மணிப்பூரின் அன்னையர்கள்!

காஸ்வேதா தேவியின் முக்கியமான சிறுகதைகளுள் ஒன்று ‘திரௌபதி’ (1978). நக்ஸல்பாரி இயக்கத்தைச் சேர்ந்த திரெளபதி என்ற பெண்ணை, காவலர்கள் கைதுசெய்து, அவரைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவதுதான் அந்தக் கதையின் சாராம்சம்.

அதில் வரும் திரெளபதி, ஆடைகள் களைந்து, ‘நான் வெட்கப்படுவதற்கு இங்கு எந்த ஆணும் இல்லை. ஆடையால் என்ன பயன்? நீங்கள் என்னை ஆடையிழக்கச் செய்ய முடியும். ஆனால், உங்களால் என்னை மீண்டும் உடுத்தச் செய்ய முடியாது. நீங்களெல்லாம் ஆணா?’ என்று கேட்க, அந்தக் கதை முடிகிறது. இந்தக் கதையை ஹீஸ்நம் கண்ஹைலால் என்ற மணிப்பூரைச் சேர்ந்த நாடக ஆசிரியர், 2000-ல், நாடகமாக அரங்கேற்றினார். அதில் அவரின் மனைவியும், ‘திரெளபதி’ கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவருமான ஹீஸ்நம் சாவித்ரி, மேடையில், நிர்வாணமாகத் தோன்றினார். இந்திய மேடை நாடக வரலாற்றிலேயே, ஒரு கதாபாத்திரம் ஆடையில்லாமல் தோன்றியது அதுதான் முதன்முறை. அந்த நாடகம் அரங்கேற்றப்பட்டு சரியாக நான்கு வருடங்கள் கழித்து, அதாவது 2004-ல், மணிப்பூரில் தங்கள் ஆடைகளைக் களைந்து, ‘இந்திய ராணுவமே, எங்களை வன்கலவி செய்’, ‘எங்கள் சதையை எடுத்துக்கொள்’ என்று கோஷமிட்டனர் 12 நவீன திரெளபதிகள். எதற்காக அந்த 12 பெண்களும் அப்படிச் செய்தார்கள்?

தங்ஜம் மனோரமா

அஸாம் ரைஃபிள்ஸ் படையின் தலைமையகம் மணிப்பூரின் இம்பால் நகரத்தில் உள்ள கங்லா கோட்டையில் அமைந்திருந்தது. 2004-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி, பயங்கரவாதக் குழு ஒன்றுடன் தொடர்புகொண்டிருப்பதாகக் கூறி, தங்ஜம் மனோரமா எனும் 32 வயது பெண் கைதுசெய்யப்பட்டு, கங்லா கோட்டைக்கு விசாரணைக்காகக் கொண்டுவரப்படுகிறார். அடுத்த நாள், இவரது உடல், தோட்டம் ஒன்றில் கண்டெடுக்கப்படுகிறது. பிறகுதான் தெரிந்தது, அவர் அஸாம் ரைஃபிள்ஸ் படையினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் என்பது. அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அடையாளங்களை அழிக்கும் முயற்சியாகத் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள் அந்தப் படையினர்.

இந்தச் சம்பவம் குறித்துக் கேள்விப்பட்ட சில பெண்கள், அங்குள்ள அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த மனோரமாவின் உடலைப் பார்க்கச் சென்றார்கள். அஸாம் ரைஃபிள்ஸ் படையின் இப்படியான தொடர் ஒடுக்குதல்களுக்கு எதிராக, மிகத் தனித்துவமான ஒரு போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டனர் அந்தப் பெண்கள். ஜூலை 15 அன்று, கங்லா கோட்டை முன்பு தங்கள் ஆடைகளைக் களைந்து அந்த 12 பெண்களும் கோஷமிட்டுப் போராட்டம் நடத்தினார்கள். மிகக் குறைந்த நேரமே நடைபெற்ற அந்தப் போராட்டம், உலகையே உலுக்கியது. அதன் விளையாக, மணிப்பூரின் ஏழு தொகுதிகளிலிருந்து அஸாம் ரைஃபிள்ஸ் படை நீக்கப்பட்டிருக்கிறது. கங்லா கோட்டையிலிருந்த அந்தப் படையின் தலைமையகம் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. சுமார் 50 வயதுக்கு மேலான அந்த 12 பெண்கள், அந்தச் சம்பவத்துக்குப் பிறகு ‘இமா’க்கள் என்று அழைக்கப்படலாயினர். ‘இமா’ என்ற மணிப்பூரிச் சொல்லுக்கு ‘அன்னை’ என்று பொருள். மணிப்பூர் பெண்களின் மானம் காக்கப் போராடிய அவர்களை, அன்னை என்று அழைப்பதுதானே உத்தமம்?

12 அன்னையர்கள்

இந்திய சமகால வரலாற்றில் தழும்பாக அமைந்துவிட்ட அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற, அந்த 12 அன்னையரைத் தனித்தனியாகச் சந்தித்து, அவர்களின் வாழ்க்கையை, உணர்வுகளை ‘தி மதர்ஸ் ஆஃப் மணிப்பூர்’ என்ற புத்தகத்தில் ஆவணமாக்கியிருக்கிறார் பத்திரிகையாளர் தெரசா ரஹ்மான். இதை ‘சுபான்’ பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. வெறுமனே அந்தப் பெண்களின் வாழ்க்கையைச் சொல்லாமல், மணிப்பூரின் கலாச்சாரம், இரண்டாம் உலகப் போரில் அதன் பங்கு, குடிப்பழக்கத்துக்கு எதிராக மணிப்பூர் பெண்களின் போராட்டம், பயங்கரவாதக் குழுக்களால் மணிப்பூர் சிறுவர்கள் கடத்தப்பட்டுக் குழந்தை பயங்கரவாதிகளாக ஆக்கப்படுவது, இரோம் ஷர்மிளாவின் 16 ஆண்டுகால உண்ணாநிலைப் போராட்டம் உள்ளிட்ட மணிப்பூரின் நிகழ்கால வரலாற்றையும் இந்தப் புத்தகம் சொல்லிச் செல்வதால், இது தனித்துவம் பெறுகிறது.

தன்னுடைய உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்துக்கொண்டு, திருமணம் செய்துகொண்டு, அரசியல்ரீதியான போராட்டத்தை முன்னெடுக்கத் தற்போது முயற்சித்துவருகிறார் இரோம் ஷர்மிளா. இந்த சந்தோஷமான தருணத்தில், இந்தப் புத்தகத்தை வாசிப்பது, ஆறிய புண்ணை மீண்டும் கிழித்துப் பார்க்கும் விஷயமல்ல; தழும்பாக மாறிவிட்ட வரலாற்றை மறுவாசிப்பு செய்யும் முயற்சி!

-ந.வினோத்குமார்,

தொடர்புக்கு: vinothkumar.n@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

தமிழகம்

23 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்