ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்யும் பழைய இரும்பு வியாபாரி - 25 ஆண்டுகள் தன்னலமற்ற சேவை @ உடுமலை

By எம்.நாகராஜன்

உடுமலை: உடுமலையில் கடந்த 25 ஆண்டுகளாக ஆதரவற்றோர் சடலங்களை அடக்கம் செய்யும் சமூக ஆர்வலர் டி.உமர் அலி இதுவரை 1177 சடலங்களை அடக்கம் செய்துள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட சங்கிலி வீதியைச் சேர்ந்தவர் டி.உமர் அலி (53). இவரது பெற்றோர் தஸ்தியர் சாய்பு, நூர்ஜஹான் பீவி ஆவர். மனைவி மும்தாஜ், மகன் ரியாஸ், மகள் பர்வீன் பாத்திமா.

உடுமலையில் தொடக்கத்தில் சைக்கிளில் கிராமம், கிராமமாக சென்று பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கும் தொழிலை மேற்கொண்டு வந்த இவர், தற்போது தனியார் ஆலைகளில் சேகரமாகும் பழைய இரும்புகளை எடுத்து விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார். கோவை, திருப்பூர் மாவட்டங்களிலுள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீஸார் பலருக்கும் உமர் அலி பரிட்சயமானவர். இதற்கு, போலீஸாரால் மீட்கப்படும் ஆதரவற்றோர் சடலங்களை அடக்கம் செய்வதில் உதவியாக இருக்கும் அவரது பங்களிப்புதான் காரணம்.

இதுதொடர்பாக 'இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் டி.உமர் அலி கூறியதாவது: கடந்த 33 ஆண்டுகளாக பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறேன். 1990-ம் ஆண்டில் அன்னை தெரசா பெயரில் அறக்கட்டளை தொடங்கி, ஆதரவற்றோரின் சடலங்களை அடக்கம் செய்து வருகிறேன். காவல் துறையில் இருந்து வரும் அழைப்பின்பேரிலேயே, இச் சேவையை செய்து வருகிறேன். அந்த வகையில் 30-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர் உட்பட 1,177 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

உமர் அலியின் சேவையை பாராட்டி நினைவு பரிசு வழங்கி கவுரவித்த
உயர் நீதிமன்ற நீதிபதி பி.வடமலை.

இந்து சமயத்தை பின்பற்றுவோரின சடலத்தை அடக்கம் செய்ய வாகனம், குழி எடுத்தல், மாலை, பூஜை பொருட்கள், கோடி துணி உள்ளிட்டவைகளுக்காக ரூ.5,000 மற்றும் கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய ரூ.7,000 வரை செலவாகும். இவர்களுக்கான மரப்பெட்டிகள் செய்ய கூடுதல் செலவாகிறது.

1990-ல் முதன்முதலில் திருமூர்த்தி அணையில் விழுந்து இறந்தவரின் அடையாளம் தெரியாத சடலத்தை, போலீஸார் ஆதரவுடன் அடக்கம் செய்தேன். தற்போது உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம், குமரலிங்கம், தளி, அமராவதி நகர், தாராபுரம், குண்டடம், கோவை மாவட்டம் கோமங்கலம்புதூர், ஆனைமலை ஆகிய பகுதிகளிலுள்ள காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதியில், ஆதரவற்ற சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்பு முறையாக காவல்துறை அனுமதியின் பேரில் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கான நிதி உதவியை நன்கொடையாளர்கள் கொடுத்துஉதவுகிறார்கள். எனது சேவையை பாராட்டி, 2016-ல் கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் ரூ.8 லட்சம் செலவில் 2 ஆம்னி அமரர் ஊர்திகளை வழங்கியுள்ளது. இதுதவிர உடுமலையை அடுத்த மானுப்பட்டி கிராமத்தில் கிருஷ்ணசாமி, அவரது மகன் அரவிந்த் ஆகியோரின் உதவியுடன் ஆதவற்றோர் இல்லம் நடத்தி வருகிறேன்.அங்கு தங்கியுள்ள 35 பேருக்கு 3 வேளையும் உணவு வழங்கி பராமரித்து வருகிறோம்.

மேலும், தினமும் 30 பேருக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில் இறந்தவர்களின் உறவினர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் மூலமாக, அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக சடலங்கள் தானமாக அளிக்க உதவியுள்ளேன்.

இதுவரை அரசு பள்ளிகளுக்கு டேபிள், நாற்காலி, பீரோ, மின் விசிறி என ரூ.63 லட்சம் மதிப்பிலான பொருட்கள்அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. வறுமை நிலையில் உள்ளபெண்களுக்கு தையல் மெஷின், துணிதேய்க்கும் பெட்டி என ஆண்டுதோறும் உதவி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளேன். கரோனா ஊரடங்கின்போது, 32 சடலங்களை அடக்கம் செய்துள்ளேன்.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் மற்றும் பல்வேறு அரசு துறைகள், தன்னார்வ அமைப்புகள் எனது சேவையை பாராட்டி கவுரவித்துள்ளன. என்னை போன்ற சமூக ஆர்வலர்களை தமிழக அரசு கவுரவிக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

44 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இணைப்பிதழ்கள்

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

5 hours ago

மேலும்