மா.அரங்கநாதன்: தத்துவப் புனைவு

By சி.மோகன்

மரபும் நவீனமும், தத்துவமும் புனைவும் கூடிய கலை மனம் மா.அரங்கநாதனுடையது. சைவ சித்தாந்த கலை இலக்கிய மரபின் நவீனப் படைப்பாளி. மெய்ஞான அழகியல் மனம் கொண்டவர். தனித்துவமிக்க படைப்புத் திறனில் ஒளிரும் சமயத்துவ ஒளியாக இவரது படைப்புகள் சுடர்கின்றன. தமிழ்ச் சமூகத்தின், குறிப்பாக சைவத் தமிழ்ச் சமூகத்தின் கூட்டு மன உருவகம் இவர். இவரது சைவ சமயமென்பது பக்தி இலக்கியத் தொடர்ச்சியென்பதாக மட்டுமல்லாமல், சிவலிங்க வழிபாடு கொண்ட பழங்குடி மரபையும், சுடலைமாடன் போன்ற சிறுதெய்வ வழிபாடுகளைக் கொண்ட நாட்டார் மரபையும் உள்வாங்கிய தொன்மம் மிக்கது. இவரது எல்லாப் படைப்புகளிலும் ஊடாடி அனைத்தையும் பிணைக்கும் எண்ணற்ற முத்துக்கறுப்பன்கள் மூலமாக இத்தொன்மையான சமூகக் கூட்டு மனம் இவரது படைப்புலகில் கட்டமைக்கப்படுகிறது. தென்புல சமய சித்தாந்தத் தொன்மமும், காலம் காலமாகத் தொடரும் வைதீக எதிர்ப்பும் இவரது படைப்புலகின் ஆதார மையங்கள். அதேசமயம், இவை வாழ்வியக்கத்தின் அனுபவப் பரப்பினூடாக வெகு இயல்பாகவும், லகுவானப் புனைவு வடிவிலும் மலர்ந்து விரிகின்றன.

‘முன்றில்’ சிற்றிதழ், ‘முன்றில்’ பதிப்பகம், ‘முன்றில்’ புத்தக விற்பனைக்கூடம், ‘முன்றில்’ இலக்கிய அமைப்பு ஆகியவற்றை உருவாக்கியதன் மூலம் ‘முன்றில்’ அரங்கநாதன் என்றும், இவற்றையெல்லாம் மிகுந்த ஈடுபாட்டோடும் அக்கறையோடும் பராமரித்த அவரது மகன் ‘முன்றில்’ மகாதேவன் என்றும் அறியப்பட்டனர். 1990-களில் தி.நகரின் பரபரப்பான ரங்கநாதன் தெருவின் ஒரு வணிக வளாகத்தில் ‘முன்றில்’ புத்தக விற்பனைக்கூடம் இயங்கியது. வாசிப்பதற்கும் இலக்கிய நண்பர்களையும் ஆர்வலர்களையும் சந்திப்பதற்கும் உரையாடுவதற்கும் அணுக்கமான இடமாக இருந்தது. முன்பகுதி புத்தகக் கடையாகவும், பின்பகுதியின் சிறு அறை வழக்கறிஞர் மகாதேவன் மாலையில் தன் கட்சிக்காரர்களைச் சந்திப்பதற்கான அலுவலகமாகவும் அமைந்தது. பகல் பொழுதின் ஏதோ ஒரு நேரத்தில் முன்றிலைச் சென்றடையும் நான் பல சமயங்களில் இரவு கடை சாத்தப்படும் வரை இருந்திருக்கிறேன். ‘முன்றில்’ மகாதேவனின் சுபாவமான அன்பாலும் நட்பாலும் இதமான வெளியாக அது இருந்தது. அவர் அளித்த இதத்துக்கான எளிய நன்றியாக 2012-ல் வெளிவந்த என் ‘எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை’ கவிதைத் தொகுப்பை அவருக்கு சமர்ப்பித்திருந்தேன். எனக்கும் யூமா வாசுகிக்குமான நட்பு வேரோடியதும் ‘முன்றில்’ தந்த வெளியில்தான்.

சென்னை மாநகராட்சியில் பணியிலிருந்த அரங்கநாதன், ஓய்வுக்குச் சில மாதங்களுக்கு முன்னர், 1990-ல் ‘முன்றில்’ இதழ் தொடங்கினார். ‘முன்றில்’ புத்தக விற்பனைக்கூடம் தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகப் பதிப்பகமும் உருவானது. பணி ஓய்வு நெருங்கிக்கொண்டிருந்த காலகட்டத்தில், ஓய்வுக்குப் பின் அவர் விரும்பும் வகையில் வாழ்வை அமைத்துக்கொள்வதற்குச் சாதகமான சூழல் கூடிவந்தது. எழுத்துலகில் ஒரு நெடும் பயணம் அமைந்தது. 1990 முதல்தான் அவரது படைப்புப் பயணம் தீவிர கதி கொண்டது. 70-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 2 நாவல்கள் இக்காலகட்டத்தில்தான் வெளிப்பட்டன.

அவரது இருப்பில் ‘முன்றில்’ எழுத்தாளர்கள் பலரும் கூடும் முற்றமானது. முழு மன நிறைவும் அமைதியும் வாய்க்கப்பெற்ற ஓர் அபூர்வ மனிதராக அரங்கநாதன் இருந்தார். சகல படைப்பாளிகளும் சகஜமாகப் புழங்குவதற்குத் தோதான வெளியாக அது இருந்தது. அதேசமயம், ஒரு குறுஞ்சிரிப்பு அவரிடம் இருந்துகொண்டிருந்தது. வாழ்க்கையின் விநோதங்கள் மீதும், மனிதர்கள் கொள்ளும் பாவனைகள் மீதும் இவரின் மனம் கொண்டிருக்கும் மெல்லிய சிரிப்பு அது. எவரையும் அரவணைத்து ஏற்றுக்கொள்ளும் சிரிப்பு.

அரங்கநாதனுடனான என் முதல் சந்திப்பு, ‘முன்றில்’ புத்தக விற்பனைக்கூடத்தில்தான் அமைந்தது. 1990-ல் ‘முன்றில்’ இலக்கிய அமைப்பு நடத்திய மூன்று நாள் இலக்கியக் கருத்தரங்கில் அவரைப் பார்த்திருக்கிறேன் என்றாலும் அது ஒரு சந்திப்பாக அமையவில்லை. ‘முன்றில்’ நடத்திய அந்த மூன்று நாள் கருத்தரங்கு ஒரு சிறந்த முன்னெடுப்பு. நேர்த்தியான திட்டமிடலுடன் நடந்த முக்கிய இலக்கிய நிகழ்வு. நவீனத் தமிழ் இலக்கியப் போக்குகளை அவதானிக்கும் வகையில் பல தரப்பினரையும் ஒருங்கிணைத்து பெரும் கனவுடன் நடத்தப்பட்ட நிகழ்வு. அச்சமயத்தில், ‘முன்றில்’ இதழோடு மட்டுமே எனக்குப் பரிச்சயமிருந்தது. அப்போது அவரது இரண்டு புத்தகங்கள் வெளியாகியிருந்தன. ‘பொருளின் பொருள் கவிதை’ (கட்டுரை, 1983) மற்றும் ‘வீடுபேறு’ (சிறுகதைகள், 1987). இந்த இரண்டையுமே அப்போது நான் வாசித்திருக்கவில்லை என்பதால் அவர் மீது அபிப்ராயங்கள் ஏதும் கொண்டிருக்கவில்லை. அதேசமயம், மூன்று நாள் கருத்தரங்க முயற்சி அவர் மீது ஒரு மதிப்பை உருவாக்கியிருந்தது. நான் ஒரு அச்சகத்தை வெகு சிரமத்துக்கிடையில் நடத்திக்கொண்டிருந்த காலமென்பதால் அந்த மூன்று நாள் நிகழ்வுக்கும்கூட இடைஇடையேதான் போக முடிந்தது.

அச்சகத் தொழிலைக் கைவிட்ட பின்புதான் ‘முன்றில்’ புத்தக விற்பனைக்கூடம் ஒரு ஆசுவாச வெளியாகக் கிட்டியது. அங்குதான் அவரது ‘வீடுபேறு’ சிறுகதைத் தொகுப்பை வாசித்தேன். அரங்கநாதனையும் சந்தித்தேன். அப்போது அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ‘ஞானக்கூத்து’ (1991), முதல் நாவலான ‘பறளியாற்று மாந்தர்’ (1991) வெளிவந்திருந்தன. இவற்றையெல்லாம் ‘முன்றில்’ கடையிலிருந்தே வாசித்தேன். எளிமையான, எவ்வித அலங்காரமுமற்ற நடை. தெளிந்த போக்கு. அவரது எழுத்துகள் முற்றிலும் புதுவித அனுபவம். அவரது எழுத்தின் குணாம்சங்களோடுதான் அவரும் இருந்தார். தெளிந்த அமைதியும் பரிபக்குவமும் கொண்டிருந்தார்.

அரங்கநாதனின் படைப்பு மனோபாவத்தையும் அவரது படைப்புவெளியின் தனித்துவ ஆற்றலையும் அறிய டி.எச்.லாரன்ஸின் ஓர் ஆதங்கத்தை நாம் அறிவது அவசியம். ‘ஒய் நாவல் மேட்டர்ஸ்’ என்ற கட்டுரையில் லாரன்ஸ் குறிப்பிடுவது: “பிளாட்டோவின் உரையாடல்கள் விநோதமான சிறிய நாவல்கள். தத்துவமும் புனைகதையும் பிரிந்தது இவ்வுலகின் மிகப் பெரிய சோகமாக எனக்குப் படுகிறது. புராணக் கதைக் காலங்களிலிருந்து இரண்டும் ஒன்றாகத்தான் உருவாகி வந்திருக்கின்றன. அரிஸ்டாட்டில், தாமஸ் அகின்னஸ் போன்றவர்களால் இவை ஒருவர் மீது ஒருவர் குற்றம் கண்டுபிடித்துத் தொல்லைபடுத்திக்கொண்டிருக்கும் தம்பதிகளைப் போல தனித்தனியே பிரிந்துபோயின. இதன் காரணமாக நாவல் மேலோட்டமானதாகவும், தத்துவம் அருவமானதாகவும் வறண்டுபோயின. நாவலில் மீண்டும் இவ்விரண்டும் இணைந்து வர வேண்டும்.” மா.அரங்கநாதனின் படைப்புலகில் தத்துவமும் புனைகதையும் நேசத்துடன் முயங்குகின்றன. அதுவே அவரது புனைவுகளின் பெறுமதியாகவும் அவரது கலை ஆளுமையாகவும் இருக்கிறது.

- சி.மோகன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

12 mins ago

தமிழகம்

49 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஓடிடி களம்

12 hours ago

மேலும்