வரலாற்றின் மீது சில ஒளிக்கீற்றுகள்

தமிழக வரலாற்றில் கி.பி. 300-லிருந்து 600 வரையுள்ள காலகட்டத்தைக் குறித்த போதிய தரவுகள் கிடைக்காததால் தொடக்க கால வரலாற்று அறிஞர்கள் இந்தக் காலத்தை ‘இருண்ட காலம்’ என்று குறிப்பிட்டனர். விடுதலைக்குப் பிந்தைய வரலாற்று ஆய்வுகள் களப்பிரர் ஆட்சிக் காலத்தின் மீது புதிய ஒளியைப் பாய்ச்சின. பல வரலாற்று அறிஞர்கள் சங்க இலக்கியங்களையும் பிற தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு களப்பிரர் ஆட்சி குறித்த வெற்றிடத்தை நிரப்ப முயன்றார்கள்.

அந்த வகையில் இரா. கலைக்கோவனின் இந்த நூல் சங்க காலத்தின் இலக்கியங்களின் வழியாகப் பெறப்பட்ட ஆடற்கலை-இசைக்கலை குறித்த தரவுகளையும், பக்தி இலக்கியங்கள் கோயில்களில் உள்ள சிற்பங்கள் ஆகியனவற்றின் வழியாகப் பெறப்பட்ட செய்திகளையும் கொண்டு களப்பிரர் காலம் என்பது இருண்ட காலம் அல்ல என்பதை நிறுவுகிறது; மேலும், பிற்காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட பல்துறை வளர்ச்சிக்கு வித்திட்டு சங்க கால வாழ்க்கை முறையிலிருந்து மாறி வந்த காலம்தான் களப்பிரர் காலம் என்பதையும் சான்றுகளின் அடிப்படையில் இந்த நூல் நிறுவுகிறது. இத்துடன், வளமான தமிழ்ச் சமூகத்தின் கலை மரபுகளையும் இந்த நூல் அழகாக எடுத்துக் கூறுகிறது.

‘இருண்ட காலமா? என்ற கேள்வியையே தலைப்பாகக் கொண்ட முதல் கட்டுரை, களப்பிரர் காலம் ஏன் இருண்ட காலம் என எழுதப்பட்டது என்பதற்கான காரணத்தை விளக்குகிறது. பல்துறைத் தரவுகளை ஒருங்கிணைக்கும் பகுப்பாய்வு இல்லாத குறைபாடே வரலாற்று வரைவியலில் இத்தகைய இருண்ட காலங்கள் இடம்பெறுவதற்கு முக்கியக் காரணமாகிறது. களப்பிரர்கள் தமிழகம் முழுவதையும் கைப்பற்றி ஆளவில்லை. அவர்கள் பல இடங்களில் ஆண்டிருக்கிறார்கள். இவர்களது காலத்தில்தான் பல்லவர்களும் காஞ்சியைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டிருக்கிறார்கள். இரண்டு முறை களப்பிரரிடம் காஞ்சியை இழந்துமிருக்கிறார்கள். சமுத்திர குப்தர் தலைமையில் தென்னகத்தின் மீது படையெடுத்த குப்தர்கள் கி.பி. 350-ல் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விஷ்ணுகோபரைத் தோற்கடித்தனர். இதனை அலகாபாத் தூணொன்றின் கல்வெட்டு மூலம் அறிந்துகொள்ளலாம். இதே காலகட்டத்தில் சங்க காலச் சோழ மரபினர் வலுவுடன் சோழ நாட்டை ஆண்டதை வேலூர் பாளையம் செப்பேடு குறிப்பிடுகிறது. இருண்ட காலம் என்று அறியப்படும் இந்தக் காலகட்டத்தில்தான் சோழ மன்னர் கோச்செங்கணானும் ஆட்சி செய்தார்.

இவை தவிர 17 தமிழ்ப் பிராமி கல்வெட்டுகளையும் 17 வட்டெழுத்துக் கல்வெட்டுகளையும் ஐராவதம் மகாதேவன் இக்காலகட்டத்தைச் சேர்ந்தவையாக அடையாளம் கண்டுள்ளார். இத்துடன் பூலான் குறிச்சியில் 1980-ல் கண்டறியப்பட்ட இரண்டு கல்வெட்டுகளும் இந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவையே. இவை தமிழ் பிராமி வட்டெழுத்தாக மாறும் எழுத்தமைதி கொண்டவை. அவை களப்பிரர்களைச் சுட்டுவதாகப் பேராசிரியர் ஏ. சுப்பாராயலு குறித்துள்ளார்.

இவற்றுடன் அகழ்வாய்வில் கிடைத்த ரோம நாணயங்கள் சங்கம் மருவிய காலத்து இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, பின்வந்த பக்தி இலக்கியங்கள், அவை காட்டும் கோயில் கட்டுமானங்கள், இசைக்கலை-ஆடற்கலை போன்றவற்றின் நுட்பங்கள் ஆகியவற்றின் வழியே களப்பிரர் காலம் இருண்ட காலம் இல்லை; அது சங்க கால மரபுகள் மாற்றமடைந்து புதிய மரபுகள் உருவாவதற்கு அடித்தளம் இட்ட காலம் என்பது விளங்கும்.

இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் பதின்மூன்று கட்டுரைகளும் ஆழ்ந்த உழைப்பைச் செலுத்தி உருவாக்கப்பட்டவை. இந்தக் கட்டுரைகளுள் ‘அரங்கேற்று காதையும் நாட்டிய சாத்திரமும்’, ‘சங்கம் மருவிய கால ஆடற்கலை’, ‘பத்திமைகால ஆடற்கலை’ ஆகிய கட்டுரைகளும் மிகவும் குறிப்பிடத் தக்கவை. இந்த நூல் வரலாற்று ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள் கைகளில் இருக்க வேண்டிய முக்கியமான நூல்.

-இ. மணமாறன், உதவிப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடர்புக்கு: emanamaranhistory@gmail.com

இருண்ட காலமா?

இரா. கலைக்கோவன்

ரூ. 250

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், திருச்சிராப்பள்ளி-620018.

தொடர்புக்கு: 0431-2740302

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

36 mins ago

ஜோதிடம்

39 mins ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்