நுரையீரல் முதல் ஜீரண மண்டலம் வரை: சுக்கு இருக்க பயமேன்? - ஆயுர்வேத குறிப்புகள்

By டாக்டர் எல்.மகாதேவன்

திரிகடுகம் (சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றின் சேர்க்கை) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த மருந்து, பல மருந்துகளுக்குத் துணைமருந்தாக, அனுபானமாக பயன்படுத்துவது உண்டு. திரிகடுகம் சிறந்த கார்ப்புள்ளது. நுரையீரல், ஜீரண மண்டலப் பிரச்சினைகளைத் தீர்க்கவல்லது. நெஞ்சு சளி, ஜலதோஷத்தை நீக்கும். நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் திரிகடுகத்தின் முதல் பொருளான சுக்கின் மகத்துவத்தைப் பற்றி பார்க்கலாம்.

கார்ப்பு சுவை உடைய சுக்கு உஷ்ண வீர்யம் உடையது. இருமலை மாற்றும், கபத்தைக் குறைக்கும், பசியை உண்டாக்கும், ஆண்மையை உண்டாக்கும், தாய்ப்பாலைச் சுரக்கச் செய்யும். சௌபாக்ய சுண்டி என்ற மருந்து இதனால் செய்யப்படுகிறது. இது ருசியை அதிகரிக்கும், இலகு குணம் உடையது, மலத்தைப் பிரிப்பது. இதனால் செய்யப்பட்ட நெய், கிரஹணி ரோகத்தை மாற்றும். சுக்கை வெல்லத்துடன் சாப்பிட விக்கல் நிற்கும். சுக்குக் கஷாயம் இருமலைப் போக்கும், பசியை அதிகரிக்கச் செய்யும். சுக்கு சேர்த்துக் காய்ச்சப்பட்ட பால், தலைவலியைக் குறைக்கும்.

வில்வத்துடன் சேர்த்துக் காய்ச்சினால் வாந்தியைப் போக்கும். சுக்கும், வெல்லமும், எள்ளும் இடித்துச் சாப்பிட மாதவிடாய் வலி மாறும். சுக்கை ஆயுர்வேதம் 'மஹெளஷதம்' என்று குறிப்பிடுகிறது. மருந்துகளில் உத்தமமானது சுக்கு என்று இதற்கு அர்த்தம். இஞ்சியை நன்கு காய வைத்தால், கிடைப்பதே சுக்கு.

குழந்தைகளுக்குச் சுக்கு நல்ல மருந்து. கடுக்காய், மாசிக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றில் ஒன்றிரண்டுடன் சுக்கை அரைத்து மருந்தாகப் புகட்டுவார்கள்.

பிரசவ மருந்தாகவும் சுக்கு பயன்படும். மசக்கை நேரத்தில் இஞ்சியும், சுக்கும் குமட்டலைப் போக்கும் மருந்தாகப் பயன்படுகின்றன.

`சுக்குக்குப் புறமே நஞ்சு, கடுக்காய்க்கு அகத்தே நஞ்சு' என்பது பழமொழி. அதனால் சுக்கை மேல் தோல் நீக்கியே, மருந்து தயாரிக்கப் பயன்படுத்த வேண்டும். பல் வலிக்கு - சுக்குத் துண்டு ஒன்றை வாயிலிட்டு கடித்து மென்றுவரப் பல்வலி, ஈறுவலி குறையும்.

இரண்டு ஸ்பூன் சுக்குப் பொடியை அரை லிட்டர் தண்ணீரில் போட்டுக் கால் லிட்டர் ஆகும் வரை காய்ச்சி, மூன்று வேளை ஆறு ஸ்பூன் அளவுக்குக் குடித்தால் வயிற்றுவலி, பொருமல், பேதி, குல்மம், குமட்டல், ருசியின்மை ஆகியவை நீங்கும்.

சுக்கு, சீரகம், கொத்தமல்லி விதை மூன்றையும் சம அளவு எடுத்து இடித்து, இரண்டு ஸ்பூன் தூளை அரை லிட்டர் தண்ணீரில் இட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கிவைத்துத் தாகம் எடுக்கும் போதெல்லாம் அருந்தலாம். குடிநீரையும் வீட்டில் தூய்மை செய்யும் முறை இது.

வயிற்றுப்போக்கை நீக்க 10 கிராம் சுக்கை அரைத்து, புளித்த மோரில் களியாகக் கிளறி மூன்று வேளை வீதம், மூன்று நாட்கள் உட்கொள்ள வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.

சுக்கைத் தட்டி போட்டு வெந்நீர் தயார் செய்து குளிக்கத் தலையில் நீர்க்கோர்வை தலைவலி, முகநரம்புவேக்காளம் தீரும். ஜலதோஷத்துக்கு நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது. ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது.

கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது. மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. இஞ்சி சாற்றைப் பாலில் கலந்து சாப்பிட வயிற்று நோய்கள் தீரும், உடல் இளைக்கும்.

ஒவ்வொரு நாளும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக்கொள்வது, இதய நோயாளிகளுக்கு மாரடைப்பு வராமல் காக்கும். இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பு உண்டாகாமல் தடுத்தும், புதிய அடைப்பு உண்டாவதைக் கரைத்தும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இஞ்சியைச் சுத்தம் செய்யும்போது, அதன் மேல் தோலை நன்றாக நீக்க வேண்டும். அதன் மேல் தோல் நஞ்சாகும். அதேபோல் சுக்கைச் சுத்தம் செய்யும்போது, அதன் மேல் சுண்ணாம்பைத் தடவிக் காயவைத்து நெருப்பில் சுட்டு, பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும். இது மிக முக்கியமானது; சுத்தம் செய்யாமல் பயன்படுத்த வேண்டாம்.

இஞ்சியைச் சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டுச் சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவுக்குச் சேர்த்து நான்கு நாள் கழித்துத் தினசரி ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்துக்குச் சாப்பிட்டுவரலாம். அப்போது உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டுவிடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும்.

- ஆயுர்வேத மருத்துவர், கட்டுரையாளர்

`நலம் வாழ` பகுதியிலிருந்து.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

இந்தியா

27 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

வணிகம்

7 hours ago

மேலும்