ராஜீவ்-ஜெயவர்தன ஒப்பந்தம்: தொடரும் விவாதம்

By செல்வ புவியரசன்

ந்திய - இலங்கை அரசுகளுக்கு இடையே ஜூலை 1987-ல் நிறைவேறிய ஒப்பந்தம், 30 ஆண்டுகளுக்குப் பிறகும் இலங்கை அரசியலில் தொடர் விவாதப்பொருளாக இருக்கிறது. அந்த ஒப்பந்தத்தின் முன்னும் பின்னுமாக நடந்தேறிய சம்பவங்கள் இந்திய - இலங்கை உறவில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், அந்த ஒப்பந்தத்தை மையப்படுத்தி, இலங்கைத் தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினையின் சமீப காலப் போக்கு குறித்துத் தெளிவை உருவாக்கும் முயற்சியாக அமைந்திருக்கிறது, பத்திரிகையாளர் தி.ராமகிருஷ்ணனின் இந்தப் புத்தகம். கூடவே, ஒப்பந்தம் நடந்த காலகட்டத்தைப் பற்றிய ஒன்றுக்கொன்று முரணான சித்தரிப்புகளை ஒப்புநோக்கி, எது உண்மையெனவும் உணர்த்த முற்பட்டிருக்கிறார்.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்துக்கு முன்பு புது டெல்லி யில் நடந்த ராஜீவ்-பிரபாகரன் சந்திப்பைப் பற்றியும், அப்போது பிரபாகரன் நடத்தப்பட்ட விதத்தைப் பற்றியும் தமிழகத்தில் உலவும் செவிவழித் தகவல்கள் ஏராளம். விடுதலைப் புலிகளின் குரலாக விளங்கிய அன்ரன் பாலசிங்கம், அவ்வமைப்பின் ஆதரவாளரான பழ.நெடுமாறன், தமிழக அரசின் பிரதிநிதியாக விளங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன், சந்திப்பில் பங்கேற்ற அரசு அதிகாரிகள், அந் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்துவந்த மூத்த பத்திரிகையாளர்கள் எனப் பலரின் கருத்தையும் ஒருங் கிணைத்து, உண்மையின் பல முகங்களையும் சுட்டிக்காட்டி என்ன நடந்தது என்ற முடிவை வாசகரிடமே விட்டு விடுகிறார் தி.ராமகிருஷ்ணன். அக்காலகட்டத்தில் நடந்த ஒவ்வொரு நிகழ்வைக் குறித்தும் வெளியுறவுத் துறை அதிகாரிகளின் புத்தகங்கள், பத்திரிகைச் செய்திகள், தொடர்புடையவர்களின் நேர்காணல்கள் என்று பல ஆதாரங்களிலிருந்தும் தகவல்களைத் தொகுத்து ஒப்புநோக்கி, மனச்சாய்வின்றி இப்பிரச்சினையை அவர் அணுகியிருக்கிறார்.

இலங்கைத் தமிழர்களின் மீது இந்தியா காட்டிய அக்கறை, அதுகுறித்து சிங்களவர்களிடத்தில் உருவான அச்சம் எனத் தொடங்கி, கடைசியில் இந்தியா அனுப்பிவைத்த அமைதிப்படையின் விமர்சனத்துக்குரிய நடவடிக்கைகள், இலங்கையின் ஆட்சியாளர்கள், போராளிக் குழுக்கள் என இருதரப்புமே இந்தியாவின் தலையீட்டை விரும்பாதது, அந்நிலைக்குக் காரணமான இலங்கையின் உள்நாட்டு அரசியல் சூழல் என மொத்தப் பின்னணியையும் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது இந்தப் புத்தகம்.

தனி ஈழம் கேட்டுப் போராடிய விடுதலைப் புலிகள், உள்நாட்டுப் போரில் அழித்தொழிக்கப்பட்டுவிட்டார்கள். ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக இருந்த போர் நிறுத்தத்துக்கு இப்போது அவசியமில்லை. ஆனாலும் ஒப்பந்தத்தின் மற்றொரு முக்கியப் பகுதியாக இருக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு குறித்து இன்னமும் இலங்கைத் தமிழர்களிடத்தில் குரல்கள் எழுந்துகொண்டுதான் இருக்கின்றன. அதேநேரத்தில், எந்தவொரு நாடும் இன்னொரு நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுவது, அது நல்ல நோக்கத்திலேயே அமைந்திருந்தாலும்கூட அத்துமீறலாகவே கருதப்படும்.

இந்தியா அந்தப் படிப்பினையைக் கற்றுக்கொண்டிருக்கிறதா? நிச்சயமாக. 2003-ல் அமெரிக்கா ஈராக்கின் மீது போர் தொடுத்தபோது இந்தியாவின் உதவி நாடப்பட்டது. அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், இந்தியப் படையை அனுப்பவில்லை. அமைதிப்படை அனுபவமே அதற்குக் காரணமாக அமைந்தது. தமிழகத்தில் உணர்ச்சிகரமாகக் கையாளப்படும் இலங்கைத் தமிழர் பிரச்சினை யைச் சார்புநிலைகளற்று நிதானத்தோடு அணுகியிருக்கிறார் தி.ராமகிருஷ்ணன். வெளியுறவுக் கொள்கைகள் குறித்துப் பேசும்போது, இயல்பாகவே வெளிப்படும் சிடுக்குகள் நிறைந்த மொழிநடையைக் கவனமாகத் தவிர்த்திருப்பது அவரது மொழியாளுமைக்கும் இவ்விஷயத்தின் மீது அவருக்கு இருக்கும் அக்கறைக்கும் சான்று.

ஓர் இனப் பிரச்சினையும்

ஓர் ஒப்பந்தமும்

தி.ராமகிருஷ்ணன்

கலைஞன் பதிப்பகம்,

சென்னை-17,

விலை ரூ.180

தொடர்புக்கு: 044 2834 0488

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்