முடிவுக்கு வரும் மெஸஞ்சர்!

By முகமது ஹுசைன்

கூகுளின் வளர்ச்சி முதலில் யாஹூவைப் பின்னுக்குத் தள்ளியது. அதன் பின்வந்த வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்றவற்றின் அபரிமிதமான வளர்ச்சி யாஹூ மெஸஞ்சரைக் கடுமையாகப் பாதித்தது. இந்த ஜூலை 31-ம் தேதியோடு யாஹூ மெஸஞ்சருக்கு மூடு விழா நடத்தப்போவதாக யாஹூ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த யாஹூ மெஸஞ்சரால் உலகம் சுருங்கி, மக்களின் நட்புப் பரப்பு விரிந்தது எனலாம்.

சாட்டிங் தொடக்கம்

அந்தக் காலகட்டத்தில் உலகையே யாஹூ மெஸஞ்சர் அடிமையாக்கியது என்றுதான் சொல்ல வேண்டும். மெஸஞ்சரின் வெற்றியால்  ‘பிரவுசிங் சென்டர்’ என்ற புதிய தொழில் உருவானது. 2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் பிரவுசிங் சென்டர் தொடங்குவது வெற்றிகரமான தொழிலாக இருந்தது. குக்கிராமத்திலும் பிரவுசிங் சென்டர்கள்  முளைத்தன. குக்கிராமத்தில் இருந்த இளைஞர்கள், அமெரிக்காவில் வசிக்கும் இளைஞர்களிடம் 'ASL'  கேட்டுக்கொண்டிருந்தார்கள். 'ASL' என்பது வயது, பாலினம், இடம்.

இந்த மெஸஞ்சரை உருவாக்கியவர்கள் ஜெர்ரியும் டேவிட்டும். டேவிட் கணினியில் கில்லி. ‘சி லாங்குவேஜ்ஜி’ல் அவர் எழுதிய  ‘ஃபிலோ சர்வர் புரோகிராம்’ உலகையே மாற்றியமைத்தது. 1994-ல்

தன் நண்பர் ஜெர்ரியுடன் இணைந்து உருவாக்கிய Jerry and David's Guide to the World Wide Web என்ற இணையதளம் இணையத்தின் முதல் தேடல் தளம். இன்றைய கூகுள், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற அனைத்துக்கும் முன்னோடி அந்த இணையதளமே. இணையதளம் தொடங்கிய சில நாட்களில் அதன் பெயரை ‘Yahoo!’ என்று மாற்றியமைத்தார்கள். ‘யாஹூ’ என்பதன் விரிவாக்கம் ‘Yet Another Hierarchically Organized Oracle’. அதாவது, வரிசைப்படி முறையாக ஆரக்கிளில் அடுக்கப்பட்ட இணையதளங்கள் என்பதே இதன் அர்த்தம்.

உலகைக் கவர்ந்த யாஹூ

முதலில் யாஹூ வெறும் தேடல் தளமாகவே இருந்தது. விளையாட்டாக ஆரம்பிக்கப்பட்ட அந்த இணையதளம், சில நாட்களிலேயே உலகின் பேசு பொருளானது. விளையாட்டுப் பிள்ளைகளாக இருந்த அந்த இளைஞர்கள், மிகப் பெரும் தொழில் அதிபர்களாக மாறினர். பணமும் புகழும் பெருகின. யாஹூவை வெறும் தேடல் தளமாக மட்டும் சுருக்கிக்கொள்ளாமல், அதன் பயனை அவர்கள் விரிவாக்கினார்கள்.

அவர்கள் உருவாக்கிய யாஹூ மின்னஞ்சல், அப்போது பிரபலமாக இருந்த ‘ஹாட் மெயி’லுடன் மல்லுக் கட்டியது. விரைவிலேயே ஹாட் மெயிலை அது பின்னுக்குத் தள்ளியது. யாஹூ மின்னஞ்சலின் வெற்றி அளித்த உற்சாகத்தில், 1998-ல் அவர்கள் யாஹூ பேஜரை உருவாக்கினார்கள். 1999-ல் யாஹூ பேஜர், யாஹூ மெஸஞ்சராக மாறியது.

இரு இளைஞர்களின் கைவண்ணம்

ஜெர்ரியும் டேவிட்டும் டாம் & ஜெர்ரியும் போன்று சதா முட்டிக்கொண்டு திரியும் நபர்கள் அல்ல. அவர்கள் இருவரும்  ‘முஸ்தபா முஸ்தபா’ என அப்பாஸ் - வினித் போன்று சதா ஒட்டிக்கொண்டு திரியும் தோஸ்துகள். அவர்களுக்கு இடையிலான நட்பு, கண்டம் தாண்டிய ஒன்று. ஜெர்ரியின் பூர்விகம் தைவான். இரண்டு வயதிலேயே தந்தையை இழந்தவர்.

அதன் பின், ஆங்கில விரிவுரையாளராகப் பணியாற்றி வந்த ஜெர்ரியின் அன்னை, குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறி, ஜெர்ரியை அங்கேயே வளர்த்தெடுத்தார். அமெரிக்காவில் குடியேறியபோது ஜெர்ரிக்குத் தெரிந்த ஒரே ஆங்கிலச் சொல் ‘Shoe’. ஆனால், அடுத்த மூன்றாண்டுகளில் அவரது ஆங்கிலப் புலமை அமெரிக்க வாழ் மக்களுக்கே சவால்விடும் விதமாக வளர்ந்தது ஒரு தனிக் கதை.

பள்ளியில் நன்கு படித்த ஜெர்ரிக்கு ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இன்ஜினீயரிங் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்ஜினீயரிங்கில் முதுநிலைப் படிப்பையும் ஜெர்ரி அங்கேயே படித்தார். அப்போதுதான் ஜெர்ரி தனது வாழ்நாள் தோழரான டேவிட் ராபர்ட் ஃபிலோவைச் சந்தித்தார். ஜெர்ரிக்கும் டேவிட்டுக்கும் எட்டு மணிக்குச் சென்று ஐந்து மணிக்குத் திரும்பும் வழக்கமான வேலையில் ஈடுபாடும் விருப்பமும் இல்லை.

வசதி படைத்த வீட்டுப் பிள்ளைகளாக அவர்கள் இருந்திருந்தால், வெட்டியாக அவர்கள் உலகைச் சுற்றி வந்திருப்பார்கள். வசதி இல்லை என்பதால், அவர்கள் இணையத்தையே சுற்றி வந்தனர். அவர்கள் தனித்துவத்துடன் வாழ்ந்து உலகமே திரும்பிப்பார்க்கும்படி ஜெயித்துக்காட்டினர்.

இந்த ஜூலை 31-ல் அவர்கள் உருவாக்கிய யாஹூ மெஸஞ்சர் எனும் சகாப்தம் மட்டும் முடிவுக்கு வரவில்லை. அதைப் பயன்படுத்திய மக்களின் இருபது வருட நினைவுகளும் நட்புகளும் சேர்ந்தே முடிவுக்கு வருகின்றன. இருபது வயதிலேயே ஒரு சகாப்தம் மரணிப்பது துயர் மிகுந்ததுதான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

இந்தியா

18 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

45 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

53 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

38 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

மேலும்