந்த விமர்சனம் உண்மையல்ல என்பதை உணர முடியும். தங்கள் நிலத்தில் விளைவிப்பது ஒரு போகம் ராகிப் பயிர் மட்டுமே. அதனை விதைக்கும்போது, “காத்தவர் தின்னது போக, கண்டவர் தின்னது போக, கள்வர் தின்னது போக விளைய வேணும் சாமி” எனக் கும்பிட்டு விதைக்கும் பரந்த மனம் கொண்டவர்கள். வனத்தில் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதையே பெரிய சொத்தாகக் கொண்டவர்கள். சமவெளிப் பகுதி மக்கள் இவர்களிடம் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது. இந்த உயர் பண்பாட்டுக் கூறுகள் நாவலின் முதல் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றன. இப்பெருவாழ்வு வாழ்ந்த மக்கள் என்ன கதிக்கு ஆளானார்கள் என்பது நாவலின் இரண்டாம் பகுதி.

கதை மாந்தர்களைக் காத்த பழங்குடி மக்கள் சங்கத்தைச் சேர்ந்த வி.பி.குணசேகரன், மோகன் குமார், வழக்கறிஞர் பா.ப. கோகன், நாவலாசிரியர் ச. பாலமுருகன் ஆகியோரை சோளகர்கள் காட்டுப் பூ மாலையிட்டு வரவேற்றுத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். பழங்குடியினர்கள், பழங்குடி மக்கள் சங்கத்தினர், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் என சுமார் 100 பேர் ஈரோடு, கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி மாவட்டங்களிலிருந்து வந்திருந்தனர். பழங்குடிகள் மீதான மனித உரிமை மீறலைத் தொடக்க காலம் முதலே பத்திரிகைகளில் எழுதிவரும் நக்கீரன் இதழின் மூத்த பத்திரிகையாளர் ஜீவா தங்கவேல், சிவசுப்ரமணியம் உட்பட்டோரும் இதில் அடக்கம். இவர்களும்கூட காவல் துறையினரின் பொய் வழக்குகளிலிருந்து தப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காவல் துறையினரின் கொடிய உயிர் வதைக்கு அஞ்சி, வீரப்பனின் கைகளில் வீழ்ந்தவர்தான் சித்தன். வீரப்பனிடமிருந்து மீளவும், காவல் துறையினரின் கொடுங் கோன்மையிலிருந்தும், என்கவுண்டரிலிருந்தும் தப்பிக்க நீதிமன்றத்தில் சரணடைந்தார். இருபதாண்டு சிறை வாழ்க்கை முடித்துக் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியே வந்துள்ளார், சித்தன். ‘சோளகர் தொட்டி’ நாவலின் நாயகன் சிவண்ணா இவரே. காவல் துறையிடமிருந்தும் வீரப்பனிடமிருந்தும் தப்பி, தன் கணவர் பழைய சோளகனாகத் திரும்பி வருவான் என்ற சிவண்ணாவின் மனைவியின் நம்பிக்கையோடு நாவல் நிறைவுறுகிறது. அதே போல், சித்தன் திரும்பி வந்துள்ள நிலையில், இந்த சங்கமம் நிகழ்ந்தது விழாவில் பங்கேற்றவர்களை நெகிழ்ச்சியுறச் செய்தது.

தாய் முன், தந்தை முன், மகள் முன் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகிச் செத்துப் பிழைத்த பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், இன்னும் வார்த்தைகளில் விவரிக்க இயலாத கொடுமைகளைச் சுமந்தவர்களே ‘சோளகர் தொட்டி’யின் கதை மாந்தர்கள். இறந்தவர்கள் போக, மீதம் இருப்பவர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மறந்து விழாவின் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர். எழுதப் படிக்கத் தெரியாத சோளகர் பெண் ஒருவர் ‘சோளகர் தொட்டி’ நாவலைக் கையில் எடுத்துக்கொண்டு வனம் முழுவதும் மகிழ்ச்சியில் சுற்றித் திரிந்து வீடு திரும்பினார்.

சத்தியமங்கலம், அந்தியூர் வனச்சரகங்களில் 115 பழங்குடிக் குடியிருப்புகள் உள்ளன. இதில் எத்தனை பேருக்கு ‘சோளகர் தொட்டி’ நாவலையும், அன்று நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல் பயங்கரங்கள் பற்றியும் தெரியும்? சோளகர் தொட்டி கிராமத்தில் பத்துப் பேர் கல்லூரியில் காலெடுத்து வைத்துள்ளனர். இவர்களில் எத்தனை பேருக்கு இதுபற்றித் தெரியும்? இதனைப் போக்கிட என்ன செய்யலாம் என்ற சிந்தனைகளின் விளைவுதான் இந்த சங்கமம். சிறப்புப் பங்கேற்பாளர்களின் கருத்துரைக்குப் பின்னரே, சிவண்ணாவின் தம்பி என்ற ஒரே காரணத்துக்காக ஏழாண்டுகள் சிறையில் இருந்த மாதேவன் (நாவலில் ஜடையன்) மகள், பாதி நாவலைப் படித்துப் பதைபதைப்புடன் பேசினார். ஜடையன் சிறை செல்லும்போது இவர் இரண்டு மாதக் குழந்தை. “எங்கள் வாழ்வு இவ்வளவு அவலம் நிறைந்தது என்று எனக்கே இதுவரை தெரியாது” என்றார். “சோளகராகப் பிறந்தது எங்கள் தவறா?” என்றார் ஆதங்கத்தோடு. “இது போன்ற எழுத்துகளைப் படித்தும் பேசியும் பழக்கம் இல்லை. ஆனால், படிப்பறிவு உள்ளவர் அனைவரும் நாவலை முழுமையாகப் படிப்போம். பின்னர் நிச்சயமாகப் பேசுவோம்” என்றார். ஒரு புத்தகத்தால் என்ன செய்துவிட முடியும் என்று கேட்பவர்களுக்கு இந்த நிகழ்வை இனி உதாரணம் காட்டலாம்.

- நா. மணி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர், பொருளியல் துறைத் தலைவர், ஈரோடு கலைக் கல்லூரி. தொடர்புக்கு: tnsfnmani@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்