மா.அரங்கநாதன்: கவித்துவ லயிப்பு மனம்

By சி.மோகன்

மா.அரங்கநாதனின் கவித்துவ லயிப்பு மனம்தான் அவரது தனித்துவ ஆளுமையின் மையச் சரடாக இருந்துகொண்டிருந்தது. கவிதையின் மாயத் தன்மை குறித்தும், கவிதையில் உள்ளுறைந்திருக்கும் கடவுள் தன்மை குறித்தும், புதிர்கள் குறித்தும் ஆழந்த சிந்தனைகளைக் கொண்டிருந்தபோதிலும் அவர் கவிதை எழுதியதில்லை. சிறுகதைகள்தான் எழுதினார். கவிதையின் விளக்கம்தான் சிறுகதை என்பது அவரது நிலைப்பாடு. கலை இலக்கியத்தின் மீதும் வாழ்வின் மீதும் மனிதர்கள் மீதும் அவர் மனம் கவித்துவ லயிப்பு கொண்டிருந்தது.

அவரது தோற்றத்தில் இயல்பாக உறைந்திருந்த சாந்தமும், அணுகுமுறைகளில் வெளிப்பட்ட பாந்தமும் எவரையும் ஈர்க்கக்கூடியவை. பரிபக்குவமான மனிதர் என்ற பிம்பத்தை எவ்வித பிரயாசையுமில்லாமல் அவரால் மற்றவரிடம் உருவாக்க முடிந்தது. அரங்கநாதனை விடவும் ஒரு வயது மூத்தவரான அசோகமித்திரன், அரங்கநாதன் பற்றி, “அவரை எனக்குத் தெரிந்த நாளிலிருந்து எனக்கு மூத்தவராகத்தான் நினைத்துவருகிறேன். ஒரு முக்கியக் காரணம் அவரது சாந்தமான போக்கு. நானறிந்து அவர் எதற்கும் பரபரப்படைந்ததில்லை. அதேநேரத்தில், பெரிய பூரிப்பையும் காட்டியதில்லை” என்றதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

மூத்த படைப்பாளிகள், சமவயதுப் படைப்பாளிகள், அடுத்த தலைமுறைப் படைப்பாளிகள், இளம் படைப்பாளிகள் என அனைவரோடும் அணுக்கமாக அவரால் பழகவும் அன்பு செலுத்தவும் முடிந்தது. அதிலும் குறிப்பாக, இளம் படைப்பாளிகளிடம் அவர் கொண்டிருந்த தோழமையும் கரிசனமும் அபூர்வமானது. யூமா வாசுகியிடமும் அஜயன் பாலாவிடமும் அவர் காட்டிய தோழமையும் அக்கறையும் தெளிந்து முதிர்ந்த மனதின் அடையாளங்கள். அவர்கள் இருவருமே வாழ்வோட்டத்தில் கலை நம்பிக்கை என்ற ஒரு பிடிமானத்தைத் தவிர, வேறெந்தப் பற்றுக்கோல்களும் இன்றி அல்லாடி அலைக்கழிந்துகொண்டிருந்த இளைஞர்கள். வாழ்வில் நிலைப்படாத அவர்களது அல்லாட்டம் குறித்து அவருக்குக் கரிசனம் இருந்தது. அவர்களது ஜாதகங்களை வாங்கிப் பார்த்துக் காரணம் அறிய முற்பட்டிருக்கிறார். இந்த நிலை என்று மாறும் எனக் கணிக்க விரும்பியிருக்கிறார். ஜாதகம் பார்ப்பதிலும் எண்கணிதத்திலும் அவருக்கு ஈடுபாடும் தேர்ந்த அறிவும் இருந்தது.

எனக்குத் தெரிந்து தமிழ்ப் படைப்பாளிகளில் பிரமிள், அரங்கநாதன், விக்ரமாதித்யன் மூவரும் ஜோதிட ஞானம் கொண்டவர்கள். பிரமிளின் எண்கணித ஜோதிடத்திலான ஈடுபாடு அசரடிப்பது. அவர் தன் பெயரை மாற்றியபடி இருந்தார். ஒரே நாளில் ஓரிரு முறை மாற்றுமளவுக்குத் தீவிரம் கொண்டிருந்தார். பெயர் மாற்றம் நிகழ்த்தும் மாற்றங்களை அவதானித்தபடி இருந்தார். அரங்கநாதனைப் பொறுத்தவரை, ஜோதிடக் கணிதம் மூலம் ஒருவரின் வாழ்க்கை பற்றி அது சொல்வதை அவதானிப்பதாக இருந்தது. ஜோதிடம் சார்ந்தும் அதை மையமாகக் கொண்டும் கணிசமான கதைகளை அரங்கநாதன் எழுதியிருக்கிறார். யதார்த்தமும் நம்பிக்கையும் புனைவும் என இக்கதைகள் சுவாரஸ்யம் கொண்டவை. நிகழ்வாழ்வின் அர்த்தம் குறித்த இன்னொரு பரிமாணம் கொண்டவை.

அரங்கநாதனுக்குப் புகைப்பழக்கம் உண்டு. ‘முன்றில்’ இருந்த தளத்தின் மாடிப்படியருகே நாங்கள் புகைப்பிடிக்கும்போது அவரும் வந்து சகஜமாகக் கலந்துகொள்வார். இளைஞர்களிடம் சகஜமாகப் பழகுவதற்கான கலகலப்பான மனமும் நையாண்டியும் அவ்வப்போது அவரிடம் வெளிப்படும். சீண்டக்கூடிய அளவுக்கு அன்பும் உரிமையும் கொண்டிருந்தார். ஒருமுறை நானும் யூமாவும் இருந்தபோது அவர் அஜயன் பற்றி, “அவன் இப்பல்லாம் போடுற டிரஸ்ஸுக்கு மேட்சிங்கா ஒரு இங்கிலிஸ் புக் எடுத்துட்டு வர்றான். சாயந்தரம் வருவான். பாருங்க” என்று சிரித்தபடி சொன்னார். அவர் சொன்னபடியே சற்று நேரத்தில், அஜயன் ஒரு ஆங்கிலப் புத்தகத்தோடு வந்தார். அதன் அட்டை வண்ணம் அவரது சட்டை வண்ணத்துக்குப் பொருந்தியிருந்தது. அஜயனை அப்படிப் பார்த்ததும் நாங்கள் சிரித்துக்கொண்டோம். “என்ன, சரியா இருக்கா?” என்று கேட்டபடி குறும்பாகச் சிரித்தார் அரங்கநாதன்.

‘முன்றில்’ இதழ் வெளிவந்துகொண்டிருந்த அக்காலகட்டத்தில் ‘விருட்சம்’, ‘கவிதாசரண்’ என்ற சிற்றிதழ்களும் வந்துகொண்டிருந்தன. ‘விருட்சம்’ அழகியசிங்கர் அவ்வப்போது அவரைச் சந்திக்க வருவார். ‘கவிதாசரண்’ இதழ் நடத்திய கவிதாசரண் அடிக்கடி வருவார். ஒருநாள் ‘விருட்சம்’ அழகியசிங்கர் வந்தபோது அவரிடம் ஒரு கவரைக் கொடுத்து “இது உங்களுக்கு” என்றார். சிறிது நேரம் கழித்து கவிதாசரண் வந்தபோது, “இது உங்களுக்கு” என்று இன்னொரு கவரை அவரிடம் கொடுத்தார். “இப்படிப் பிரிச்சுக் கொடுக்கிற அளவுக்கு ‘முன்றி’லுக்கு நிறைய மேட்டர் வருதா சார்” என்று வியப்புடன் கேட்டேன். சிரித்தபடி, “எல்லாம் க.நா.சு.வோட பிரசுரமாகாத எழுத்துகள்” என்றார். க.நா.சு.வின் மறைவுக்குப் பின், அவரது பிரசுரமாகாத எழுத்துகளை க.நா.சு.வின் மனைவி அரங்கநாதனிடம் ஒப்படைத்திருக்கிறார். அவற்றில் சிலவற்றை ‘முன்றி’லுக்காக எடுத்துக்கொண்டு, மீதியை விருட்சத்துக்கும் கவிதாசரணுக்கும் பிரித்துக் கொடுத்திருக்கிறார் என்பது தெரியவந்தது. அது, அவரது அக்கறையையும் சிறுபத்திரிகை இயக்க மனோபாவத்தையும் வெளிப்படுத்தியது. அவரது மனம் அத்தகைய விசாலம் கொண்டிருந்தது.

அவர் தன்னை அறிந்துகொண்டிருந்தார். அந்த அறிதலிலிருந்தே அவரிடம் சாந்தமும் தெளிவும் பக்குவமும் கூடியிருந்தன. “ஒளி வருவதும், இருள் அகலுவதும் வேறு வேறல்ல. இதுதான் இருள் என்று அறிந்துகொள்வதுதான் ஒளி. அப்போதே இருள் அகன்றுவிடுகிறது. கோபம் என்ற ஒன்றாக நாம் மாறும்போது அல்லது கோபம் அடைகிறபோது, கோபமடைந்த நம்மை நாமே பார்த்துக்கொள்ள முடியுமானால் அது சாந்தம்” என்கிறார் அரங்கநாதன். அந்த சாந்தம் அவரிடம் ஒரு சுபாவமாக இருந்தது.

“கிட்டத்தட்ட நாற்பதாண்டு காலம் ஒரே அலுவலகத்தில், அது அரசாங்கப் பணியாக இருந்தபோதிலும் எனக்குப் பிடித்திருந்தது” என்று அவர் சொல்வது பெரும் வியப்பாக இருக்கிறது. ஆனால், அதுதான் அவரது இயல்பு. தான் மேற்கொள்ளும் பணியில் ஈடுபாடும் புகார்களற்ற மனமும் வெகு சுபாவமாக அவருக்கு வாய்த்திருந்தது.

வாழ்வின் இறுதி நாட்களில் பாண்டிச்சேரியில் மகள் வீட்டில் வசித்தார். ரவி சுப்பிரமணியனின் அரங்கநாதன் குறித்த ஆவணப்படத்தின் இறுதிக் காட்சியில் அரங்கநாதன், கடற்கரையில் மகள்வழிப் பேரன் மற்றும் மகன்வழிப் பேரன் இருவரோடும் கைகோத்தபடி நடந்துசெல்லும் காட்சி அவரது தன்னிறைவான பூரண வாழ்வின் அடையாளமாக அமைந்திருக்கிறது. நான் அறிந்தவரை ஓர் அழகிய, எளிய, பூரணமான, தன்னிறைவான வாழ்க்கை அவரது. வாழ்க்கை பற்றிய அவரது புரிதலுக்கும், மனிதன் பற்றிய அவரது ஞானத்துக்கும் இதில் கணிசமான பங்கிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பேறு பெற்ற மனிதர். அபூர்வமான படைப்பாளி!

- சி.மோகன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

விளையாட்டு

10 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

மேலும்