அசாமில் குழந்தை திருமணத்துக்கு எதிராக மாபெரும் போர் - ஒரு வாரத்தில் 4,135 வழக்குகள் பதிவு; 2,763 பேர் கைது

By செய்திப்பிரிவு

குவாஹாட்டி: அசாமில் குழந்தை திருமணத்துக்கு எதிராக மாபெரும் போர் தொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு வாரத்தில் மட்டும் 4,135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2,763 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் சமுதாய பிரச்சினைகளில் குழந்தை திருமணமும் ஒன்றாகும். குறிப்பாக வடகிழக்கு மாநிலமான அசாமில் சிறுமிகள் பருவம் அடைந்த உடன் திருமணம் செய்து வைக்கும் கொடுமை நீண்ட காலமாக அரங்கேறி வருகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக கடந்த ஜனவரி 23-ம் தேதி நடைபெற்ற அசாம் அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது குழந்தை திருமணத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கடந்த 2-ம் தேதி வெளியிட்டார்.

அவர் கூறும்போது, “அசாமில் வரும் 2026-ம் ஆண்டுக்குள் குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிக்க திட்டமிட்டுள்ளோம். 14 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளை திருமணம் செய்தோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். 14 வயது முதல் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளை திருமணம் செய்தோர் மீது குழந்தை திருமண
தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் அனுதாபத்துக்கு இடமில்லை’’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற குழந்தை திருமணங்கள் குறித்த விவரங்களை அரசு துறைகளிடம் இருந்து பெற்ற அசாம் போலீஸார் அதிதீவிர நடவடிக்கைகளில் இறங்கினர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குழந்தை திருமணம் தொடர்பாக 4,135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 2,763 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

டிஜிபி விளக்கம்: இதுகுறித்து அசாம் போலீஸ் டிஜிபி ஞானேந்திர பிரதாப் சிங் கூறியதாவது: குழந்தை திருமணம் என்பது சமூக தீமையாகும். கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் அசாமில் 6.2 லட்சம் சிறுமிகள் கருவுற்று உள்ளனர். ஒரு குழந்தையே, குழந்தையை பெற்றெடுப்பதால் பேறுகால உயிரிழப்பு அதிகரிக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பல்வேறு நோய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன.

இந்த சமூக தீமைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உத்தரவிட்டுள் ளார். இதன்படி குழந்தை திருமணத் துக்கு எதிராக மாபெரும் போரை தொடுத்திருக்கிறோம். இதுவரை 2,763 பேரை கைது செய்துள்ளோம். இளைஞர்களை கைது செய்வதால் அவர்களின் மனைவிகள் (சிறுமிகள்) எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க ஆட்சியர்கள், சமூக நீதித்துறைக்கு உத்தரவிடப்பட் டிருக்கிறது. முதல்வரின் உத்தரவுபடி வரும் 2026-ம் ஆண்டு வரை குழந்தை திருமணத்துக்கு எதிரான போர் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அசாமின் துப்ரி மாவட்ட போலீஸ் எஸ்.பி. அபர்ணா நடராஜன் கூறும்போது, “குழந்தை திருமணம் தொடர்பாக துப்ரி மாவட்டத்தில் மட்டும் 182 பேரை கைது செய்துள்ளோம். போலீஸாரின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். எந்தெந்த குடும்பங்களில் குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளன என்பது குறித்து கிராம மக்களே தகவல் அளிக்கின்றனர். இவை தொடர்பாக விசாரித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.

அசாம் முஸ்லிம் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் கரீம் சர்க்கார் கூறும்போது, “வறுமை, கல்வியறிவின்மை உள்ளிட்டவை குழந்தை திருமணத்துக்கு முக்கிய காரணம். பெரும்பாலான குடும்பங்களில் பெண் குழந்தைகளை சுமையாகப் பார்க்கின்றனர். இதன் காரணமாக பருவம் எய்தியவுடன் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மக்களிடையே தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம்" என்று தெரிவித்தார்.

சங்கத்தின் பொதுச்செயலாளர் மினாதுல் இஸ்லாம் கூறும்போது, “போலீஸார், அரசு அதிகாரிகளின் உதவியோடு கடந்த 2017 முதல் இதுவரை 3,631 குழந்தை திருமணங்
களை தடுத்து நிறுத்தியுள்ளோம். பலரை சிறைக்கு அனுப்பியுள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

தற்காலிக சிறைகள்: அசாம் போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: அசாம் பழங்குடி மக்களிடம் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழும் பழக்கம் நீடிக்கிறது. அந்த வகையில் குக்கிராமங்களில் மைனர் ஆணும், பெண்ணும் ஒன்றாக வாழ்கின்றனர். இதுதொடர்பாக பழங்குடி கிராமங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி குழந்தை திருமணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறோம். முஸ்லிம் சமுதாயத்திலும் குழந்தை திருமணம் அதிகமாக உள்ளது. அந்த சமுதாய இளைஞர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஒரே நேரத்தில் ஏராளமானோர் கைது செய்யப்படுவதால் சிறைகளில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. எனவே பல்வேறு பகுதிகளில் தற்காலிக சிறைகளை அமைத்து வருகிறோம். 14 வயதுக்கு கீழான சிறுமிகள் மற்றும் 14 வயது முதல் 18 வயது வரையிலான சிறுமிகளின் திருமணம் குறித்து மாவட்டவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த கணக்கெடுப்பு முடிந்தவுடன் மேலும் பலர் கைது செய்யப்படுவர்.

பல்வேறு கிராமங்களில் குழந்தை திருமணத்தை தடுக்க மக்கள் முழுஒத்துழைப்பு அளிக்கின்றனர். அவர்களே புகார் அளிக்கின்றனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது. அதன்பிறகே அவர்கள் கைது செய்யப்படுகின்றனர். குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்க அனைவரும் சபதம் ஏற்க வேண்டும். அதற்கானமுதல்முயற்சியை அசாம் அரசு எடுத்திருக்கிறது. இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

32 mins ago

இந்தியா

2 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

2 hours ago

உலகம்

3 hours ago

மேலும்