மதுரையில் விறுவிறுப்பாக நடக்கும் மூலிகைச்சாறு, வடை, கலவை சாத விற்பனை

By சுப.ஜனநாயகச் செல்வம்

மதுரை: மதுரையில் மூலிகைச்சாறு, மூலிகை வடை, மூலிகை அல்வா, மூலிகை சாதம் என விதவிதமாக தயாரித்து மக்களின் ஆரோக்கியம் காக்கும் வகையில் விற்பனை செய்து வருகிறார் சிம்மக்கல்லைச் சேர்ந்த ‘மூலிகை’ பாண்டி.

மதுரை சிம்மக்கல் தைக்கால் தெருவை சேர்ந்தவர் பாண்டிக்குமார் (45). இவர் எம்ஜிஆர் விளையாட்டரங்கம் முன் கடந்த 11 ஆண்டுகளாக பல்வேறு மூலிகைச்சாறுகள், மூலிகை அல்வா, மூலிகை வடை, மூலிகை சாதம் என விதவிதமாக தயாரித்து வாடிக்கையாளர்களின் ஆரோக்கியம் காத்து வருகிறார். மூலிகைகளின் அருமையை உணர்ந்தவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் தேடிச்சென்று ‘உணவே மருந்து’ என விரும்பி சாப்பிடுகின்றனர்.

இதுகுறித்து பாண்டிக்குமார் கூறியதாவது: எங்களுக்கு பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டம். எனது அப்பா முத்துராஜ் காலத்தில் மதுரைக்கு வந்தோம். நான் 3-ம் வகுப்பு வரை படித்தேன். பின்னர் மதுரை ஞாயிற்றுக்கிழமை சந்தையில் மூக்கன் என்பவரின் நாட்டு மருந்துக்கடையில் வேலை பார்த்தேன். அங்கு வரும் நாட்டு மருந்து வைத்தியர்களிடம் மூலிகைச் செடிகள் பற்றி அறிந்து கொண்டேன். கடந்த 11 ஆண்டு களுக்கு முன்பு தூதுவளை, முடக்கத்தான் மூலிகைச்சாறு தயாரித்து காய்கறி சந்தையில் விற்க தொடங்கினேன். பின்னர் எம்ஜிஆர் விளையாட்டரங்கம் முன்பும் விற்கத் தொடங்கினேன். அதற்குப்பின் மூலிகை வடை, மூலிகை கலவை சாதங்கள் தயாரித்து விற்பனை செய்தேன். வாடிக்கையாளர்கள் விரும்பி கேட்கும் மூலிகைகளில் உணவு வகைகளை தயாரித்து கொடுத்தேன்.

வடை

தற்போது தினமும் மூலிகைச்சாறு, வடை, அல்வா, சாதம் தயாரித்து விற்கிறேன். தோசை, முடக்கத்தான் சாப்பாடு, பாகற்காய், தூதுவளை, கோவக்காய், முருங்கை, மிளகு தக்காளி, ஆவாரம்பூ, துத்திப்பூ, கண்டங்கத்திரி, மொசுமொசுக்கை, வெந்தயக்களி, ஆனை நெருஞ்சி தண்ணீர், மூக்கரட்டை, சர்க்கரைக்கொல்லி, விடத்தலை கீரை, லெச்சக்கட்டை கீரை, சாரணைக்கீரை என பல்வேறு வகை கீரை சூப்களையும் விற்பனை செய்து வருகிறேன். இதிலேயே வடையும், சாதமும் தயாரித்து விற்பனை செய்கிறேன். தினமும் சுழற்சி முறையில் குறைந்தது 4 வகை சூப்கள், 12 வகை சாதம், 4 வகை தோசை தயாரிக்கிறோம்.

கலவை சாதம்

மேலும், ஆவாரம் பூ சட்னி, மொசு மொசுக்கை சட்னி என பலவகை சட்னியும் தயாரித்து தருகிறோம். மூலிகைப் பொடிகள், மூலிகைக் கீரைகள், கரிசலாங்கண்ணி, செம்பருத்தி, சித்தகத்திப்பூ, பிரண்டை, கருவேப்பிலை, கற்றாழை வகைகள் விற்பனை செய்கிறோம். மூலிகை தோசை ரூ.25, மூலிகை சாதம் ரூ.40, மூலிகை சூப் ரூ.15-க்கு விற்கிறோம். வாடிக்கையாளர்கள் விரும்பும் மூலிகைகளை தேடிப் பிடித்து வழங்கி வருகிறோம். இதற்காக மதுரையை சுற்றியுள்ள அழகர்கோவில், வல்லாளபட்டி, வாடிப்பட்டி, செக்கானூரணி, சோழவந்தான், வரிச்சியூர் பகுதிகளுக்கு சென்று மூலிகைகளை சேகரித்து வருகிறோம். எனக்கு உறுதுணையாக மனைவி பெத்தநாச்சி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

16 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

உலகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்