விழுப்புரம் 30 | தண்ணீருக்காக தவியாய் தவிக்கும் விழுப்புரம் நகர மக்கள்: பின்புலம் என்ன?

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம், கடந்த 30-ம் தேதி 30-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. கடந்த 29 ஆண்டுகளில், விழுப்புரம் மாவட்டத்தில் அரசால் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன? அவற்றின் தற்போதைய நிலை என்ன? இன்னும் என்னென்ன செயல்படுத்த வேண்டும்? மாவட்டத்தின் தற்போதைய சமூக, பொருளாதார வளர்ச்சி எவ்வாறு உள்ளது? என்பதை தொடர்ச்சியாக நமது சிறப்பு பகுதியில் வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று விழுப்புரம் நகரின் குடிநீர் சிக்கலை ஆராய்கிறோம்...

விழுப்புரம் நகராட்சி கடந்த 1919-ம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக தொடங்கப்பட்டு, 1953-ம் ஆண்டு 2-ம் நிலை நகராட்சியாகவும், 1973-ம் ஆண்டு முதல்நிலை நகராட்சியாகவும்,1988-ம் ஆண்டு தேர்வு நிலை நகராட்சியாகவும் படிப்படியாக தரம் உயர்த்தப்பட்டு, செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த மார்ச் 30-ம் தேதி நடைபெற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கையில், நூற்றாண்டு கண்ட விழுப்புரம் நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்துவதாக அறிவித்தார். சிறப்பு நிலை நகராட்சியாக உயர்ந்தாலும் அடிப்படை வசதிகளில், குறிப்பாக குடிநீர் சிக்கலில் சிக்கித் தவித்து வருகிறது விழுப்புரம் நகரம்.

விழுப்புரம் நகராட்சி பகுதியில் தென்பெண்ணையாறு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விழுப்புரம் நகரவாசிகள் ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு 80 லிட்டர் வீதம், 10.30 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்குவதாக இந்நகராட்சி அறிவித்துள்ளது.

மொத்தம் உள்ள 42 வார்டுகளில் சுமார் 36,690 வீடுகள் உள்ளன. 2023-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1,73,902 பேர் வசித்து வருகின்றனர். இதில் குடிநீர் இணைப்பை 11,630 வீடுகள் பெற்றுள்ளன. அதாவது, 52 ஆயிரம் பேருக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்ய வேண்டியுள்ளது.

இவர்களுக்கு நகராட்சி அறிவித்தபடி, குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதா என நகராட்சிவாசிகள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களிடம் கேட்ட போது, அவர்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கின்றனர். தண்ணீருக்காக தவியாய் தவிக்கும் விழுப்புரம் நகர மக்கள் தொலைநோக்கு திட்டம் இல்லாததால் தொடரும் அவதிகடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர், நகராட்சியுடன் பல பகுதிகள் புதிதாக இணைக்கப்பட்டன.

புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் தென்பெண்ணையாற்று குடிநீர் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனாலும், இன்று வரையிலும் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் குடிநீருக்காக காத்து கிடக்கும் எளிய மக்கள்.விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் குடிநீருக்காக வரிசையில் வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கேன்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

சமீபகாலமாக தென்பெண்ணையாற்றில் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால், ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அனைத்து தரப்பு மக்களும் குடிநீருக்காக தவித்து வருகின்றனர். நாள்தோறும் முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை. இதனை கண்காணிக்க வேண்டிய அலுவலர்களும் கண்காணிப்பதில்லை.

விழுப்புரம் மாவட்டம் பெற்றதும்.. பெறத்தவறியதும்..30-ம் ஆண்டில்..விழுப்புரம் புறநகர் பகுதிகளான தந்தை பெரியார் நகர், மஞ்சு நகர், காந்திநகர் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விநியோகிக்கப்படும் நீர் உவர்ப்பாகவும், சுண்ணாம்பு படிவங்கள் உள்ளதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

விழுப்புரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடந்த 2014-ம் ஆண்டு கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டு கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் 2019-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

விழுப்புரம் நகரில் கோடை காலங்களில் மக்கள் காலிக்குடங்களுடன் அலைவதை ஒவ்வொரு ஆண்டிலும் பார்க்க முடிகிறது. பொதுக்குழாய்களில் எளிய மக்கள் நீண்ட வரிசையில் நின்று. தங்களுக்கு தேவையான தண்ணீரைப் பிடித்து செல்கின்றனர். நகராட்சி கூட்டத்தில் கட்சி பேதமில்லாமல் அனைத்து உறுப்பினர்களும் தங்களின் வார்டுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் குடிநீருக்காக காத்து கிடக்கும் எளிய மக்கள்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குடிநீர் பிரச்சினைக்காகவே அடிக்கடி வெளிநடப்பும் செய்கின்றனர். ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நகராட்சிக்கான வரி வசூல் மட்டும் தங்கு தடையின்றி நடைபெறுகிறது.

இதற்கிடையே, தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் 5 ஆயிரம் லிட்டர் தண்ணீரை ரூ.1,200க்கும், 2,500 லிட்டர் தண்ணீரை ரூ.600க்கும் விற்பனை செய்வதாக அறிவித்து, அதற்காக 3 லாரிகளை தற்போது களத்தில் இறக்கியுள்ளது. நீரேற்று நிலையத்தில் இருந்து தண்ணீரை லாரிகளில் ஏற்றி விற்று வருகிறது.

வசதி படைத்தவர்கள், நகராட்சிக்கு போன் செய்து, தண்ணீர் லாரியை வரவழைத்து, தங்களது சின்டெக்ஸ் டேங்கில் நிரப்பிக் கொள்கின்றனர். குடியிருப்புகளாக உள்ள இடங்களில் இவ்வாறு தண்ணீர் நிரப்பப்பட்டு, அதற்கான தனிக்கட்டணம் வாடகையோடு சேர்த்து உரிமையாளர்களால் வசூலிக்கப்படுகிறது. இந்த புதிய சுமை தங்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்துவதாக நகர மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

வெள்ள காலங்களில் தென்பெண்ணை யாற்றில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி, வீணாக கடலில் கலக்கிறது. ஆனால், அதையொட்டி இருக்கும் விழுப்புரம் நகரில் குடிநீர் சிக்கல் தீராத பிரச்சினையாக உருவெடுத்து நிற்கிறது. விழுப்புரம் நகரின் குடிநீர் சிக்கலைத் தீர்க்க, தெளிவான ஒரு தொலை நோக்கு திட்டம் தேவை. இதே போல் விழுப்புரம் மாவட்டத்தின் மீதான அக்கறை கொண்ட நமது பார்வையுடன், பல்வேறு தரப்பினரின் கருத்துகளும் சேர்ந்து, ‘விழுப்புரம் மாவட்டம் பெற்றதும்.. பெறத் தவறியதும்..’ அடுத்தடுத்த நாட்களில் தொடரும்.

முந்தைய அத்தியாயம் > விழுப்புரம் 30 | எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

8 hours ago

சினிமா

1 hour ago

இலக்கியம்

8 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்