360: எஸ்ராவுக்கு கெளரவம்

By செய்திப்பிரிவு

எஸ்ராவுக்கு கௌரவம்

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் சொந்த ஊரான மல்லாங்கிணறில் இரு தினங்களுக்கு முன்பாகப் பாராட்டு விழா நடைபெற்றது. சுமார் 1,000 பேர் கலந்துகொண்டு எஸ்ராவை இன்பக்கடலில் மூழ்கடித்தார்கள். அதைத் தொடர்ந்து இன்று (பிப்ரவரி 23) திருவண்ணாமலையில் ‘உண்டாட்டு’ நிகழ்வை ஒருங்கிணைக்கிறது வம்சி புக்ஸ், தென்பண்ணை இலக்கியச் சமவெளி. இந்த முழுநாள் நிகழ்வை ஒரு ஒழுங்கமைவுடன்கூடிய அமர்வுகளாக அல்லாமல், படைப்பாளிகளுடன் காட்டுக்குள் நடைப்பயணம், பயணத்தை ஒட்டியே கருத்துப் பறிமாறல், ஓவியக் கண்காட்சி, கறி விருந்து என வித்தியாசமான முறையில் வடிவமைத்திருக்கிறார்கள்!

 

நாகர்கோவிலில் புத்தகக்காட்சி!

நாகர்கோவிலில் கல்வி நிறுவனங்கள், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் - பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து மாவட்ட நிர்வாகத்தின் உறுதுணையுடன் மூன்றாவது முறையாக நடத்தப்படும் கன்னியாகுமரி புத்தகத் திருவிழா நாகர்கோவில் இந்து கல்லூரி அருகில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. பிப்ரவரி 15-ல் தொடங்கிய இந்த அறிவுத் திருவிழா பிப்ரவரி 25 வரை நடக்கிறது. 100 அரங்கங்கள் கொண்ட இப்புத்தகத் திருவிழாவில் நாடு முழுவதிலுமிருந்து முக்கியமான பதிப்பகங்கள் கலந்துகொள்கின்றன. காலை 11 மணி முதல் இரவு 9 மணிவரை புத்தகக் காட்சியில் வாசகர்கள் புத்தக வேட்டையாடலாம். ‘இந்து தமிழ் திசை’ வெளியீடுகளை அரங்கு எண் 28-ல் வாங்கலாம்!

 

இல்லஸ்ட்ரேடட் வீக்லி வடிவத்தில் ஒரு சூழலியல் பத்திரிகை

தமிழில் சூழலியல் சார்ந்த நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டுவரும் ‘பூவுலகின் நண்பர்கள் - தமிழ்நாடு, புதுச்சேரி’ அமைப்பு ‘பூவுலகின் நண்பர்கள்’ என்ற இருமாத இதழைத் தொடங்கியிருக்கிறது. பழைய ‘இல்லஸ்ட்ரேடட் வீக்லி’ வடிவத்தில் புகைப்படங்களுக்கும் உள்ளடக்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த இதழ். எதிர்பார்க்கப்பட்ட கால அளவுக்கு முன்பே உலகம் வெப்பமயமாதல் நெருங்கிவருகிறது என்று எச்சரிக்கும் ஐபிசிசி குழுவின் அறிக்கை, கடந்த 40 ஆண்டுகளில் 60 சதவீத உயிரினங்கள் அழிந்துவிட்டன என்பதை விளக்கும் டபிள்யுடபிள்யுஎஃப் அறிக்கை, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக வழக்குகள் கடந்து வந்த பாதை, கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கை ஆகியவற்றைப் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஆசிய யானைகள் குறித்த செந்தில்குமரனின் புகைப்படக் கட்டுரை இதழின் சிறப்பம்சங்களில் ஒன்று. படிக்கவும் பாதுகாக்கவுமான இதழ்களின் வரிசையில் ‘பூவுலகின் நண்பர்கள்’ புதுவரவு.

 

25 வயதுக்குள் 80 நாடுகள் பயணம்!

தாய்லாந்தைச் சேர்ந்த பியெரெட்டா டான் (Pieretta Dawn) தனது முதல் நாவலை 15-வது வயதில் வெளியிட்டார். அடுத்த பத்தாண்டுகளுக்குள் மூன்று நாவல்கள். இப்போது, தாய்லாந்தில் அதிக வாசகர்களைக் கொண்டிருக்கும் எழுத்தாளர் இவர்தான்! இந்த வெற்றிக்குத் தனது பயண அனுபவங்களே காரணம் என்கிறார் பியெரெட்டா.

 

ஜெயமோகனின் அடுத்த கட்டண உரை

ஆகுதி பதிப்பகம் நடத்தும் இலக்கியப் பெருவெளி நிகழ்வில் ‘மரபை விரும்புவதும் வெறுப்பதுவும் எப்படி?’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்துகிறார் எழுத்தாளர் ஜெயமோகன். மார்ச் 2 அன்று, டி.என்.ராஜரத்தினம் பிள்ளை கலை அரங்கில் நடக்கவிருக்கும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நுழைவுக் கட்டணம் ரூ.300. கடந்த ஆண்டு திருநெல்வேலியில் ஜெயமோகன் நிகழ்த்திய கட்டண உரையில் கிட்டத்தட்ட 250 பேர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

ஜோதிடம்

29 mins ago

ஜோதிடம்

44 mins ago

ஜோதிடம்

57 mins ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்