சிறுமியை 'நிலாப்பெண்ணாக' தேர்வு செய்து வழிபாடு: வேடசந்தூர் அருகே பாரம்பரிய திருவிழா 

By பி.டி.ரவிச்சந்திரன்


வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சிறுமியை நிலாப்பெண்ணாக தேர்வு செய்து பெண்கள் மட்டும் வழிபாடு நடத்தும் பாரம்பரிய திருவிழா நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குட்டம் ஊராட்சி கோட்டூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தை மாதம் பவுர்ணமி அன்று குட்டம் ஊராட்சி கோட்டூர் கிராமத்தில் இரவு நிலாப்பெண் வழிபாடு நடத்தப்படுகிறது. பெண்கள் மட்டும் இந்த வழிபாட்டில் கலந்துகொள்கின்றனர். இந்த ஆண்டு தை மாதம் பவுர்ணமி நாளான நேற்றுமுன்தினம் இரவு நிலாப்பெண் வழிபாடு நடைபெற்றது. முன்னதாக ஊர்மக்கள் ஒன்றுகூடி கிராமத்தில் உள்ள 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் பெயர்களை எழுதி குலுக்கள் முறையில் நிலாப்பெண்ணை தேர்வு செய்கின்றனர்.

தேர்வு செய்த சிறுமியை நிலாப்பெண்ணாக வழிபாடு நடத்துகின்றனர். இந்த ஆண்டு நிலாப்பெண்ணாக கோட்டூர் கிராமத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், சுதா தம்பதிகளின் மகள் யாழினி(10) தேர்வு செய்யப்பட்டார். தைப்பூச முழு நிலவு நாளான நேற்று முன்தினம் இரவு இந்த சிறுமிக்கு புத்தாடை அணிவித்து ஆவாரம் பூக்களால் அலங்கரித்தனர். தொடர்ந்து அந்த சிறுமியிடம் ஆவாரம்பூக்கள் அடங்கிய கூடையை கொடுத்து கிராமத்துக்கு வெளியே உள்ள மாசடைச்சி அம்மன் கோயிலுக்கு பெண்கள் ஊர்வலமாக அழைத்துவந்தனர்.

கோயில் முன்பு இரவு முழுவதும் கும்மியடித்து நிலாபாடல்கள் பாடி வழிபட்டனர். விடியத் துவங்கியவுடன் வானத்தில் நிலா மறையத் துவங்குவதற்குள் அங்குள்ள குளத்துக்கு சிறுமியை அழைத்துச்சென்று தீபம் ஏற்றச்செய்து வழிபட்டனர். விடிவதற்குள் அனைத்து வழிபாடுகளையும் முடித்துவிட்டு பெண்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

இந்த பாரம்பரிய திருவிழா குறித்து கோட்டூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் கூறியதாவது: "எங்கள் முன்னோர் காட்டியவழியில் நிலாப்பெண் வழிபாடை தொன்றுதொட்டு பாரம்பரியமாக நடத்திவருகிறோம்.

இதுபோன்று வழிபாடு நடத்தினால் எங்கள் கிராமம் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களிலும் மழைபெய்து விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை. எங்கள் மூதாதையர்கள் காட்டிய வழியில் ஆண்டுதோறும் நிலாப்பெண் வழிபாட்டை நடத்திவருகிறோம். எங்களுடன் பங்கேற்கும் சிறுமிகள் அடுத்த தலைமுறைக்கும் இந்த வழிபாட்டை எடுத்துச்செல்வர்", என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்